ஒவ்வொருத்தருக்கும் ரூ.50 லட்சம்.. இப்படி நடக்குதே! முக்கிய மேட்டர்.. மோடிக்கு பறந்த மம்தாவின் கடிதம்
கொல்கத்தா: நாடு முழுவதும் நடைபெற்று முடிவுகள் வந்திருக்கும் நீட் தேர்வில் முறைகேடு நடந்திருப்பதாக விமர்சனங்கள் எழுந்துள்ள நிலையில் நீட் முறைகேடு காரணமாக அத்தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டுமென திரிணாமுல் காங்கிரஸ் தலைவரும், மேற்கு வங்க மாநில முதலமைச்சருமான மம்தா பானர்ஜி பிரதமர் நரேந்திர மோடிக்கும் கடிதம் எழுதியுள்ளார்.
நேசனல் டெஸ்டிங் ஏஜென்சி எனப்படும் தேசிய தேர்வு முகமை எம்பிபிஎஸ், பிடிஎஸ் உள்ளிட்ட இளங்கலை மருத்துவப்படிப்புகளுக்கான தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வை கடந்த மே மாதம் 5ஆம் தேதியன்று நடத்தியது.

நாடு முழுவதும் 557 நகரங்கள் மற்றும் 14 வெளிநாடுகளில் நீட் மே 5ஆம் தேதியான அன்று தேர்வு பிற்பகல் 2 மணி முதல் மாலை 5:20 மணி வரை நடைபெற்ற நிலையில் , சுமார் 24 லட்சம் மாணவர்கள் இந்த தேர்வுக்கு விண்ணப்பத்த நிலையில் 23 லட்சம் பேர் வரை தேர்வில் கலது கொண்டனர்.
தமிழகத்தில் மட்டும் சுமார் ஒன்றரை லட்சம் மாணவர்கள் தேர்வை எழுதினர். இதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் தேசிய தேர்வுகள் முகமை செய்திருந்த நிலையில் பெரிய அளவில் தமிழகத்தில் முறைகேடுகள் இல்லாமல் நடைபெற்றது. அதே நேரத்தில் பல மாநிலங்கள் முறைகேடுகள் நடந்ததாக புகார்கள் எழுந்தன. இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் நீட் தேர்வு முடிவுகள் வெளியாயின. அதாவது மே மாதம் 5 ஆம் தேதி தேர்வுகள் நடைபெற்ற நிலையில், தேர்வுக்கான முடிவுகள் கடந்த ஜூன் 5ஆம் தேதி வெளியானது.
அதில் 13 16,268 மாணவர்கள் தேர்ச்சி பெற்றனர். அதாவது 56.41% சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி பெற்றதாகவும், இந்த தேர்ச்சி சதவீதம் கடந்த ஆண்டை விட 0.2% சதவீதம் அதிகமாகும் என எண்டிஏ கூறியிருந்தது. இந்நிலையில் இந்த ஆண்டு வெளியான முடிவுகளிலும், தேர்விலும் முறைகேடு நடந்துள்ளதாக பரபரப்பு புகார் எழுந்துள்ளது. நாடு முழுவதும் உள்ள 67 மாணவர்கள் முழு மதிப்பெண்கள் எடுத்து முதலிடம் பெற்று சாதனை படைத்துள்ள நிலையில், நடந்து முடிந்த நீட் தேர்வில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாக மாணவர்கள் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளனர்.
அதாவது, ஹரியானா மாநிலத்தில் ஒரே மையத்தில் தேர்வு எழுதிய 6 பேர் 720 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பிடித்ததால் சர்ச்சை எழுந்துள்ளது. மேலும் வினாத்தாள் விற்பனை, கருணை மதிப்பெண் குளறுபடி உள்ளிட்ட பல்வேறு புகார்கள் எழுந்த நிலையில் குறிப்பிட்ட மாணவர்களுக்கு மறு தேர்வு நடத்தப்பட்டது. ஆனாலும் இந்த விவகாரத்தை விட்டு விடாத எதிர்க்கட்சிகள் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்து வருகின்றன. இது தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இதே கோரிக்கை வலியுறுத்தி காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி, தமிழக முதலமைச்சரும் திமுக தலைவரும்கான மு.க.ஸ்டாலின் ஆகியோரும் பல அறிக்கைகளை வெளியிட்டுள்ளனர்.
இந்த நிலையில் நீட் தேர்வு குளறுபடியால் அந்த தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டுமென திரிணாமுல் காங்கிரஸ் தலைவரும், மேற்கு வங்க மாநில முதலமைச்சருமான மம்தா பானர்ஜி பிரதமர் நரேந்திர மோடிக்கும் கடிதம் எழுதியுள்ளார். அதில்,” தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வை ரத்து செய்து, மாநில அரசால் நடத்தப்படும் முந்தைய தேர்வு நடைமுறையை மீட்டெடுக்க வேண்டும், ஏனெனில் தற்போதைய முறை மிகப்பெரிய ஊழலுக்கு வழிவகுத்துள்ளது.
வினாத் தாள் கசிவு, குறிப்பிட்ட நபர்கள் மற்றும் தேர்வு நடத்தும் அதிகாரிகள் லஞ்சம் பெற்றது, குறிப்பிட்ட மாணவர்கள் தேர்வுக்கு விண்ணப்பிக்க வசதியாக முறைகேடு, கருணை மதிப்பெண்கள் போன்ற குற்றச்சாட்டுகள் நடந்துள்ளன. இத்தகைய நிகழ்வுகள் இந்த மருத்துவப் படிப்புகளில் சேருவதற்கு எதிர்பார்த்திருக்கும் லட்சக்கணக்கான மாணவர்களின் எதிர்காலத்திற்கு ஆபத்தை ஏற்படுத்துகின்றன.
தற்போதைய நீட் தேர்வு அமைப்பு மிகப் பெரிய ஊழலுக்கு வழிவகுத்துள்ளது, இது பணம் செலுத்தக்கூடிய பணக்காரர்களுக்கு மட்டுமே பயனளிக்கிறது, அதே நேரத்தில் ஏழை மற்றும் நடுத்தர வகுப்பைச் சேர்ந்த திறமையான மாணவர்கள் மிகப்பெரிய அளவில் பாதிக்கப்படுகிறார்கள். மாநிலங்கள் சொந்தமாக நுழைவுத் தேர்வுகளை நடத்த அனுமதிக்கப்பட்ட முந்தைய மாணவர் சேர்க்கை முறையை மீண்டும் அமல்படுத்த வேண்டும்.
ஒவ்வொரு மருத்துவரை உருவாக்க மாநில அரசு ரூ.50 லட்சத்திற்கும் மேல் செலவு செய்கிறது என்றும் அதனால், மருத்துவ படிப்புகளுக்கு நுழைவுத் தேர்வு நடத்தும் அதிகாரம் மாநிலங்களுக்கே உண்டு. நீட் தேர்வை முழுவதுமாக ரத்து செய்து, அந்தந்த மாநிலங்களே மருத்துவ படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வை நடத்தும் முறையை மீண்டும் நடைமுறைக்கு கொண்டுவர வேண்டும்” என பிரதமர் மோடிக்கு மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications