உ.பி.யில் விஷச்சாராயம் குடித்து 27 பேர் பலி: 100 பேர் மருத்துவமனையில் அனுமதி
லக்னோ: உத்தர பிரதேசத்தில் கள்ளச்சாராயம் குடித்த 27 பேர் பலியாகியுள்ளனர். மேலும் 100 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
உத்தர பிரதேச மாநிலம் லக்னோ மாவட்டத்தில் உள்ள கர்தா மற்றும் மலிஹாபாத் கிராமங்கள், உன்னாவ் மாவட்டத்தில் உள்ள தலசாரி கிராமத்தில் கூலித் தொழிலாளர்கள் கள்ளச்சாராயம் குடித்தனர். கள்ளச்சாராயத்தை குடித்தவர்களுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. இதையடுத்து அவர்கள் பல்வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர்.

அதில் 27 பேர் பலியாகியுள்ளனர். கிங் ஜார்ஜ் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 61 பேரும், பல்ராம்பூரில் 17 பேரும், 20 பேர் பொது மருத்துவமனையிலும், 16 பேர் ராம் மனோகர் லோஹியா மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ள உத்தர பிரதேச மாநில முதல்வர் அகிலேஷ் யாதவ் பலியானவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.2 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார். மேலும் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு இலவச சிகிச்சை வழங்கவும் அவர் உத்தரவிட்டுள்ளார்.
மாவட்ட துணை டிவிஷனல் மாஜிஸ்திரேட், துணை கலால் கமிஷனர், மாவட்ட கலால் அதிகாரி, சர்க்கிள் இன்ஸ்பெக்டர் ஆகியோரை சஸ்பெண்ட் செய்ய அகிலேஷ் உத்தரவிட்டுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பாக கலால் துறையில் 7 பேரும், காவல் துறையில் 6 பேரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். கள்ளச்சாராயம் குடித்து 27 பேர் பலியானது பற்றி 5 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து முக்கிய குற்றவாளியான ஜுக்னுவை கைது செய்துள்ளனர்.












Click it and Unblock the Notifications