பிரிட்ஜில் பிறந்த 15 நாள் குழந்தையை வைத்த தாய்.. நள்ளிரவில் உத்தர பிரதேசத்தில் என்ன நடந்தது தெரியுமா
லக்னோ: உலக சுகாதார அமைப்பின் கூற்றுப்படி, இளைஞர்களிடையே இறப்புக்கு தற்கொலை 3வது முக்கிய காரணமாகும். நம்முடைய நாட்டில் சுமார் 15 சதவீதம் இளம்வயதினர் மனநலப் பிரச்சினைகளால் பாதிக்கப்படுவதாக ஆய்வு ஒன்றில் கண்டறியப்பட்டுள்ளது. கல்வி அழுத்தம், சமூக ஊடக செல்வாக்கு, குடும்ப இயக்கவியல் போன்றவை இதற்கெல்லாம் காரணிகளாக உள்ளதாம். எனவே, இதுகுறித்த விழிப்புணர்வு இந்தியாவில் உடனடி தேவையாக உள்ளது. இப்படிப்பட்ட சூழலில் உத்தரபிரதேசத்தில் ஒரு கொடுமையான சம்பவம் நடந்துள்ளது.
5 வருடங்களுக்கு முன்பு உத்தர பிரதேச மாநிலத்தில் ஒரு கொடுமையான சம்பவம் நடந்தது.. காசியாபாத் பாட்லா நகரை சேர்ந்த பெண்ணின் பெயர் ஆர்த்தி.. 22 வயதாகிறது..

வாஷிங்மெஷினில் குழந்தை
இவருக்கு பிரசவத்தில் அழகான பெண் குழந்தை ஒன்று பிறந்தது.. ஆனால், தனக்கு ஆண் குழந்தை பிறக்கவில்லையே என்ற கோபமும், வெறுப்பும் ஆர்த்திக்கு இருந்து வந்தது.. ஆர்த்தியை போலவே அவரது மாமியார் குடும்பத்தினரும், ஆண் குழந்தைதான் வேண்டும் என்று கேட்டு ஆர்த்தியை மிரட்டி வந்துள்ளனர். இதனால் தனக்கு பிறந்த குழந்தை மீது தீராத ஆத்திரத்தை காட்டி வந்தார் ஆர்த்தி..
ஒருகட்டத்தில் மன உளைச்சலில் இருந்த ஆர்த்தி, திடீரென குழந்தையை தலையணையால் தாக்கி கொலை செய்தார். பிறகு குழந்தையின் உடலை சுருட்டி வாஷிங் மெஷினுக்குள் வைத்து மூடிவிட்டார்..
பிறகு அக்கம்பக்கத்தினர் குழந்தை எங்கே என்று கேட்டதற்கு ஆர்த்தி சரியாக பதில் சொல்லவில்லை.. இதையடுத்து, போலீஸ் வரை விஷயம் சென்று, அவர்கள் விரைந்து வீட்டுக்கு வந்து சோதனை நடத்தினார்கள்.. அப்போதுதான் வாஷிங் மெஷினில் சடலமாக கிடந்த குழந்தையை கண்டுபிடித்தனர்.
மீண்டும் உத்தர பிரதேசத்தில் கொடுமை
இந்த சம்பவம் அப்போது உத்தரபிரதேச மாநிலத்தில் பெரும் அதிர்ச்சியை உண்டுபண்ணியிருந்தது.. இந்நிலையில் இதே உத்தரபிரதேசத்தில் இதேபோன்ற கொடுமை தற்போது நடந்துள்ளது.
மொரதாபாத்தை சேர்ந்த அந்த 30 வயது பெண், நிறைமாத கர்ப்பிணியாக இருந்தார்.. அவருக்கு கடந்த 15 நாட்களுக்கு முன்பு குழந்தை பிறந்துள்ளது.. கடந்த வெள்ளிக்கிழமை இரவு குழந்தை தொட்டிலில் தூங்கி கொண்டு இருந்தது. அப்போது இரவு நேரம் திடீரென எழுந்த குழந்தையின் அம்மா, அந்த குழந்தையை எடுத்து சென்று, ஃபிரிட்ஜில் வைத்து மூடிவிட்டார்.. பிறகு குழந்தையை ஃபிரிட்ஜில் வைத்ததையும் மறந்து விட்டார்.
குளிர் தாங்க முடியல
சிறிது நேரத்தில், குளிர் தாங்க முடியாமல் பச்சிளம் குழந்தை கதறி அழுதது.. நள்ளிரவில் குழந்தை அழும் சத்தத்தை கேட்ட குடும்பத்தினர், குழந்தையை தேடினார்கள்.. எங்குமே குழந்தையை கண்டுபிடிக்க முடியவில்லை. பிறகுதான், ஃபிரிட்ஜை திறந்து பார்த்தால், குழந்தை உள்ளே இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
உடனடியாக குழந்தையை மீட்டு சிகிச்சைக்காக, அருகிலிருந்த மருத்துவமனைக்கு தூக்கி சென்றனர்.. அங்கு குழந்தையை பரிசோதித்த டாக்டர்கள், தீவிர சிகிச்சையை தற்போது அளித்து கொண்டிருக்கிறார்கள்.. அதற்குள் இது குறித்து தகவலறிந்து வந்த போலீசார் வழக்கு பதிவு செய்து குழந்தையின் அம்மாவிடம் விசாரணை மேற்கொண்டனர்.
டாக்டர்கள் தந்த அட்வைஸ்
அப்போதுதான், பிரசவத்திற்கு பிறகு அந்த பெண்ணுக்கு லேசான மனநிலை பாதிக்கப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து அப்பெண்ணை சிகிச்சைக்காக மனநல மருத்துவமனையில் அனுமதித்தனர்.. அங்கு தாய்க்கும் சிகிச்சை ஆரம்பமாகியிருக்கிறது.
இது குறித்து டாக்டர்கள் சொல்லும்போது, "பிரசவத்திற்கு பிறகு பெண்களின் மனநிலை பாதிக்க வாய்ப்புகள் நிறையவே உள்ளது.. பிரசவத்திற்கு பிறகு பல்வேறு வகையான தொற்றுக்கள் ஏற்படுகின்றன.. மேலும், ரத்தப்போக்கு உள்ளிட்ட உடல்நல தொந்தரவுகளும் ஏற்படுகின்றன.
சோகம், கவலை, பயம், பதற்றம், தூக்கமின்மை, எரிச்சல் மற்றும் அமைதி இழப்புகளாலும் இது போன்ற பிரச்சனைகளும் இளந்தாய்மார்களை பாதிக்கின்றன.. எனவே குழந்தை பெற்ற இளந்தாய்மார்களை, குடும்பத்திலுள்ள பெரியவர்கள் உறவினர்கள்தான் பக்கபலமாக இருந்து கவனமாக பார்த்துக் கொள்ள வேண்டும்" என்று அறிவுறுத்தியிருக்கிறார்கள்.












Click it and Unblock the Notifications