5 ரூபாய்க்கு அன்லிமிடெட் சாப்பாடு; 203 இடங்களில் ‘அண்ணா கேன்டீன்’: அலைமோதும் கூட்டம்
ஆந்திரா: 5 ரூபாய்க்கு சாப்பாடு வழங்கும் 'அண்ணா கேன்டீன்' திட்டத்தை மீண்டும் கொண்டுவந்ததன் மூலம் தேர்தலின்போது அளித்த வாக்குறுதியை ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு நிறைவேற்றியுள்ளார்.
கடந்த 2014 ஆம் ஆண்டு ஆந்திர முதல்வராகப் பதவிக்கு வந்த சந்திரபாபு நாயுடு அவரது மாநிலத்தில் அண்ணா கேன்டீன் என்ற பெயரில் மலிவு விலையில் உணவகங்களை தொடங்கினார். அதன்பின்னர் 2019இல் ஆட்சிக்கு வந்த ஜெகன்மோகன் ரெட்டி தனது ஆட்சிக்காலமான 2024 வரையான இந்தத் திட்டத்தை முடக்கி வைத்திருந்தார்.

ஆகவே ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி தங்களின் நல்ல திட்டத்தை முடக்கி வைத்துள்ளதாகவும் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் இந்த உணவகங்களை தெலுங்கு தேசம் கட்சி திறக்கும் என்று இந்த சட்டமன்ற தேர்தலின்போது வாக்குறுதி அளித்திருந்தார் சந்திரபாபு நாயுடு. அவர் கடந்த ஜூன் மாதம் மீண்டும் முதல்வராகப் பொறுப்பேற்றுள்ள நிலையில், இப்போது பழைய மாதிரி அண்ணா கேன்டீன்களை திறந்துள்ளார் நாயுடு.
இந்த உணவகத்தில் சாப்பாட்டின் விலை 5 ரூபாய்க்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மொத்தம் மாநிலம் முழுவதும் 203 உணவகங்களை தொடங்க அரசு முடிவு செய்துள்ளது. இது குறித்து சந்திரபாபு நாயுடு குறிப்பிடுகையில், "ஏழைகளின் வயிற்றை நிரப்புவதை விட நமக்கு என்ன திருப்தி இருக்கிறது?"என்று பேசியுள்ளார். குடிவாடாவில் அமைந்துள்ள அண்ணா கேன்டீனில் முதல்வர் சந்திரபாபு, இட்லி, பூரி, வடை, பொங்கல் என விதவிதமாக தயாராகி இருந்த உணவு வகைகளை அவர் சுவைத்துப் பார்த்தார்.
இந்த கேன்டீனை தொடங்கி வைத்துப் பேசிய முதல்வர் சந்திரபாபு நாயுடு, "ஏழைகள் பட்டினி கிடக்கக் கூடாது என்பதே இந்த கேன்டீன்களின் முக்கிய நோக்கமாகும். அண்ணா கேன்டீன்களின் உணவுக்கு 5 ரூபாய் என்பது ஏழை எளியோர் மற்றும் தினக்கூலிகள், தொழிலாளர்களுக்குப் பெரிதும் பயனளிக்கும்" என்று நம்பிக்கை தெரிவித்தார்.
நாயுடு மற்றும் அவரது மனைவி நாரா புவனேஸ்வரி ஆகியோர் குடிவாடாவில் அண்ணா கேன்டீனை திறந்துவைத்த பின்னர் பொதுமக்களுடன் சேர்ந்து இருவரும் உணவு அருந்தினர். இந்த கேன்டீன்களை நிரந்தரமாகவும், தடையின்றியும் இயக்க செயல் திட்டம் வகுக்கப்படும் என்று நாயுடு அறிவித்தார். 5 ரூபாய்க்கு வழங்கப்படும் சாப்பாட்டில் பொரியல், அப்பளம், சாம்பார், தயிர் எனப் பல வகை உணவுகள் வழங்கப்படுகின்றன.

ஆகவே கூட்டம் அலைமோதுகிறது. அதேபோல உணவு வழங்கப்படும் பாத்திர பட்டங்கள் நவீன ஹாட்பாக்ஸ் டைப்பில் சுத்தமாகவும் சுகாதாரமாகவும் உள்ளன. இந்த கேன்டீகளின் ஒருநாள் பராமரிப்பு செலவு ரூ.53 லட்சம் என திட்டமிடப்பட்டுள்ளது. தெலுங்கு தேசம் கட்சியின் நிறுவனர் மறைந்த என்.டி.ராமராவ் சமூக சேவகி டொக்கா சீதம்மா ஆகியோரின் ஆதரவாளர்களிடம் இருந்து நன்கொடைகளைப் பெறப்பட்டு வருகின்றன.
தொடர்ந்து பேசிய நாயுடு,"நான் பல்வேறு திட்டங்களை அறிமுகம் செய்துள்ளேன். ஆனால் அண்ணா கேன்டீன் போன்ற ஒரு சிறந்த திட்டத்தை, குறிப்பாக மறுபடியும் சுதந்திர தினத்தன்று துவக்கி வைப்பதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்" என நெகிழ்ந்து பேசியுள்ளார். என்.டி.ராமராவ் முதலமைச்சராக இருந்தபோது முதன்முதலாக குடிவாடாவில் அண்ணா கேன்டீனை துவக்கிவைத்தார். மறைந்த என்டிஆர் பிறந்த ஊர் இதுதான். ஆகவே யாருமே பசியுடன் இருக்கக்கூடாது என்பதில் தெலுங்கு தேசம் தலைமையிலான என்.டி.ஏ அரசு உறுதியேற்று இருப்பதாகப் பேசிய நாயுடு, அதற்காகவே கேன்டீனை மீண்டும் தொடங்க குடிவாடாவுக்கு நேரில் வந்தேன் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
ஆந்திராவில் பசியுடன் வந்தவருக்கு உணவு வழங்கி சேவை செய்தவர் தொக்கா சீதம்மா. அவரின் மகத்தான சேவையை நினைவுகூர்ந்த முதல்வர், தொக்கா சீதம்மா மக்களின் இதயங்களில் நிரந்தரமாக இருப்பதற்கு இதுதான் காரணம் என்றார். முதற்கட்டமாக 100 அண்ணா கேன்டீன்கள் தொடங்கப்பட்டுள்ளன. வரும் செப்டம்பர் இறுதிக்குள் பழங்குடியினர் பகுதிகள் உட்பட மாநிலம் முழுவதும் இதுபோன்ற 203 கேன்டீன்கள் திறக்கப்படும் என்றும் நாயுடு உறுதியளித்துள்ளார்.
ஒவ்வொரு கேன்டீனிலும் சுமார் 350 பேர் வரை உணவு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மக்களின் தேவைக்கு ஏற்ப பிறகு எண்ணிக்கை அதிகரிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் நாயுடு தெரிவித்துள்ளார். "இந்த கேன்டீன்களை பராமரிக்க வேண்டி ஆண்டுக்கு ரூ.200 கோடி செலவிட உள்ளோம்" என்று தெரிவித்துள்ள நாயுடு, முந்தைய அரசு ஏன் இவற்றை மூடியது என்று கேள்வி எழுப்பி இருக்கிறார். அண்ணா கேன்டீன்களுக்கு நன்கொடை அளிக்க முன்வருவோருக்கு, அதற்கான வங்கிக் கணக்கு எண்ணை அரசு அறிவித்துள்ளது. இந்த கேன்டீனில் வழங்கப்படும் உணவு குறித்துப் பேசிய ஆட்டோ ஓட்டுநர் ஒருவர், "அன் லிமிட்டெட் சாப்பாடு 5 ரூபாய்க்கு தருகிறார்கள். சாப்பாட்டுடன் தயிர், பொரியல், சாம்பார், கூட்டு தருகிறார்கள். என்னைப் போன்ற ஆட்டோ ஓட்டுநருக்கு இந்த விலையில் சாப்பாடு கிடைப்பது பெரிய உதவியாக உள்ளது. இன்று 70 ரூபாய் இருந்தால்தான் மதிய உணவு சாப்பிட முடியும். நான் ஆட்டோ ஓட்டி பிழைப்பவன். மதிய சாப்பாட்டிற்கு 70 ரூபாய் செலவு செய்ய முடியுமா?" என்கிறார்.












Click it and Unblock the Notifications