நடுக்காட்டில் அலறிய சிறுமி! வாங்க பேசிக்கலாம்.. குற்றவாளிகளை எரித்தே கொன்ற மக்கள்! எங்கே தெரியுமா..?
ராஞ்சி : ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் அருகே சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த குற்றவாளிகளை பேச்சுவார்த்தை நடத்தலாம் என அழைத்து சிறுமியின் கண்முன்னே கிராம மக்கள் தீயிட்டு கொளுத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கடந்த சில மாதங்களாக இந்தியாவில் குறிப்பாக வட மாநிலங்களில் பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் மிக தீவிரமாக அதிகரித்து வருகிறது.
படிப்பறிவில் பின்தங்கியுள்ள பீகார் ,ராஜஸ்தான், உத்திரபிரதேசம், உள்ளிட்ட மாநிலங்களிலும் தலைநகரான டெல்லி ஜார்கண்ட் ஒடிசா ஆகிய மாநிலங்களில் குறைந்தது ஒரு நாளைக்கு ஒரு பாலியல் வன்கொடுமை சம்பவம் நடந்து கொண்டுதான் இருக்கிறது. இது வெளி உலகுக்குத் தெரிந்தது மட்டும்தான்.

ஜார்கண்டில் அதிர்ச்சி
மத்திய மாநில அரசுகள் காவல்துறையுடன் இணைந்து எவ்வளவு முயற்சி செய்தும் பாலியல் வன்கொடுமை சம்பவங்களை தடுக்க முடியவில்லை என்பதுதான் வேதனை. அதே நேரத்தில் பாலியல் வன்கொடுமை சம்பவங்களில் ஈடுபடும் குற்றவாளிகளை கடுமையாக தண்டிக்க வேண்டும் என்று கோரிக்கையும் எழுந்துள்ளது. இந்நிலையில் ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் அருகே சிறுமியை லிப்ட் தருவதாக கூறி அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்த இரு குற்றவாளிகளை கிராமத்தினர் அடித்து துவைத்து அவர்கள் மீது பெட்ரோல் ஊற்றி எரித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

சிறுமி பலாத்காரம்
ஜார்கண்ட் மாநிலம் கும்லா நகர் பகுதியைச் சேர்ந்த கூலித் தொழிலாளி அவரது மனைவி மற்றும் குழந்தைகளோடு அருகிலுள்ள ஊரில் உறவினர் இல்ல நிகழ்ச்சிக்கு சென்றுள்ளார். நிகழ்ச்சி முடிந்து வீட்டுக்கு செல்வதற்காக பேருந்துக்காக அவர்கள் காத்துள்ளனர். அப்போது அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்த சுனில் ஓரான், ஆஷிஷ் ஓரான் ஆகியோர் சிறுமியை அழைத்துச் சென்று வீட்டில் விட்டு விடுவதாகக் கூறியவுடன் இதனை நம்பிய அந்த பெற்றோர் தங்களது மகளை அந்த கும்பலுடன் அனுப்பி வைத்துள்ளனர்.

கிராம மக்கள் ஆத்திரம்
நேராக வீட்டுக்கு செல்லாமல் காட்டு பகுதிக்கு சென்ற இருவரும் சிறுமியை மாறி மாறி பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். இந்நிலையில் வீட்டுக்கு சென்ற பெற்றோர் தங்கள் மகள் வீட்டுக்கு வரவில்லை என அருகில் இருந்தவர்களிடம் கூறி பல பகுதிகளில் தேடினர், அப்போது காட்டுப்பகுதி வழியாக நடந்து வந்த சிறுமி தன்னை அழைத்துச் சென்றவர்கள் தன்னை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ததாக பெற்றோரிடம் கூறியுள்ளார் இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் சுனில் மற்றும் ஆசிஸ் என இருவரையும் பேச்சுவார்த்தைக்கு அழைத்துள்ளனர்.

குற்றவாளிகள் எரிப்பு
இதையடுத்து இருசக்கர வாகனத்தில் இருவரும் கிராமத்திற்குள் வந்துள்ளனர். அப்போது ஆத்திரமடைந்த கிராம மக்கள் இருவரையும் மோட்டார் சைக்கிளுடன் பிடித்தனர். முதலில் அவர்கள் இருவரையும் கொடூரமாக தாக்கி பலத்த காயப்படுத்தினர். பின்னர் அவர்கள் மீதும் மோட்டார் சைக்கிள் மீதும் பெட்ரோலை ஊற்றி தீவைத்தனர். இருவரில் சுனில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த நிலையில், காயமடைந்த ஆஷிஷ் ராஜேந்திரா மருத்துவ அறிவியல் கழகத்தில் சிகிச்சை பெற்று வருகிறார். இது தொடர்பாக 6 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications