டீ மீட்டிங்கில் தீரும் பிரச்னை இல்லை.. தமிழக அரசு வைத்த வாதம்: சட்டென சுப்ரீம் கோர்ட் சொன்னது இதான்!
டெல்லி: ஆளுநர் vs தமிழக அரசு வழக்கு விசாரணையின்போது, தமிழக அரசின் வாதத்தை ஏற்க மறுத்த உச்ச நீதிமன்றம், குடியரசுத் தலைவரை நாங்கள் தடுக்க முடியாது எனத் தெரிவித்துள்ளது.
தமிழக அரசு சார்பில் நிறைவேற்றி அனுப்பப்பட்ட மசோதாக்களைக் கிடப்பில் வைத்திருக்கும் தமிழக ஆளுநர் ஆர்.என். வியின் செயல்பாட்டிற்கு எதிராகவும், நிறுத்தி வைத்திருக்கும் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க ஆளுநருக்கு உடனே உத்தரவிடக் கோரியும் உச்சநீதிமன்றத்தில் கடந்த அக்டோபர் 31ஆம் தேதி தமிழக அரசு சார்பில் அவசர வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இதனையடுத்து ஆளுநரின் செயல்பாடுகளை உச்சநீதிமன்றமும் விமர்சித்திருந்து.

இதனையடுத்து தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களை ஆளுநர் ரவி தமிழக அரசுக்கு அவசர அவசரமாக திருப்பி அனுப்பினார். இந்த மசோதாக்கள் மீண்டும் சட்டப்பேரவையில் நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அந்த மசோதாவிற்கு ஆளுநர் ஒப்புதல் கொடுக்காமல் குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைத்தார். இது மீண்டும் சர்ச்சைக்குள்ளான நிலையில் வழக்கு விசாரணை உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
ஆளுநர் vs அரசு: இந்நிலையில் இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு முன்பு விசாரிக்கப்பட்டது. அப்போது தமிழக அரசு சார்பில், "நிலுவையில் உள்ள மசோதாக்கள் தொடர்பாக ஆளுநரை சந்தித்துப் பேச முதலமைச்சர் தயார். குடியரசுத் தலைவருக்கு ஆளுநர் அனுப்பிய மசோதாக்கள் மீது எந்த முடிவும் எடுக்கக் கூடாது என உத்தரவு பிறப்பிக்க வேண்டும்" என உச்சநீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட், "ஆளுநர் தாமாக முன் வந்து முதலமைச்சரை சந்தித்துப் பேசி இருக்க வேண்டும். முதலமைச்சருக்கும் ஆளுநருக்கும் இடையே சுமூக உறவு இருந்தால்தான் பிரச்சனைகளை தீர்க்க முடியும். உச்சநீதிமன்றம் கூறிய பிறகு முதலமைச்சரை சந்திப்பதாக ஆளுநர் கூறியது ஏன்? ஆளுநர் தாமாக முன்வந்து அதனைச் செய்திருக்க வேண்டும்" எனத் தெரிவித்தார்.
டீ மீட்டிங்கில் தீரும் பிரச்சனை இல்லை: அட்டர்னி ஜெனரல் ஆர் வெங்கடரமணி, மேற்கு வங்கத்தில் உள்ள பல்கலைக்கழகங்களின் பிரச்சனையை உதாரணமாகக் குறிப்பிட்டார் . அந்த வழக்கில் நீதிமன்றத்தின் ஆலோசனையின்படி அவர் தலையிட்டதைத் தொடர்ந்து, மேற்கு வங்க மாநில முதல்வருக்கும் ஆளுநருக்கும் இடையே பிரச்சனைகளுக்கு தீர்வு ஏற்பட்டதாகவும், தமிழகத்திலும் அவ்வாறே செய்ய முடியும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.

மூத்த வழக்கறிஞர் அபிஷேக் சிங்வி வாதிடுகையில், தேநீர் சந்திப்பில் இந்தப் பிரச்சினையைத் தீர்க்க முடியாது. இது முற்றிலும் அரசியலமைப்புச் சட்டம் தொடர்பானது. இந்த நீதிமன்றம் தீர்மானிக்க வேண்டிய விஷயம் இது எனத் தெரிவித்தார். அதற்கு அட்டர்னி ஜெனரல், ஏன் நீங்கள் அவர்கள் சந்தித்துப் பேசும் வரை காத்திருக்கக் கூடாது எனக் குறுக்கிட்டார்.
முதலில் பேசட்டும்: அதைத் தொடர்ந்து நீதிபதிகள், "இந்த விஷயத்தில் நாங்கள் செய்ய வேண்டியதை நாங்கள் செய்வோம், ஆனால் இதற்கிடையில் ஆளுநர் மற்றும் முதல்வர் ஏன் சந்திக்கக் கூடாது? முதலமைச்சருக்கும் ஆளுநருக்கும் இடையே ஏதாவது ஒரு வாய்ப்பு திறந்திருக்க வேண்டும். குறைந்தபட்சம் அவர்கள் ஒருவருக்கொருவர் பேச ஆரம்பிக்கட்டும். சர்ச்சையை தீர்ப்போம். நிர்வாகத்தின் செயல்பாடு தொடர வேண்டும்" என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.
விசாரணையின் போது, தமிழக அரசு தரப்பில் வாதிட்ட மூத்த வழக்கறிஞர் அபிஷேக் சிங்வி, இந்த பிரச்சனை முடிவடையும் வரை குடியரசுத் தலைவர் தனக்கு பரிந்துரைக்கப்பட்ட மசோதாக்கள் மீது முடிவெடுப்பதில்லை என்பதை உறுதிப்படுத்த ஒரு உத்தரவை பிறப்பிக்குமாறு வலியுறுத்தினார். "அடுத்த முறை வழக்கு விசாரணைக்கு வரும்போது குடியரசுத் தலைவர் மசோதாக்களை நிறைவேற்றிவிட்டார் அல்லது நிராகரித்துவிட்டார் என்ற சிக்கல் இருக்க வேண்டாம். தற்போதைய நிலை தொடர வேண்டும்" என்று அபிஷேக் சிங்வி வாதிட்டார்.
ஜனாதிபதிக்கு உத்தரவிட முடியாது: அதற்கு தலைமை நீதிபதி சந்திரசூட், "இந்திய ஜனாதிபதியை நாங்கள் தடை செய்ய விரும்பவில்லை. அது நன்றாக இருக்காது. மசோதாக்கள் ஏற்கனவே குடியரசுத் தலைவரிடம் சென்றிருந்தால், அதில் எந்த முடிவும் எடுக்க வேண்டாம் என்று குடியரசுத் தலைவரிடம் நாங்கள் கேட்க முடியாது" என்று கூறினார். பின்னர் இந்த விவகாரத்தை அட்டர்னி ஜெனரலைக் கவனிக்குமாறு வாய்மொழியாக உத்தரவிட்டு, ஆளுநருக்கு எதிரான தமிழக அரசின் மனுவை ஜனவரி மூன்றாவது வாரத்திற்கு ஒத்திவைத்தது.












Click it and Unblock the Notifications