”என் மாமா மீது நடவடிக்கை எடுங்க!” - கோபத்தில் கொந்தளிக்கும் உதய்பூர் கொலையாளியின் மருமகன்
ஜெய்பூர்: ராஜஸ்தானில் பாஜகவை சேர்ந்த நுபுர் சர்மாவுக்கு ஆதரவாக பதிவிட்டதாக கூறி தையல்காரரின் தலையை துண்டித்து படுகொலை செய்தவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவரது மருமகன் வலியுறுத்தி இருக்கிறார்.
பாஜக முன்னாள் செய்தித் தொடர்பாளர் நுபுர் சர்மா, அண்மையில் தொலைக்காட்சி ஒன்றில் நடைபெற்ற விவாத நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்.
அதில் பேசிய நுபுர் ஷர்மா இறைத்தூதரான நபிகள் நாயகம் குறித்து அவதூறாக பேசினார். அதேபோல் அக்கட்சியின் நவீன் குமார் ஜிண்டாலும் முஹம்மது நபி குறித்து ட்விட்டரில் அவதூறாக கருத்திட்டார்.

தலைமறைவான நுபுர்
நுபுர் ஷர்மாவின் இந்த கருத்து நாடு முழுவதும் பெரும் சர்ச்சைக்கு உள்ளானது. மும்பையில் நுபுர் ஷர்மா மீது 2 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இது தொடர்பாக அவருக்கு சம்மன் அனுப்பி விசாரணை நடத்தவும் மும்பை போலீஸ் திட்டமிட்டு இருக்கிறது. இதேபோல் டெல்லி, கொல்கத்தா போலீசும் நுபுர் சர்மா மீது வழக்குப்பதிவு செய்து இருக்கிறது. ஆனால், அவர் தலைமறைவாகி இருப்பதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

உலக நாடுகள்
இந்த நிலையில் நுபுர் ஷர்மாவின் சர்ச்சைக்குறிய பேச்சு அரபு நாடுகளிலும் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி கொந்தளிப்பை ஏற்படுத்தியது. சவூதி அரேபியா, ஈரான் அமீரகம், குவைத், கத்தார், ஓமன் உள்ளிட்ட 15க்கும் மேற்பட்ட நாடுகள், இஸ்லாமிய ஒத்துழைப்பு கூட்டமைப்பு ஆகிய இந்தியாவில் நடக்கும் இஸ்லாமியர்களுக்கு எதிரான வன்முறைகள் குறித்தும், பாஜக பிரமுகரின் பேச்சுக்கும் கடும் கண்டனங்களை தெரிவித்து இருந்தனர். அரபு நாட்டு மக்கள் ட்விட்டரில் #Boycott India என்ற ஹேஷ்டேக்கை டிரெண்ட் செய்து வந்தது குறிப்பிடத்தக்கது.

ராஜஸ்தான் டெய்லர்
இந்த நிலையில் ராஜஸ்தான் மாநிலம் உதய்ப்பூரில் உள்ள மால்டாஸ் பகுதியில் வசித்து வரும் கண்ணையா லால் என்ற டெய்லர் நுபுஷ் ஷர்மாவுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்து இருக்கிறார். இதனால் அவரை முஹம்மது ரியாஸ் அக்தர், முஹம்மது கவுஸ் ஆகியோர் தலையை துண்டித்து கொலை செய்ததுடன், வீடியோ பேசியும் வெளியிட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த கொலையை தொடர்ந்து ராஜஸ்தான் மாநிலம் முழுவதும் 144 தடை பிறப்பிக்கப்பட்டு உள்ளது.

கொலையாளிகளின் மருமகன்
கொலையாளிகள் இருவரும் ராஜ்சமந்த் மாவட்டத்தின் சர்புஜா காவல் நிலையத்தில் அடைக்கப்பட்டு இருக்கின்றனர். இதுகுறித்து ரியாஸின் மருமகன் செய்தியாளர்களிடம் அளித்த பேட்டியில், "எனது மாமா செய்த செயலை கண்டிக்கிறேன். அமைதியை கெடுக்க அவர் முயற்சி செய்து இருக்கிறார். சட்டப்படி அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்." என்று தெரிவித்தார்.


Click it and Unblock the Notifications
