"ஐபோன் 13".. உத்தரகாண்ட் முதல்வர் பதவி ஏற்பு விழாவில்.. அமைச்சருக்கு நேர்ந்த சம்பவம்.. அடக்கடவுளே!
டேராடூன்: உத்தரகாண்ட் முதல்வராக புஷ்கர் சிங் தாமி மற்றும் 8 அமைச்சர்கள் நேற்று பதவியேற்று கொண்டனர். இந்த விழாவின்போது அமைச்சராக பதவியேற்ற சவுரப் பகுகுணாவின் ‛ஐபோன் 13' தொலைந்து போனது. யாராவது எடுத்தால் கொடுத்துவிடும்படி அவர் தனது பேஸ்புக் மூலம் கோரிக்கை வைத்துள்ளார்.
உத்தரகண்ட் மாநிலத்தில் மொத்தம் 70 சட்டசபை தொகுதிகள் உள்ளன. இங்கு சமீபத்தில் தேர்தல் நடந்தது. இதில் பாஜக 47 இடங்களில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை கைப்பற்றியது.
இதில் கதிமா தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்ட முதல்வர் புஷ்கர் சிங் தாமி, காங்கிரஸ் வேட்பாளர் புவன் சந்திர கப்ரியிடம் 6,579 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார். இருப்பினும் புஷ்கர் சிங் தாமி மீண்டும் முதல்வராக தேர்வு செய்யப்பட்டார்.

முதல்வர், அமைச்சர் பதவியேற்பு
டேராடூனில் நேற்று பதவியேற்பு விழா நடந்தது. முதல்வராக புஷ்கர் சிங் தாமி பதவியேற்றார். உத்தரகாண்ட் ஆளுநர் லெப்டினன்ட் ஜெனரல் குர்மித் சிங் அவருக்கு பதவிப்பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார். இதையடுத்து 8 பேர் கேபினட் அமைச்சர்களாக பதவியேற்றனர். இன்னும் 3 இடங்கள் காலியாக உள்ளன.

புதியவர்களுக்கு வாய்ப்பு
அமைச்சர்களாக பொறுப்பு ஏற்றவர்களில் சத்பால் மகராஜ், சுபோத் உனியால், தன் சிங் ராவத், ரேகா ஆர்யா, கணேஷ் ஜோஷி ஆகியோர் முந்தைய அமைச்சரவையில் பதவி வகித்தனர். சந்தன் ராம் தாஸ், சவுரப் பகுகுணா, பிரேம்சந்த் அகர்வால் ஆகியோர் அமைச்சரவையில் புதிதாக அமைச்சர்களாகி உள்ளனர்.

மோடி, யோகி பங்கேற்பு
இந்த பதவியேற்பு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், பாஜக தலைவர் ஜே.பி. நட்டா, மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், ஹரியானா முதல்வர் மனோகர் லால் கட்டார் உள்பட பல பாஜக தலைவர்கள் பங்கேற்றனர்.

‛ஐபோன் 13’ தொலைந்தது
இந்நிலையில் பதவியேற்பு விழாவின்போது புதிதாக அமைச்சரான சவுரப் பகுகுணாவின் ‛ஐபோன் 13' மாயமானது. இதுகுறித்து அவர் தனது பேஸ்புக்கில் குறிப்பிட்டுள்ளார். அந்த பதிவில், ‛இன்று பரேட் மைதானத்தில் பதவியேற்பு விழாவின்போது எனது செல்போனை(ஐபோன் 13) தொலைத்துவிட்டேன். யாராவது அதை கண்டால் என்னை பேஸ்புக் வழியாக தொடர்பு கொள்ளுங்கள். எனது எண்ணுக்கு ஏதேனும் அழைப்பு வந்தால் கவனமாக இருங்கள்'' என்றார்.

முதல்வரின் மகன்
ஐபோன் 13 பறிகொடுத்துள்ள சவுரப் பகுகுணாவின் தந்தை பெயர் விஜய் பகுகுணா. இவர் காங்கிரஸ் சார்பில் உத்தரகாண்ட்டில் முதல்வராக இருந்தார். இவரது தாத்தா ஹேமாவதி நந்தன் பகுகுணா உத்தர பிரதேச முதல்வராகவும், முன்னாள் மத்திய அமைச்சராகவும் இருந்தார். இவரது தந்தை விஜய் பகுகுணா கடந்த 2012 தேர்தலில் சிதார்காஞ்ச் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இந்த தொகுதியில் 2017 தேர்தலில் சவுரப் பகுகுணா வெற்றி பெற்ற நிலையில் தற்போதைய தேர்தலிலும் வாகை சூடியுள்ளார். அத்துடன் முதல் முறையாக அமைச்சராகி உள்ளார்.












Click it and Unblock the Notifications