
கிட்ட நெருங்கி வந்து பட்டுனு கேமராவை விழுங்கிய சுறா.. லைவாக தெரிந்த உடல் பாகங்கள்! நடுக்கடலில் ஷாக்!
பெர்ன் : சுவிட்சர்லாந்துக்கு அருகில் இருக்கும் லிகுரியன் கடல் பகுதியில் சுறா மீன் ஒன்று ஆழ்கடலில் நீந்துபவரை தாக்க வந்து அவர் வைத்திருந்த கேமராவை விழுங்கியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பொதுவாக சுறாமீன்கள் மனிதர்களை அதிகம் தாக்குவதில்லை. ஆனால், எளிதாக கிடைக்கும் இரை எனில் அதனை சுறாக்கள் விட்டுவிடுவதுமில்லை. இப்படியாகத்தான் மனிதனுக்கும் சுறாக்களுக்கும் இடையே மோதல் ஏற்படுகிறது.
இந்நிலையில், லிகுரியன் கடலில் சுறா தான் விழுங்கிய கேமராவை மீண்டும் வெளியே துப்பியிருக்கிறது. இந்த சம்பவம் முழுவதும் வீடியோவாக பதிவாகியுள்ளது. இந்த வீடியோதான் தற்போது சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.

சுற்றுலா தளம்
பிரான்ஸில் பாதி இத்தாலியில் பாதி என இந்த லிகுரியன் கடல் இருக்கிறது. இக்கடல் பகுதிக்கு அதிக அளவில் சுற்றுலா பயணிகள் வருவது இயல்பு. அதேபோல இந்த இக்கடல் ஸ்கூபா டைவிங் எனப்படும் ஆழ்கடல் நீச்சலுக்கும் ஏற்ற இடமாக இருப்பதால் ஐரோப்பாவின் முக்கிய கடல் பகுதியாக இது இருக்கிறது. இந்நிலையில், ஓரிரு நாட்களுக்கு முன்னர் இந்த சம்பவம் நிகழ்ந்திருக்கிறது. அதாவது ஸ்கூபா டைவிங் செய்பவர்கள் வழக்கம்போல சம்பவத்தன்று கடலில் நீந்திக்கொண்டிருந்துள்ளனர். அங்கு புலி சுறாக்கள் திடீரென வரத் தொடங்கியுள்ளன. ஆனால் இவர்கள் ஆழ்கடல் நீந்துதலில் நிபுணத்துவம் பெற்றவர்கள் என்பதால் சுறாக்களை கண்டு பயப்படவில்லை.

புலி சுறா
ஏனெனில் பொதுவாக புலி சுறாக்கள் பகலில் வேட்டையாடுவது கிடையாது. அதேபோல இந்த வகை சுறாக்களின் உணவு பட்டியலில் மனிதன் கிடையாது. எனவே இதனை கண்டு பயப்பட வேண்டியதில்லை என ஆழ்கடல் நிபுணர்களுக்கு தெரியும். ஆனால், இதற்கு முன்னர் இந்த சுறாக்கள் மனிதனை தாக்கியதே இல்லையென்று சொல்லிவிட முடியாது. இவ்வாறு ஆழ்கடல் நீந்துபவர்கள் சிலரை புலி சுறா பதம் பார்த்ததில் ஓரிரு உயிரிழப்புகளும் ஏற்பட்டிருக்கின்றன. இந்நிலையில், சம்பவத்தன்று ஸ்கூபா டைவர்களிடம் வந்த புலி சுறாக்களில் ஒரே ஒரு சுறா மட்டும் மிக நெருக்கமாக சுற்றிச் சுற்றி வந்திருக்கிறது.

வீடியோ
திடீரென என்ன நினைத்ததோ தெரியவில்லை, நீந்திக்கொண்டிருந்த ஒருவரின் அருகில் வந்து, அவரை தாக்க முற்பட்டு கேமராவை கடிக்க தொடங்கிவிட்டது. பின்னர் கேமராவை துப்பி இருக்கிறது. இதில் கேமரா சேதமடைந்திருந்தாலும், அது சுறாவின் தொண்டைக்குள் செல்லும் போது பதிவான காட்சிகள் அப்படியே இருந்திருக்கிறது. தற்போது இந்த வீடியோவை ஸ்கூபா டைவிங் செய்தவர் டிவிட்டரில் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோவில் புலி சுறாவின் பற்கள், தாடைகள், தொண்டை, பக்கவாட்டு செதில்கள் என அனைத்தும் தெளிவாக பதிவாகி இருக்கிறது. ஒரு உயிருள்ள புலி சுறாவின் பற்கள் முதல் செதில்கள் வரை லைவாக படமெடுக்கப்பட்டது இதுதான் முதல்முறை எனக் கூறப்படுகிறது.

இன்னொரு பெயர்
தற்போது இந்த வீடியோ பரவலாக பகிரப்பட்டு வருகிறது. இந்த வீடியோவில் ஒரு டிவிஸ்ட் ஒன்று இருக்கிறது. அதாவது கேமராவை சுறா தற்செயலாகதான் கடித்தது என்று நம்மில் பலரும் நினைத்துக்கொண்டிருப்போம். ஆனால் இதற்கு அறிவியலாளர்கள் ஒரு காரணத்தை சொல்லியிருக்கிறார்கள். அதாவது புலி சுறாவுக்கு குப்பைத் திண்ணி என்கிற மற்றொரு பெயர் இருக்கிறது. ஆமாம் மக்களே இந்த பெயருக்கு ஏற்றவாறு இச்சுறாக்கள் கடலில் வீசப்படும் டயர்கள் முதல் அனைத்தையும் தின்று தீர்த்துவிடுகிறது. இதனால்தான் இதற்கு இப்பெயர் வைக்கப்பட்டுள்ளதாம். இப்போ புரிகிறதா? இந்த சுறா ஏன் கேமராவை விழுங்க முயன்றது என்று?