கறிக்கடைகளை மூடிய யோகி அரசு..நவராத்திரியின்போது உ.பி.யில் மீன் கடைக்கும் தடை..9 நாள் பொறுத்துக்கணும்
கான்பூர்: உத்தரப் பிரதேசத்தில் நவராத்திரி விழாவை முன்னிட்டு இன்று அதாவது மார்ச் 31ம் தேதி முதல் ஏப்ரல் 6 வரை மத வழிபாட்டு தலங்களில் இருந்து 500 மீட்டர் தூரத்திற்குள் சட்டவிரோத இறைச்சிக் கூடங்கள் செயல்படுவதையும், இறைச்சி விற்பனை செய்வதையும் மாநில அரசு தடை செய்துள்ளது. ராமநவமியை முன்னிட்டு ஏப்ரல் 6ம் தேதி மாநிலம் முழுவதும் இறைச்சி விற்பனைக்கு முழுமையான தடை விதிக்கப்படும் என்றும் பாஜக அரசு அறிவித்திருக்கிறது.
9 நாட்கள் கொண்டாடப்படும் நவராத்திரி விழாவானது, வட மாநிலங்களில் வெகு விமரிசையாகக் கொண்டாடப்படுவது வழக்கமாகும்.. குறிப்பாக, குஜராத், உத்தரப் பிரதேசம், டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் நவராத்திரி விழா வைபோகம் சிறப்புற்று காணப்படும்..

இந்த 9 நாட்களுமே, புத்தாடைகள் அணிந்து, சிறப்பு பூஜைகள் செய்யப்படும். ஒவ்வொரு நாளும், இசை, நடனம், வகைவகையான உணவு பரிமாறுதல் போன்றவைகளுடன் சிறப்பிக்கப்படும்.
9 நாட்களுக்கும் விடுமுறை
அந்தவகையில், இந்த வருடத்தின் நவராத்திரி விழா நேற்று ஆரம்பமாகியிருக்கிறது. மார்ச் 30ம் தேதி முதல் ஏப்ரல் 6ம் தேதி வரை என 9 நாட்கள் நடைபெறவுள்ளது. இந்த விழாவை ஒட்டி, 9 நாட்களுக்கும், அனைத்து மீன் மற்றும் இறைச்சிக் கடைகளுக்கு தடை விதிக்கப்படுவதாக வாரணாசி மாநகராட்சி அறிவித்துள்ளது.
உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள வாரணாசி மாநகராட்சி மேயர் அசோக்குமார் இது குறித்து சொல்லும்போது, "காசியின் மத முக்கியத்துவம் மற்றும் பக்தர்களின் உணர்வுகளை கருத்தில்கொண்டு, நவராத்திரி பண்டிகையின்போது அனைத்து மீன் மற்றும் இறைச்சி கடைகளுக்கு மூட முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த உத்தரவை மீறும், கடைக்காரர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
நவராத்திரியின்போது, மாநகராட்சி பகுதியில் இறைச்சி மற்றும் இறைச்சி கடைகள் 9 நாட்களுக்கு மூடப்படும். நகராட்சியால் அதன் இணக்கம் உறுதி செய்யப்படுகிறது. மீறினால், அபராதம், FIR போன்ற நடவடிக்கைகள எடுக்கப்படலாம்" என்று தெரிவித்திருந்தார்.
சுற்றுப்புறம் தூய்மை
நவராத்திரியையொட்டி, கோயில்கள் மற்றும் மதத் தலங்களைச் சுற்றியுள்ள தூய்மையை மையமாகக் கொண்டு சிறப்பு பிரச்சாரங்களை நடத்த நகர்ப்புற வளர்ச்சி மற்றும் ஊரக வளர்ச்சித் துறைகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது... பகுதிகள் சுகாதாரமாக இருப்பதை உறுதி செய்வதற்காக கூடுதல் துப்புரவுப் பணியாளர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர்..
முன்னதாக, ரம்ஜான் பண்டிகை வருவது குறித்து வாரணாசி மாநகராட்சி மேயர் அசோக்குமாரிடம் செய்தியாளர்கள் கேட்டதற்கு, "இந்துக்கள் நவராத்திரியை மிகவும் புனிதமாக கருதுவார்கள் என்பதை முஸ்லிம் சகோதரர்கள் புரிந்து கொள்ளவேண்டும். எனவே 9 நாட்கள் பொறுத்துக்கொள்ளவேண்டும். நாங்கள் என்ன 360 நாளுமா நிறுத்த சொல்கிறோம்?
வாரணாசி ஆன்மீக மற்றும் கலாசார தலைநகரம். தினமும் 2 லட்சம் பக்தர்கள் வருகிறார்கள். அதனால் பாரம்பரிய நடைமுறை பின்பற்றவேண்டும். எதையும் கட்டாயப்படுத்துவதாக இருக்கக்கூடாது'' என்றார்.
முதல்முறையாக கடைகள் அடைப்பு
அந்தவகையில், முதல் முறையாக நவராத்திரிக்கு இறைச்சிக்கடைகள் அடைக்கப்பட்டுள்ளன.. மாநகராட்சியின் இந்த முடிவால் ரம்ஜான் பண்டிகையான முஸ்லிம்கள் இறைச்சி வாங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே சில நாட்களுக்கு முன்பு, காசி விஷ்வநாதர் ஆலயத்திற்கு அருகிலிருந்த இறைச்சி கடைகளுக்கு எதிராக மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்திருந்த நிலையில், இப்போது மாநகராட்சி மீண்டும் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது, இஸ்லாமிய பெருமக்களின் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தி வருகிறது.












Click it and Unblock the Notifications