பத்ம விருதை ஏற்க மறுத்தவர்- நந்திகிராம், சிங்கூர் புரட்சிகளால் இடதுசாரிகள் 'வீழ' காரணமான புத்ததேவ்!
கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலத்தில் இடதுசாரிகள் அரசின் 34 ஆண்டுகால சரித்திரத்தின் கடைசி முதல்வராக இருந்தவர் புத்ததேவ் பட்டாச்சார்யா. மத்தியில் ஆளும் பாஜக அரசு பத்ம பூஷண் விருதை வழங்க முன்வந்த போது இடதுசாரி கொள்கையின் காரணமாக அதனை ஏற்க மறுத்தவர் புத்ததேவ் பட்டாச்சார்யா. தமக்கு முன்னத்தி ஏரான முதுபெரும் ஜோதிபாசு போலவே தம்முடைய உடலை மருத்துவ மாணவர்களின் ஆய்வுக்காக ஒப்படைத்துவிட்டு வழிகாட்டி சென்றிருக்கிறார் மகத்தான இடதுசாரித் தலைவர் புத்ததேவ் பட்டாச்சார்யா.
மேற்கு வங்கத்தில் 1944-ம் ஆண்டு அர்ச்சகர் குடும்பம் ஒன்றில் பிறந்தவர் புத்ததேவ் பட்டாச்சார்யா. மேற்கு வங்கத்தின் புகழ்பெற்ற கவிஞர் சுகந்த பட்டாச்சார்யாவின் உறவினர். கொல்கத்தா பிரசிடென்சி கல்லூரியில் வங்க இலக்கியப் பட்டப் படிப்பு படித்தார். கல்லூரி படிப்புக்குப் பின்னர் ஆசிரியராகப் பணிபுரிந்தார். பின்னர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் (சிபிஎம்) கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டார்.

1968-ம் ஆண்டு முதல் 1981-ம் ஆண்டு வரை சிபிஎம் கட்சியின் இளைஞர் பிரிவின் தலைவராக இருந்தார். 1977-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் போட்டியிட்டு எம்.எல்.ஏ.வானார். மேற்கு வங்கத்தில் ஜோதிபாசு தலைமையிலான இடதுசாரி அரசில் அமைச்சராகவும் பதவி வகித்தார். ஆனால் 1982-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் தோல்வியைத் தழுவினார். பின்னர் ஜாதவ்பூர் தொகுதியில் தொடர்ந்து போட்டியிட்டு 2011-ம் ஆண்டு வரை வெற்றி பெற்றார். 1987-ம் ஆண்டு முதல் அடுத்தடுத்த ஜோதிபாசு அமைச்சரவையில் தொடர்ந்து இடம் பிடித்தார். ஆனால் 1993-ம் ஆண்டு முதல்வர் ஜோதிபாசுவுடன் ஏற்பட்ட கருத்து மோதலால் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். பின்னர் மீண்டும் அமைச்சரவையில் சேர்த்துக் கொள்ளப்பட்டார்.
2000-ம் ஆண்டு முதல்வர் பதவியில் இருந்து ஜோதிபாசு விலக, முதல்வரானார் புத்ததேவ் பட்டாச்சார்யா. 2001-ம் ஆண்டு முதல் 2010-ம் ஆண்டு வரை 10 ஆண்டுகள் (2 முறை) மேற்கு வங்க முதல்வராக இருந்தார் புத்ததேவ் பட்டாச்சார்யா.
புத்ததேவ் ஆட்சிக் காலத்தில் நந்திகிராம், சிங்கூர் ஆகிய இடங்களில் டாடா நிறுவனத்துக்காக பல்லாயிரக்கணக்க்கான ஏக்கர் விவசாய நிலங்கள் கையகப்படுத்தப்பட்டன. இதற்கு எதிராக விவசாயிகள் வீரம் செறிந்த போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்தை மமதா பானர்ஜி தமக்கான அரசியலாக கையகப்படுத்தினார். உழுபவனுக்கே நிலம் சொந்தம் என உரிமை முழக்கம் எழுப்பிய இடதுசாரிகளா? உழுபவனின் நிலத்தை டாடாவுக்கே சொந்தம் என பிரகடனம் செய்வது என கண்டனக் குரல்கள் வலுத்தன.
இதன் விளைவாகவே மேற்கு வங்க மாநிலத்தில் 34 ஆண்டுகால இடதுசாரி அரசாங்கம் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மமதா பானர்ஜியால் வீழ்த்தப்பட்டது. அன்று வீழ்ந்து போன இடதுசாரிகள் இன்றளவும் மீண்டும் எழ முடியாமல் சுவடே தெரியாத நிலைக்கு போயுள்ளதையே சட்டசபை, லோக்சபா தேர்தல் முடிவுகள் சுட்டிக்காட்டுகின்றன.
இதன் பின்னர் உடல்நலன் பாதிப்பால் தீவிர அரசியலைவிட்டு ஒதுங்குவதாக அறிவித்தார் புத்ததேவ் பட்டாச்சார்யா. மத்திய பாஜக அரசு புத்ததேவ் பட்டாச்சார்யாவுக்கு பத்ம பூஷண் விருது வழங்க முன்வந்தது. ஒரு இடதுசாரி அரசிடம் இருந்து விருதுகளை ஏற்க மாட்டார் என்பதற்கேற்ப அதனை நிராகரித்தார். தமது முன்னத்தி ஏர் ஜோதிபாசு உள்ளிட்ட இடதுசாரித் தலைவர்களைப் போல தமது உடலையும் மருத்துவ மாணவர்களின் ஆய்வுக்காக மருத்துவக் கல்லூரியில் ஒப்படைத்துள்ளார் புத்ததேவ் பட்டாச்சார்யா!












Click it and Unblock the Notifications