கொல்கத்தா பெண் மருத்துவர் கொலை.. நள்ளிரவு போராட்டத்தில் வன்முறை.. மருத்துவமனையை சூறையாடிய கும்பல்
கொல்கத்தா: பெண் மருத்துவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு போராட்டம் நடைபெற்று வருகிறது. நள்ளிரவில் நடைபெற்ற போராட்டத்தில் தீடீர் வன்முறை ஏற்பட்டது. போராட்டக்காரர்கள் மருத்துவமனைக்குள் புகுந்து எமர்ஜென்சி வார்டை சூறையாடினர். போலீசார் தடியடி நடத்தி விரட்டியடித்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
மேற்கு வங்காள மாநில தலைநகர் கொல்கத்தாவில், மாநில அரசுக்கு சொந்தமான ஆர்.ஜி.கர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை உள்ளது. அங்கு முதுநிலை பயிற்சி பெண் டாக்டர் ஒருவர், கடந்த 8-ம் தேதி இரவு, கல்லூரியில் உள்ள கருத்தரங்கு மண்டபத்தில் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக சஞ்சய் ராய் என்ற ஊழியர் கைது செய்யப்பட்டார்.

மருத்துவமனையில் மாணவர்களுக்கென தனி ஓய்வு அறை இல்லாததால் மருத்துவமனையின் 4- வது மாடியில் உள்ள செமினார் ஹாலுக்கு ஓய்வெடுக்க சென்றுள்ளார் அந்த பயிற்சி பெண் டாக்டர். ஆனால், காலை நீண்ட நேரமாகியும் அவர் திரும்பி வராததால் மற்ற மாணவர்கள் அவரைத் தொடர்புகொள்ள முயற்சித்தும் முடியாமல் போனது.
அதனால், சகமாணவர் ஒருவர் அவரைத்தேடி செமினார் ஹாலுக்கு சென்றபோதுதான், பிணமாக கிடக்கும் மாணவியை கண்டு அலறியுள்ளனர். ரத்த வெள்ளத்தில் அரை நிர்வாணமாக இறந்த நிலையில் கிடந்துள்ளார் பெண் டாக்டர்.. அதற்கு பிறகே போலீசார் சடலத்தை கைப்பற்றி போஸ்ட் மார்ட்டத்துக்கு அனுப்பினார்கள்.. இது தொடர்பாக 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு, சம்பவ இடத்தில் கிடைத்த ப்ளூடூத் ஹெட்போனை வைத்து, சஞ்சய் ராய் என்பவரை கைது செய்துள்ளனர்.
பெண் டாக்டர் மருத்துவ கல்லூரி வளாகத்திலேயே கொலை செய்யபட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பத்தை கண்டித்து நாடு முழுவதும் பயிற்சி டாக்டர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த விவகாரம் எதிரொலியாக ஆர்.ஜி.கர் மருத்துவக் கல்லூரி முதல்வர் சந்தீப் கோஷ் தனது பதவியை ராஜினாமா செய்தார். இந்த வழக்கின் விசாரணையை சிபிஐக்கு மாற்றி கொல்க்த்தா உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதனிடையே, பயிற்சி பெண் டாக்டர் கொலையை கண்டித்து நள்ளிரவிலும் போரட்டம் நீடித்தது. அப்போது திடீரென இந்த போராட்டத்தில் வன்முறை வெடித்தது. மருத்துவமனையின் எமெர்ஜென்சி வார்டுக்குள் புகுந்த கும்பல் முழுவதும் அடித்து நொறுக்கி சேதப்படுத்தியது. மருத்துவமனை வளாகத்திற்குள்ளும் கற்கள் வீசி கும்பல் தாக்கியது.
நிலமை கையை மீறி சென்றதால் போலீசார் வன்முறைய கட்டுப்படுத்த தடியடி நடத்தினர். கண்ணீர் புகை குண்டுகளும் வீசினர். மருத்துவமனைக்கு வெளியே நிறுத்தப்பட்டு இருந்த வாகனங்களுக்கும் தீ வைக்கப்பட்டன. இதனால், மருத்துவமனை வளாகம் அருகே பதற்றமன சூழல் நிலவுகிறது.
இது குறித்து போலீசார் கூறுகையில், அடையாளம் தெரியாத சிலர் மருத்துவமனை வளாகத்திற்குள் நுழைய முற்பட்டதாகவும் அவர்களை தடுத்து நிறுத்த முயற்சித்தும் முடியவில்லை என்று தெரிவித்தனர். திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் குண்டர்கள் தான் ஆர்.ஜி கர் மருத்துவமனைக்குள் நுழைந்து வன்முறையில் ஈடுபட்டதாக பாஜக குற்றம் சாட்டியுள்ளது.












Click it and Unblock the Notifications