நெருக்கடி தரும் பாஜக, சமாஜ்வாடி.. நடுவில் சிக்கிய மாயாவதி... பிழைக்குமா பகுஜன் சமாஜ்!
லக்னோ: ஒரு காலத்தில் தான் கோலோச்சி வந்த உத்தரப் பிரதேச மாநிலத்தில் இன்று அரசியல் அனாதை அளவுக்கு மிகவும் மோசமாகியுள்ளது மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சியின் கதி. காரணம், ஒருபக்கம் சமாஜ்வாடிக் கட்சியும், மறுபக்கம் பாஜகவும் விஸ்வரூபம் எடுத்து பகுஜன் சமாஜ் கட்சின் ஆதரவை அரித்து எடுத்து வருகின்றன.
இப்படியே நிலைமை போனால் இருக்கும் கொஞ்ச நஞ்சம் ஆதரவையும் பகுஜன் சமாஜ் கட்சி இழக்க நேரிடலாம் என்று அரசியல் வல்லுனர்கள் எச்சரிக்கிறார்கள்.
ஆனால் உடனடியாக பாயாமல், அவசரப்படாமல் நிதானமாக காய் நகர்த்த திட்டமிட்டு அமைதி காத்து வருகிறார் மாயாவதி. இதனால்தான் சட்டசபை இடைத் தேர்தலில் போட்டியிடுவதில்லை என்ற முடிவுக்கும் அவர் வந்தார்.

இந்து - முஸ்லீம் மோதலால் மாயாவுக்கு சிக்கல்
முசாபர்நகர் கலவரம் மாயாவதிக்குத்தான் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. காரணம், அவர் பெரிதும் நம்பியிருந்தது தலித் -முஸ்லீம் கூட்டணியைத்தான். ஆனால் அவருக்கு உதவவில்லை.

முஸ்லீம்களுக்குச் சீட் கொடுத்ததால் சிக்கல்
மேலும் லோக்சபா தேர்தலில் முஸ்லீம்களுக்கு மற்ற கட்சிகளை விட அதிக அளவில் சீட் கொடுத்தவர் மாயாவதிதான். மேலும் மதக் கலவரத்தால் பாதிக்கப்பட்ட மேற்கு உ.பியில் முஸ்லீம்களுக்கு கட்சியின் துணைத் தலைவர் பதவியையும் கொடுத்தார். ஆனால் அது அவருக்கு எதிராக திரும்பி விட்டது.

தலித்களே திசை திரும்பினர்
குறிப்பாக மாயாவதி எதிர்பாராத வகையில், தலித்களில் ஒரு பிரிவினரே கூட பகுஜன் சமாஜ் கட்சிக்கு ஆதரவு தெரிவிக்கவில்லை.

தோல்விக்குப் பின் நிலைமை மோசம்
லோக்சபா தேர்தலுக்குப் பின்னர் மாயாவதி நிலைமை மேலும் மோசமாகி விட்டது. தலித்களை பாஜக கிட்டத்தட்ட தட்டிக் கொண்டு போய் விட்டது.

சமாஜ்வாடியால் பாஜகவுக்கு லாபம்
மறுபக்கம், மதக் கலவரங்களுக்குக் காரணம் தலித் மக்களே என்று கருதி அவர்களை அடக்க ஆரம்பித்துள்ளது சமாஜ்வாடிக் கட்சி. இதனால் அவர்கள் பாஜக பக்கம் முழுமையாக சாயும் நிலை ஏற்பட்டுள்ளது.

சஹரன்பூரில் நடந்தது...
சஹரன்பூரில் சீக்கியர்களுக்கும், முஸ்லீம்களுக்கும் இடையிலான கலவரத்தின்போதும் கூட கைது செய்யப்பட்ட முஸ்லீம் அல்லோதாரில் பெரும்பாலானவர்கள் தலித்களே.

தலித் வாக்குகளை இழக்கிறார் மாயாவதி
இதனால் மாயாவதிக்குத்தான் சிக்கல் அதிகமாகியுள்ளது. அவர் முஸ்லீம்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும் அதே நேரத்தில் தலித்களை அவர் கைவிட்டுள்ளதாக அவர்கள் உணர்கிறார்கள். இதனால் தலித் வாக்கு வங்கி ஆட்டம் காண ஆரம்பித்துள்ளது.

தோல்வியாளர்
மாயாவதியின் இன்னொரு பெரிய பின்னடைவு என்னவென்றால் அவர் ஒரு தொடர் தோல்வியாளர் என்பது. 2009ம் ஆண்டு தனது பிரதமராகும் கனவி்ல் அவர் தோற்றார். 2012ல் முதல்வராக பதவியை இழந்தார். இப்போது ஒரு தொகுதியில் கூட ஜெயிக்க முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார்.

விஸ்வரூபம் எடுத்த பாஜக
ஆனால் பெரிய அளவில் தலைவர்கள் இல்லாத, பெரிய அளவில் கட்சி அமைப்பு இல்லாத பாஜக உ.பியில் விஸ்வரூபம் எடுத்து பெரிய வெற்றியை ஈட்டியுள்ளது. டெல்லியில் ஆட்சியைப் பிடிக்க பாஜகவுக்கு உ.பி.தான் கை கொடுத்துள்ளது.

சமாளித்து நிற்கும் சமாஜ்வாடி
மறுபக்கம் சமாஜ்வாடி கட்சிக்கு மதக் கலவரங்கள் பின்னடைவை ஏற்படுத்தினாலும் கூட சட்டசபையில் அது பெரும்பான்மையுடன் உள்ளது. மாநிலத்திலும் அது சற்று செல்வாக்குடனேயே உள்ளது. காவல்துறை, நிர்வாகத்தை அது சரிவர கையில் வைத்துள்ளது.

இருபுற நெருக்கடியில் திணரும் மாயாவதி
ஆனால் இக்கட்சிகளின் இருபுற நெருக்கடிக்கு மத்தியில் பகுஜன் சமாஜ் கட்சிதான் திணறிக் கொண்டிருக்கிறது. ஸ்திரமாக நிற்க முடியாமல் தவிக்கிறது. இரு கட்சிகளிடமும் பறி போய்க் கொண்டிருக்கும் தனது வாக்கு வங்கி, ஆதரவாளர்கள் என எதையும் தக்க வைக்க முடியாமல் தவித்து வருகிறார் மாயாவதி.

சட்டசபைத் தேர்தலில் போட்டியில்லை
இப்போதைய நிலையில் இக்கட்சிகளுடன் மோதினால் வெற்றி எளிதல்ல என்பதால்தான் சட்டசபை இடைத் தேர்தலில் கூட போட்டியிடாமல் ஒதுங்கும் முடிவை அவர் எடுத்துள்ளார். காரணம், இடைத் தேர்தலில் போட்டியிட்டு மீண்டும் பெரும் தோல்வியைத் தழுவினால் சுத்தமாக பகுஜன் சமாஜ் கட்சி அழிந்து போய் விடும் என்பது அவரது கணிப்பு.

நம்பிக்கை பலிக்குமா..
மதவாத, பிரிவினைவாத, வகுப்பு வாத அரசியலே பாஜகவையும், சமாஜ்வாடியையும் காலி செய்யும் என்று அழுத்தமாக நம்புகிறார் மாயாவதி. எனவேதான் தனது சரியான வாய்ப்புக்காக அவர் காத்திருக்க முடிவு செய்துள்ளதாக கருதப்படுகிறது. இரு கட்சிகளுக்கும் கெட்ட பெயர் ஏற்படும்போது உள்ளே புகுந்து லாபம் பார்க்கும் முடிவிலும் மாயாவதி இருப்பதாகவும் கருதப்படுகிறது.












Click it and Unblock the Notifications