கோவாவில் மீண்டும் மமதா பானர்ஜி முகாம்.. கூட்டணி இல்லை என ஆம் ஆத்மி மறுப்பு!
பனாஜி: கோவா சட்டசபை தேர்தல் குறித்து ஆலோசனை நடத்துவதற்காக மேற்கு வங்க முதல்வரும் திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மமதா பானர்ஜி இன்று மீண்டும் பனாஜி வருகை தந்தார். கோவா சட்டசபை தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி இல்லை என ஆம் ஆத்மி கட்சி அறிவித்துள்ளது.
கோவா சட்டசபைக்கு அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெற உள்ளது. கோவாவில் ஆளும் பாஜக ஆட்சியை தக்க வைக்க முயற்சிக்கிறது. பிரதான எதிர்க்கட்சியாக இருந்த காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள், நிர்வாகிகள், தலைவர்கள் பாஜகவுக்கும் திரிணாமுல் காங்கிரஸுக்கும் தாவிவிட்டனர்.
தற்போதைய நிலையில் கோவா சட்டசபையில் காங்கிரஸ் கட்சிக்கு மொத்தம் 3 எம்.எல்.ஏக்கள்தான் உள்ளனர். கோவாவில் காங்கிரஸின் இடத்தை கைப்பற்ற திரிணாமுல் காங்கிரஸ், ஆம் ஆத்மி கட்சிகள் முயற்சிக்கின்றன.

கோவாவில் மமதா
கோவா சட்டசபை தேர்தலுக்கான திரிணாமுல் காங்கிரஸ் பொறுப்பாளராக லோக்சபா எம்.பி. மஹூவா மொய்த்ரா நியமிக்கப்பட்டுள்ளார். காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளராக முன்னாள் மத்திய அமைச்சரும் மூத்த தலைவருமான ப.சிதம்பரம் நியமிக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் இன்று கோவாவுக்கு மீண்டும் மமதா பானர்ஜி வருகை தந்துள்ளார்.

மீண்டும் வந்த மமதா
பனாஜி வருகை தந்த மமதாவுக்கு திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் உற்சாக வரவேற்பு அளித்தனர். கோவாவில் நாளையும் நாளை மறுநாளும் மமதா பானர்ஜி தங்குகிறார். கோவா சட்டசபைத் தேர்தலை எதிர்கொள்வது தொடர்பான வியூகங்கள் குறித்து திரிணாமுல் காங்கிரஸ் நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்த உள்ளார். கோவாவில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தொடங்கப்பட்ட பின்னர் மமதா பானர்ஜி 2-வது முறையாக அம்மாநிலத்துக்கு வருகை தந்துள்ளார்.

ஆம் ஆத்மி மறுப்பு
இதனிடையே கோவா சட்டசபைத் தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைக்கமாட்டோம் என ஆம் ஆத்மி கட்சி அறிவித்துள்ளது. இது தொடர்பாக கோவா மாநில ஆம் ஆத்மி பொறுப்பாளர் அதிஷி, திரிணாமுல் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி தொடர்பாக எந்த பேச்சுவார்த்தையும் நடத்தவில்லை. திரிணாமுல் காங்கிரஸுடன் ஆம் ஆத்மி கட்சி கூட்டணி அமைக்காது. எங்களைப் பொறுத்தவரையில் கோவாவில் புதிய மாற்று அரசாங்கத்தைத் தர வேண்டும் என்பதுதான் நிலைப்பாடு என்றார்.

கோவா கருத்து கணிப்புகள்
கோவாவைப் பொறுத்தவரை ஆளும் பாஜக ஆட்சியைத் தக்க வைக்கும் என்கின்றன கருத்து கணிப்புகள். காங்கிரஸ் கட்சிக்கு அடுத்த தேர்தலில் சிங்கிள் டிஜிட் இடங்கள்தான் கிடைக்கும் என்றும் கருத்து கணிப்புகள் சுட்டிக்காட்டியிருப்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications