ஒற்றை ரோசாவும் காலைவாரிடுச்சே... மே.வங்க ஒரே காங். எம்.எல்.ஏ. திரிணாமுல் காங்.-க்கு தாவல்!
கொல்கத்தா: மேற்கு வங்க சட்டசபையில் ஒரே ஒரு காங்கிரஸ் எம்.எல்.ஏ.வான பைரோன் பிஸ்வாஸ், ஆளும் திரிணாமுல் காங்கிரஸில் இணைந்துள்ளார். இதனால் மேற்கு வங்க சட்டசபையில் காங்கிரஸ் கட்சிக்கு எம்.எல்.ஏ.க்களே இல்லை.
மேற்கு வங்க சட்டசபைக்கு 2021-ம் ஆண்டு தேர்தல் நடைபெற்றது. இத்தேர்தலில் காங்கிரஸ் மற்றும் இடதுசாரிகள் இணைந்து போட்டியிட்டன. ஆனால் இந்த கூட்டணியால் ஒரு இடத்தில் கூட வெல்ல முடியவில்லை. அண்மையில் நடைபெற்ற இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் பைரோன் பிஸ்வாஸ் வென்றார். இதனால் மேற்கு வங்க சட்டசபையில் காங்கிரஸ் கட்சிக்கு ஒரே ஒரு எம்.எல்.ஏ. கிடைத்தது.

தேசிய அளவில் காங்கிரஸ் கட்சி, திரிணாமுல் காங்கிரஸ் ஆகியவற்றை உள்ளடக்கிய மெகா கூட்டணி அமைக்க எதிர்க்கட்சித் தலைவர்கள் முயற்சிக்கின்றனர். இந்த முயற்சிகள் நடைபெறுகிற போது அல்லது காங்கிரஸ்- திரிணாமுல் காங்கிரஸ் கூட்டணி பேச்சுவார்த்தை நடைபெறும் போது காங்கிரஸ் எம்.எல்.ஏக்களை திரிணாமுல் தங்கள் பக்கம் வளைப்பது வாடிக்கையாக உள்ளது.
கோவாவில் காங்கிரஸ் கட்சியையே இல்லாமல் அழித்துவிட்டது திரிணாமுல் காங்கிரஸ். ஒட்டுமொத்த காங்கிரஸ் எம்.எல்.ஏக்களும் திரிணாமுல் காங்கிரஸ் பக்கம் போனதால் அப்போது காங்கிரஸ் மேலிடம் மமதாவை கடுமையாக சாடி வந்தது.
தற்போது பீகார் முதல்வர் நிதிஷ்குமார் தலைமையில் காங்கிரஸை உள்ளடக்கிய எதிர்க்கட்சிகளின் மெகா கூட்டணி முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பீகார் தலைநகர் பாட்னாவில் ஜூன் 12-ல் அனைத்து எதிர்க்கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது.

இந்நிலையில் மேற்கு வங்க சட்டசபையில் இருந்த் ஒரே ஒரு காங்கிரஸ் எம்.எல்.ஏ.வான பைரோன் பிஸ்வாஸை திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தங்களது கட்சியில் சேர்த்துக் கொண்டது. இதனால் மேற்கு வங்க சட்டசபையில் காங்கிரஸுக்கு எம்.எல்.ஏக்களே இல்லாத அவல நிலை ஏற்பட்டுவிட்டது. திரிணாமுல் காங்கிரஸின் தேசிய பொதுச்செயலாளர் அபிஷேக் பானர்ஜி முன்னிலையில் மிட்னாப்பூர் மாவட்ட நிகழ்ச்சி ஒன்றில் பைரோன் பிஸ்வாஸ் கட்சி தவினார். இது காங்கிரஸ் கட்சியினரை கொந்தளிக்க வைத்துள்ளது. இந்த கட்சித் தாவலால் எதிர்க்கட்சிகளின் பாட்னா சங்கமம் கேள்விக்குள்ளாகக் கூடிய சாத்தியமும் இருக்கிறது எனவும் கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications