உத்தரகண்ட் தேர்தல்.. ஆட்சியை தக்க வைத்த பாஜக! பெரிதும் எதிர்பார்த்த காங். கட்சிக்கு ஏமாற்றமே
டேராடூன்: உத்தரகண்ட் மாநிலத்தில் வாக்கு எண்ணிக்கை தொடங்கி உள்ள நிலையில், பாஜக பெரும்பான்மைக்குத் தேவையான இடங்களில் முன்னிலையில் உள்ளது.
மொத்தம் 70 இடங்களை கொண்ட உத்தரகண்ட் மாநிலத்தில் கடந்த பிப். 14ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. இதில் மொத்தம் 65% வாக்குகள் பதிவாகி இருந்தது.
உத்தரக்ண்ட மாநிலத்தில் பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சிகளுக்கு இடையே தான் கடும் போட்டி நிலவுகிறது. அங்கு ஒரு கட்சி தனிப்பெரும்பான்மை உடன் ஆட்சி அமைக்க குறைந்தது 36 இடங்களில் வெல்ல வேண்டும்.

பாஜக முன்னிலை
உத்தரகண்ட் மாநிலத்தில் வாக்கு எண்ணிக்கை தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், தற்போது பாஜக முன்னிலையில் உள்ளது. பெரும்பான்மைக்கு 36 இடங்கள் தேவை என்ற நிலையில், பாஜக 48 இடங்களில் இப்போது முன்னிலையில் உள்ளது. காங்கிரஸ் கட்சி 18 இடங்களில் மட்டுமே முன்னிலையில் உள்ளது குறிப்பிடத்தக்கது. இருப்பினும், அதிர்ச்சி அளிக்கும் வகையில் காதிமா தொகுதியில் போட்டியிட்ட பாஜக முதல்வர் புஷ்கர் சிங் தாமி தோல்வி அடைந்துள்ளார். பாஜக வென்ற போதிலும், முதல்வர் தோல்வி அடைந்துள்ளதால் அடுத்து முதல்வர் யார் என்பதில் கேள்வி எழுந்துள்ளது.

பாஜக
உத்தரகண்ட் மாநிலத்தில் தற்போது பாஜக ஆட்சியில் உள்ளது. இருப்பினும், கடந்த ஒரு ஆண்டில் மட்டும் உத்தரகண்ட் மாநிலம் 3 முதல்வர்களை பார்த்துள்ளது. திரிவேந்திர சிங் ராவத் செயல்பாடுகளில் திருப்தி இல்லாததால் அவரை நீக்கிவிட்டு தீரத் சிங் ராவத்தை முதல்வராக கொண்டு வந்தது பாஜக தலைமை. அவரது செயல்பாடுகளும் மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்திய நிலையில், அவருக்கு பதிலாக புஷ்கர் சிங் தாமி கடந்த 2021 ஜூலை மாதம் உத்தரகண்ட் முதல்வராக கொண்டுவரப்பட்டார்.

காங்கிரஸ்
உத்தரகண்ட் மாநிலத்தில் ஆளும் பாஜக மீது மக்கள் அதிருப்தியில் உள்ளதாக காங்கிரஸ் கூறுகிறது. இதனால் இந்த முறை கட்டாயம் ஆட்சி மாற்றம் நடக்கும் என்பதில் காங்கிரஸ் தலைமை நம்பிக்கையுடன் இருக்கிறது. உத்தரகண்ட் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி வெல்லும்பட்சத்தில், அக்கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான ஹரிஷ் ராவத் முதல்வராக பதவி ஏற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல தொங்கு சட்டசபை அமைந்தால், ஒத்த கருத்துகள் கட்சிகளுடன் கூட்டணி அமைக்கவும் தேவையான நடவடிக்கையில் காங். ஈடுபட்டுள்ளது.
Recommended Video

2017 தேர்தல்
முன்னதாக கடந்த 2017 சட்டசபை தேர்தலில் மொத்தம் உள்ள 70 இடங்களில் 57 இடங்களில் வென்று பாஜக தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. அதேநேரம் காங்கிரஸ் கட்சியால் வெறும் 11 இடங்களில் மட்டுமே வெல்ல முடிந்தது. கடந்த தேர்தலில் பாஜகவிடம் பறிகொடுத்த வெற்றியை காங்கிரஸ் மீண்டும் கைப்பற்றுமா இல்லை மீண்டும் உத்தரண்ட் மாநிலத்தை பாஜக தக்க வைக்குமா என்பது சில மணி நேரத்தில் தெரிந்துவிடும்.












Click it and Unblock the Notifications