வக்பு போராட்டம்: மேற்கு வங்க வன்முறைகள்- அமித்ஷா, BSF தூண்டுதல்தான் காரணம்- மமதா பகீர் குற்றச்சாட்டு
கொல்கத்தா: மத்திய அரசின் வக்பு சட்டத்துக்கு எதிரான போராட்டங்களால் மேற்கு வங்க மாநிலத்தில் வன்முறை சம்பவங்கள் நடைபெறுவதற்கு காரணமே மத்தியில் ஆளும் பாஜகவும், எல்லை பாதுகாப்புப் படையினராகிய BSF வீரர்களும்தான் என்று மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி பகீர் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
மேற்கு வங்க மாநிலம் முழுவதும் வக்பு சட்டத்துக்கு எதிராக தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. முர்ஷிதாபாத் உள்ளிட்ட மாவட்டங்களில் இந்த போராட்டங்கள் வன்முறையாக வெடித்தன. முர்ஷிதாபாத் வன்முறையில் 3 பேர் கொல்லப்பட்டனர். இதனையடுத்து மேற்கு வங்கத்தில் வக்பு சட்டம் அமல்படுத்த மாட்டோம் என முதல்வர் மமதா பானர்ஜி அறிவித்தார்.

வக்பு சட்டத்துக்கு என்னதான் அவசரம்?
இந்த நிலையில் கொல்கத்தாவில் இன்று இஸ்லாம் மதத்தின் இமாம்கள் உள்ளிட்ட பிரதிநிதிகளை சந்தித்து பேசினார் மமதா பானர்ஜி. அப்போது மமதா பானர்ஜி பேசியதாவது: வக்பு வாரிய சட்டத்தில் திருத்தம் கொண்டுவருவதற்கு மத்தியில் ஆளும் பாஜக கூட்டணி அரசுக்கு இவ்வளவு அவசரம் ஏன்? வங்கதேசத்தில் என்ன நிலைமை என்பது மத்திய அரசுக்கு தெரியாதா?
சர்வதேச எல்லைகளை பகிரும் மேற்கு வங்க மாநிலம்
மேற்கு வங்க மாநிலமானது வங்கதேசம், நேபாளம், பூட்டான் என பல நாடுகளுடன் எல்லைகளைப் பகிர்ந்து கொண்டுள்ளது. இலங்கை 2,300 கிமீ தொலைவுக்கு அப்பால் இருப்பதால் மேற்கு வங்கத்துடன் எல்லை பகிர்வு இல்லை. இந்த நாட்டுக்கு மத்திய அரசு ஏதாவது நன்மை செய்தால் மகிழ்ச்சி அடைவோம். ஆனால் நீங்கள் என்னதான் செய்து கொண்டிருக்கிறீர்கள்?
தேசத்துக்கு எதிராக அமித்ஷா
பிரதமர் மோடி அவர்களே! மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் நடவடிக்கைகளை கண்காணியுங்கள். இந்த தேசத்துக்கு எதிராக தமது சொந்த அரசியல் திட்டங்களை நிறைவேற்றுகிறவராக அமித்ஷா செயல்பட்டு வருகிறார்.
சர்வதேச எல்லை பாதுகாப்புக்கு யார் பொறுப்பாம்?
வங்கதேசத்தில் இருந்து ஊடுருவியவர்களே முர்ஷிதாபத் வன்முறைகளுக்கு காரணம் என்கின்றனர். அப்படியானால் வங்கதேச எல்லையை பாதுகாக்கிற பொறுப்பு எல்லை பாதுகாப்பு படை BSF- வசம்தானே இருக்கிறதே? இத்தகைய ஊடுருவல்காரர்களை ஏன் BSF தடுக்கவில்லை? சர்வதேச எல்லையை ஒரு மாநில அரசா பாதுகாக்க முடியும்? மத்திய அரசுதான் இதற்கு பொறுப்பேற்க வேண்டும்.
முர்ஷிதாபாத் வன்முறைகளின் பின்னணியில் BSF
வக்பு சட்டத்துக்கு எதிரான போராட்டங்களின் போது முர்ஷிதாபாத் மாவட்டத்தில் நிகழ்ந்த வன்முறைகள் திடீரென ஏற்பட்டவை அல்ல. அந்த வன்முறைகள் திட்டமிட்டே நிகழ்த்தப்பட்டவை. முர்ஷிதாபாத் வன்முறைகளின் போது எல்லை பாதுகாப்பு படையினர் (BSF) சிலர், இளைஞர்களுக்கு பணம் கொடுத்து வாகனங்கள் மீது கல்வீசித் தாக்குதல் நடத்த தூண்டிவிட்டதை நாங்கள் கண்டுபிடிப்போம். வெளியில் இருந்து பாஜக குண்டர்களை ஏன் இறக்கிவிடுகிறது? பாஜகவைப் பொறுத்தவரையில் இந்துக்கள்- முஸ்லிம்கள் என பிரிந்து கிடக்க வேண்டும்; இந்துக்களின் வாக்குகளை ஒருமுகப்படுத்த வேண்டும். அவர்களுக்கு தேவை ஒரு காட்டாட்சி தர்பார்தான். இந்த நாட்டை தயவு செய்து கூறு போடாதீர்கள்.
முகத்துக்கு நேராக இங்க வந்து பேசுங்க
இந்த நாட்டில் எத்தனை கோடி இளைஞர்களுக்கு மத்திய அரசு வேலைவாய்ப்புகளை வழங்கி இருக்கிறது? மருந்து பொருட்களின் விலை உயர்ந்துவிட்டது.. பெட்ரோல் டீசல் விலை உயர்ந்துவிட்டது.. இவை பற்றி எல்லாம் பேசாத ஊடகங்கள், மேற்கு வங்கதுக்கு எதிராக மட்டும் பேசுகின்றன. என் முதுகுக்கு பின்னால் நின்று கொண்டு குற்றம் சொல்வதை விட்டுவிட்டு என் முகத்துக்ககு நேராக, இங்கே வந்து நின்று பேச வேண்டும். அதற்கு ஊடகங்கள் தயாரா?
ஊடகங்களில் போலி வீடியோக்கள்
பாஜகவினரால் நடத்தப்படும் ஊடகங்களில் மேற்கு வங்க வன்முறைகள் என பொய்யான வீடியோக்களை ஒளிபரப்புகின்றனர். கர்நாடகா மாநிலத்தில் நிகழ்ந்த 8 வன்முறை வீடியோக்களை மேற்கு வங்க மாநிலத்தில் நடந்ததாக காட்டி இருக்கின்றனர்; உபி, பீகார், ராஜஸ்தானில் நடந்த வீடியோக்களை எல்லாம் மேற்கு வங்கத்தில் நிகழ்ந்த வன்முறைகள் என ஒளிபரப்பி மேற்கு வங்க மாநிலத்துக்கு அவப்பெயரை உருவாக்குகின்றன இந்த ஊடகங்கள். இதற்காக அவர்கள் வெட்கப்பட வேண்டும். இவ்வாறு மமதா பானர்ஜி தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications