உத்தரகாண்ட் சுரங்க பாதையில் 10 நாட்களாக சிக்கி தவிக்கும் 41 பேர்.. முதல்முறையாக வீடியோ வெளியீடு!
டேராடூன்: உத்தரகாண்ட் மாநிலத்தில் சுரங்க பாதை இடிபாடுகளில் சிக்கி 10 நாட்களாக தத்தளிக்கும் 41 பேர் நிலைமை என்ன என்பது குறித்த பதைபதைக்க வைக்கும் வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.
உத்தரகாண்ட் மாநிலத்தின் உத்தரகாசி பகுதியில் யமுனோத்ரி தேசிய நெடுஞ்சாலையில் சில்க்யாரா என்ற இடத்தில் சுரங்கப் பாதை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. சில்க்யாரா- தண்டல்கான் இடையே இந்த சுரங்கப் பாதை அமைக்கும் பணி நடைபெறுகிறது.

இந்த சுரங்கப் பாதையின் ஒரு பகுதியில் கடந்த 12-ந் தேதி திடீரென மண் சரிவு ஏற்பட்டது. இதனால் சுரங்கப் பாதையின் நடுவே 41 தொழிலாளர்கள் சிக்கிக் கொண்டனர். சுரங்கப் பாதைக்குள் சுமார் 1.5 கி.மீ. தொலைவு மட்டுமே 41 தொழிலாளர்கள் நடமாட முடியும். இந்த 41 பேரையும் மீட்க கடந்த 10 நாட்களாக பேரிடர் மீட்பு பணியினர் மும்முரமாக முயற்சித்து வருகின்றனர்.
10 நாட்களாக 41 தொழிலாளர்களுக்கும் உணவு பொருட்கள், ஆக்சிஜன் உள்ளிட்டவை குழாய் மூலமாக செலுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் 10 நாட்களுக்கு பின்னர் சுரங்க பாதையில் சிக்கிய 41 பேர் நிலைமை குறித்த பதற வைக்கும் வீடியோ தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
இந்த வீடியோவில், சுரங்கப் பாதைக்குள் சிக்கிய 41 பேரில் சிலர், வாக்கி டாக்கி உதவியுடன் மீட்பு குழுவினருடன் பேசும் காட்சிகள் இடம் பெற்றுள்ளன. மேலும் தங்களை விரைவாக மீட்க வேண்டும் எனவும் மீட்பு குழுவினரிடம் சுரங்கத்தில் சிக்கிய தொழிலாளர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.












Click it and Unblock the Notifications