இன்னும் 2 மணிநேரம் தான்.. உத்தரகாண்ட் சுரங்கத்தில் இருந்து பத்திரமாக மீட்கப்படும் 41 பேர்.. திக்திக்
உத்தரகாண்ட்: உத்தரகாண்ட் மாநிலம் உத்தரகாசி அருகே சுரங்கத்தில் சிக்கிய 41 தொழிலாளர்களை மீட்கும் பணி இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இவர்கள் 11 நாட்களுக்கு பிறகு சுரங்கத்தில் இருந்து இன்னும் 2 மணிநேரத்தில் மீட்கப்பட உள்ளனர்.
உத்தரகாண்ட் மாநிலம் உத்தரகாசி அருகே உள்ள சில்க்யாரா என்ற பகுதியில் அமைந்துள்ள யமுனோத்ரி தேசிய நெடுஞ்சாலை செல்கிறது. இங்கு சுரங்கம் தோண்டும் பணி நடைபெற்று வந்தது. இதில் ஏராளமான தொழிலாளர்கள் ஈடுபட்டு வந்தனர்.

இந்நிலையில் தான் கடந்த 12ம் தேதி திடீரென எதிர்பாராத விதமாக நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் சுமார் 41 தொழிலாளர்கள் சுரங்கத்திற்குள் சிக்கினர். மொத்தம் 4.5 கிலோமீட்டர் நீளம் கொண்ட இந்த சுரங்கத்தில் 150 மீட்டர் தொலைவுக்கு மண்சரிவு ஏற்பட்ட நிலையில் 41 தொழிலாளர்களால் சுரங்கத்தில் இருந்து வெளிவர முடியவில்லை.
இதையடுத்து அவர்களை மீட்கும் பணி தொடங்கியது. மத்திய, மாநில அரசுகள் 41 தொழிலாளர்களையும் பத்திரமாக மீட்க தேவையான நடவடிக்கைகளை தொடங்கினர். தேசிய பேரிடர் மீட்பு படையினர், மாநில பேரிடர் மீட்பு படையினர், தீயணைப்பு படையினர் உள்ளிட்டவர்கள் மீட்பு பணியை தொடங்கினர். சுரங்கத்தில் மண்சரிவு ஏற்பட்டதால் இந்த மீட்பு பணி பெரும் சிரமத்தை ஏற்படுத்தியது.
இதையடுத்து சுரங்கத்தில் சிக்கிய தொழிலாளர்களுக்கு தேவையான உணவு, குடிநீர், ஆக்ஸிஜன் உள்ளிட்டவை குழாய்கள் மூலம் அனுப்பி வைக்கப்பட்டது. அதனை தொழிலாளர்கள் சாப்பிட்டு வந்தனர். இதற்கிடையே சுரங்கத்தில் சிக்கியவர்களின் குடும்பத்தினர், உறவினர்கள் அங்கு கூடியுள்ளனர். பல இடையூறுகளுக்கு நடுவே கடந்த 10 நாட்களாக மீட்பு பணி தொடர்ந்து நடந்து வந்தது. சுரங்கத்தை சுற்றி வலுவான பாறைகள் இல்லாததால் அதில் துளையிடும்போது அது மொத்தமாக இடிந்து விழும் நிலையில் உள்ளது. இதனால் மீட்பு பணி என்பது பெரும் சவாலாக மாறியது.
இதற்கிடையே தான் சுரங்கத்தில் சிக்கியவர்களின் வீடியோ வெளியானது. அதில் பேசிய அவர்கள், ‛‛நாங்கள் சிக்கி 10 நாட்கள் ஆகிவிட்டது. இங்கு நிலைமை மோசமாக உள்ளது. உடனடியாக மீட்க வேண்டும்'' என்றனர். அதோடு சுரங்கத்தில் இருப்போர் தற்போது வரை நலமாக இருப்பது உறுதியானது. இதையடுத்து மீட்பு படையினர், சுரங்கத்தின் மேல் பகுதியிலிருந்து துளை போட்டு அதன் மூலம் தொழிலாளர்களை மீட்க நடவடிக்கை எடுத்தனர். இந்நிலையில் தான் தற்போது சுரங்கத்தில் 44 மீட்டர் தூரத்துக்கு 800 எம்எம் அளவு கொண்ட பைப் செலுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் 12 மீட்டர் தூரம் மட்டுமே பைப் செலுத்தப்பட வேண்டி உள்ளது.
இன்னும் ஒன்று அல்லது 2 மணிநேரத்துக்குள் இந்த பணி முடிவடையும். அதன்பிறகு அந்த பைப் மூலம் தொழிலாளர்கள் மீட்கப்பட உள்ளனர். இதையடுத்து உடனடியாக அவர்களுக்கு சிகிச்சை அளிக்க வசதியாக சம்பவம் நடக்கும் இடத்தில் ஆம்புலன்ஸ்கள் தயார் நிலையில் உள்ளனர். இதுபற்றி மீட்பு பணியில் ஈடுபட்டு வரும் கிரிஸ் சிங் ராவத் கூறுகையில், ‛‛மீட்பு பணி இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இன்னும் 1 முதல் 2 மணிநேரத்தில் ரிசல்ட் தெரிவந்து விடும். பைப் சுரங்கத்துக்குள் முழுமையாக செலுத்தப்பட்டு தொழிலாளர்கள் மீட்கப்பட உள்ளனர்'' என்றார்.
தற்போது வெளியாகி உள்ள இந்த தகவலால் சுரங்கத்தில் சிக்கிய தொழிலாளர்களின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.












Click it and Unblock the Notifications