கையில் துப்பாக்கி மது...நடனம்...நீக்கிய பாஜக எம்எல்ஏ..மீண்டும் கட்சியில் சேர்ப்பு!!
டேராடூன்: உத்தரகண்ட் மாநிலத்தில் கடந்தாண்டு கையில் துப்பாக்கி, மது, நடனம் என்று ஆட்டம் போட்டு கட்சியில் இருந்து ஆறு ஆண்டுகளுக்கு நீக்கப்பட்ட பாஜக எம்எல்ஏ மீண்டும் கட்சியில் சேர்க்கப்பட்டு இருக்கிறார்.
உத்தரகண்ட் மாநிலம் கான்புர் எம்எல்ஏ பிரணவ் சிங் சாம்பியன். இவர் தனது கையில் மது பாட்டில், துப்பாக்கி வைத்துக் கொண்டு நடனம் ஆடி இருந்தார். இந்த வீடியோ வெளியாகி பெரிய அளவில் சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது. கடந்தாண்டு நடந்த இந்த சம்பவத்தையடுத்து இவர் மீது பாஜக ஒழுங்கு நடவடிக்கை எடுத்து இருந்தது. இவரை கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து ஆறு ஆண்டுகளுக்கு நீக்கியது.

இவருடன் சேர்த்து எம்எல்ஏக்கள் மகேஷ் நேகி, தேஷ்ராஜ் கர்ன்வால், பூரண சிங் பர்த்யால் ஆகிய மூவரையும் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து பாஜக நீக்கி இருந்தது. இவர்களில் மகேஷ் நேகி மீது சமீபத்தில் ஒரு பெண் பாலியல் பலாத்கார புகார் அளித்து இருந்தார்.
இந்த நிலையில் இன்று உத்தரகண்ட் மாநில பாஜக தலைவர் பன்சிதார் பகத் வீட்டில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் அந்தக் கட்சியில் பிரணவ் சிங் சாம்பியன் இணைக்கப்பட்டார். இந்த நிகழ்ச்சிக்கு தனது மனைவியுடன் அவர் வந்திருந்தார்.
இதுகுறித்து கட்சித் தலைவர் பகத் கூறுகையில், ''கடந்த வாரம் நடந்த கூட்டத்தில் அவரை கட்சியில் சேர்ப்பது குறித்து பேசப்பட்டது. அப்போது கட்சிக்கு எதிரான எந்தவித ஒழுங்கீன நடவடிக்கைகளிலும் ஈடுபடக் கூடாது என்று அறிவுறுத்தப்பட்டது. அதை அவர் ஏற்றுக் கொண்டார். அதன்பின்னர் கட்சியில் சேர்க்கப்பட்டு இருக்கிறார். கடந்த ஆண்டு அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதன் பின்னர் அவர் மீது எந்தவித புகார்களும் இல்லை. அவரது தவறை அவர் உணர்ந்து இருக்கிறார். இதையடுத்து கட்சிக்குள் வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது'' என்றார்.












Click it and Unblock the Notifications