உ.பி தேர்தல் வெற்றி.. ராஜ்யசபாவில் இனி பாஜக தர்பார்தான்! ஜனாதிபதி தேர்தலிலும் கை ஓங்கியது
இதுவரை காங்கிரஸ் கூட்டணியினர் முட்டுக்கட்டை போட்டு வந்த பல சட்டங்களை எளிதாக ராஜ்யசபாவில் பாஜக நிறைவேற்ற முடியும்.
டெல்லி: உத்தர பிரதேசம் உட்பட, ஐந்து மாநில சட்டசபை தேர்தல் முடிவுகளை, மற்றக் கட்சிகளை விட, பா.ஜ.க பெரிதும் எதிர்பார்த்து காத்திருந்தது.
உத்தர பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில், ஆட்சி அமைப்பதுடன், கூடுதல் தொகுதிகளில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில், மத்தியில் ஆளும் பாஜக இருந்தது.
ஐந்து மாநில சட்டசபை தேர்தலில், பா.ஜ.க, பெரிதும் எதிர்பார்த்தது உத்தர பிரதேச மாநில வெற்றியைத் தான். அதற்கு காரணம், நாட்டிலேயே மிகவும் அதிக அளவாக, 403 எம்.எல்.ஏ.க்களை உடையது, உ.பி. சட்டசபை.

எம்.பி., எம்.எல்.ஏக்கள் பலம்
பாஜகவுக்கு தற்போது, 282 லோக்சபா எம்.பி.க்களும், நாடு முழுவதும், 1,126 எம்.எல்.ஏ.க்களும் உள்ளனர். ஜனாதிபதி தேர்தலில், எம்.பி.க்களும், எம்.எல்.ஏ.க் களும் ஓட்டளித்து, ஜனாதிபதியை தேர்ந்தெடுக்க உள்ளனர். ஒவ்வொரு, எம்.எல்.ஏ.வுக்கும், அந்தந்த மாநில மக்கள் தொகையின் அடிப்படையில் குறிப்பிட்ட ஓட்டு மதிப்பு அளிக்கப்படுகிறது.

மக்கள் தொகை முக்கியம்
வரும், 2026ம் ஆண்டு வரை, கடந்த 1971ம் ஆண்டு மக்கள் தொகையே, ஜனாதிபதி தேர்தலுக்கு அடிப்படையாக எடுத்துக் கொள்ளப்படும் என்ற ஷரத்துடன் சட்ட திருத்தம் அமலில் உள்ளதால், அதன் அடிப்படையில் பார்த்தால், ஜனாதிபதியை தேர்ந்தெடுக்க தற்போது, 10.98 லட்சம் ஓட்டுகள் உள்ளன. இதில், 5.49 லட்சம் ஓட்டுகள் பெற்றால் வெற்றி பெற முடியும்

எம்.பியின் மதிப்பு
லோக்சபாவில், 543 எம்.பிக்களும், ராஜ்யசபாவில், மொத்தம் 233 எம்.பி.,க்களும் உள்ளனர். எனில், ஒரு, எம்.பி.யின் ஓட்டு மதிப்பு, 708 ஆகும். எம்.பி.க்களின் ஒட்டு மொத்த ஓட்டு மதிப்பு, 5,49,408 என, கணக்கிடப்பட்டுள்ளது. தற்போது நாடு முழுவதும், 4,120, எம்.எல்.ஏ., பதவியிடங்கள் உள்ளன. இவற்றின் மொத்த ஓட்டு மதிப்பு, 5,49,474 என்று கணக்கிடப் பட்டுள்ளது

உத்தரபிரதேசத்திற்கு முக்கியத்துவம்
தற்போது தேர்தல் நடந்துள்ள, 8.3 கோடி மக்கள்தொகை உடைய உத்தர பிரதேசத்தில், 403 எம்.எல்.ஏ. பதவியிடங்கள் உள்ளன. ஒரு எம்.எல்.ஏ.வின் ஓட்டு மதிப்பு, 208. இதுதான் நாட்டிலேயே மிகவும் அதிகம். மக்கள் தொகை அடிப்படையில், பார்த்தால் மிசோரம், அருணாச்சல பிரதேச, எம்.எல்.ஏக்களின் ஓட்டு மதிப்பு, வெறும் எட்டு தான் என்பது கவனிக்கத்தக்கது. எனவேதான் உத்தர பிரதேசம் முக்கியத்துவம் பெறுகிறது.
தற்போதைய நிலையில், ஜனாதிபதி தேர்தலில், தன் வேட்பாளர் வெற்றிக்கு, பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு, மேலும், 75 ஆயிரம் ஓட்டுகள் தேவை.

ராஜ்யசபாவில் தர்பார்
இதேபோல, ராஜ்யசபாவில் பாஜகவுக்கு 56 உறுப்பினர்கள் உள்ளனர். காங்கிரசுக்கு 59 உறுப்பினர்கள் உள்ளனர். ராஜ்யசபாவுக்கு உ.பியிலிருந்து பாஜகவால் 3 உறுப்பினர்களைத்தான் அனுப்ப முடிந்தது. அதற்கு காரணம் அம்மாநிலத்தில் பாஜகவுக்கு போதிய எம்.எல்.ஏக்கள் பலம் இல்லாமல் இருந்ததுதான். உ.பி தேர்தல் வெற்றி மூலம், மேலும் 10 ராஜ்யசபா எம்.பிக்களை அம்மாநிலத்திலிருந்து பாஜக அனுப்ப முடியும். எனவே இதுவரை காங்கிரஸ் கூட்டணியினர் முட்டுக்கட்டை போட்டு வந்த பல சட்டங்களை எளிதாக ராஜ்யசபாவில் பாஜக நிறைவேற்ற முடியும்.












Click it and Unblock the Notifications