"92% வாக்குப்பதிவு.." சம்பவம் செய்த எஸ்ஐஆர்? மம்தாவுக்கு அதிர்ச்சி கொடுத்த மேற்கு வங்க மேஜிக்!
கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் வாக்குப்பதிவு விகிதம் கணிசமாக அதிகரித்துள்ளது. முதற்கட்ட வாக்குப்பதிவில் இதுவரை இல்லாத வகையில் 90%க்கு மேல் வாக்குகள் பதிவாகியுள்ளது. இது அங்கு வரலாற்றுச் சாதனையாகவே பார்க்கப்படுகிறது. அங்கு இந்தளவுக்கு வாக்குப்பதிவு அதிகரிக்க என்ன காரணம்.. இதன் பின்னணி குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்!
தமிழ்நாட்டைப் போலவே மேற்கு வங்கத்திலும் நேற்று வாக்குப்பதிவு நடந்தது. மேற்கு வங்கத்தில் முதற்கட்டமாக 152 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடந்தது. அதில் இதுவரை இல்லாத வகையில் 92 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது.

92% வாக்குப்பதிவு
மேற்கு வங்கத்தின் முதற்கட்டத் தேர்தலில் பதிவான இந்த 92 சதவீத வாக்குப்பதிவு, மாநில வரலாற்றிலேயே இல்லாத ஒரு சாதனையாகப் பார்க்கப்படுகிறது. ஆனால், இந்த எண்களுக்குப் பின்னால் இரண்டு முக்கியமான விஷயங்களை நாம் பார்க்க வேண்டும். வாக்குப்பதிவு விகிதத்தை வைத்துப் பார்த்தால் இது ஒரு வரலாற்றுச் சாதனையாகத் தோன்றும். ஆனால், அங்குத் தேர்தலுக்கு முன்பு வாக்காளர் பட்டியலில் செய்யப்பட்ட மிகப்பெரிய நீக்கம்.. மற்றொன்று, புதிய வாக்காளர்களின் சேர்க்கை என இரண்டையும் நாம் சேர்த்துப் பார்க்க வேண்டும்.
அங்குள்ள சூழலைப் புரிந்து கொள்ள நாம் இரு தொகுதிகளை எடுத்துக் கொள்வோம். சம்செர்கஞ்ச் மற்றும் மைனாகுரி ஆகிய இரண்டு தொகுதிகளை ஒரு உதாரணத்திற்கு எடுத்துக் கொள்வோம்.
இரு தொகுதிகள்
சம்செர்கஞ்ச் தொகுதி என்பது முர்ஷிதாபாத் மாவட்டத்தின் இந்தத் தொகுதி ஒரு விசித்திரமான உதாரணம். தேர்தல் ஆணையத்தின் SIR நடவடிக்கையில் மூலம் இங்கு சுமார் 74,000 பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன. நீக்கப்பட்ட வாக்காளர்களில் 98.8 சதவீதம் பேர் ஒரு குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. நம்பர்படி பார்த்தால், 2021ல் 2.35 லட்சம் வாக்காளர்கள் இருந்தபோது 1.88 லட்சம் வாக்குகள் பதிவாகின. ஆனால் 2026-ல், வாக்காளர் எண்ணிக்கை 1.61 லட்சமாகக் குறைந்ததால், பதிவான 1.55 லட்சம் வாக்குகள் பதிவாகியுள்ளது. அதாவது 96 சதவீத வாக்குப்பதிவு என்ற பிரம்மாண்டமான பிம்பத்தைக் கொடுத்துள்ளது.
உண்மையில், வாக்குப்பதிவைச் சதவிகிதமாகப் பார்த்தால் அது பெரியளவில் அதிகரித்திருந்தாலும், பதிவான வாக்குகளை வைத்துப் பார்க்கும்போது.. 2021ஐ விட சுமார் 33,000 வாக்குகள் குறைவாகவே பதிவாகியுள்ளன. எதிர்காலத்தில் தங்கள் வாக்குரிமையில் பிரச்சினை வந்துவிடக்கூடாது என்பதை உறுதி செய்யப் பலரும் பதறிப் போய் வாக்களித்ததாகவே களத்தில் இருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதிகரித்துள்ளதா?
அடுத்து மைனாகுரி.. சம்செர்கஞ்சிற்கு நேர் மாறானது மைனாகுரி தொகுதியின் நிலவரம். இங்குள்ள டேட்டாவை பார்த்தால் வாக்குகள் அதிகரித்துள்ளது தெளிவாகவே தெரிகிறது. 2021-ல் 2.51 லட்சமாக இருந்த வாக்காளர்கள், தற்போது 2.58 லட்சமாக அதிகரித்துள்ளனர். வாக்குப்பதிவு 95 சதவீதத்தை எட்டியுள்ளதால், 2021ஐ விட சுமார் 9,500 வாக்குகள் கூடுதலாகப் பதிவாகியுள்ளன. வாக்கு வங்கு மட்டும் சுருங்கவில்லை.. புதிய வாக்காளர்களும், இதுவரை வாக்களிக்காத மௌன வாக்காளர்களும் ஆர்வத்துடன் வந்து ஜனநாயகக் கடமையை ஆற்றியதன் வெளிப்பாடு தான் இது.
முக்கியம்
இந்தத் தேர்தலில் புலம்பெயர் தொழிலாளர்களின் பங்கு மிக முக்கியமானது. வேலைக்காக வெளியூர் சென்றவர்கள், தங்களின் வாக்குரிமையைத் தக்கவைக்க பெரும் திரளாகச் சொந்த ஊர் திரும்பியுள்ளனர். மேலும், இப்போது வாக்களிக்கவில்லை என்றால் எதிர்காலத்தில் தங்கள் வாக்குரிமைக்குப் பிரச்சினை வருமோ என நினைத்து, மற்றவர்களும் வாக்களித்துள்ளனர். மிக முக்கியமாக, கடந்த தேர்தல்களைப் போலல்லாமல் இம்முறை வன்முறை மற்றும் முறைகேடுகள் மிகக் குறைவாக இருந்ததும், மக்கள் அச்சமின்றி வாக்களிக்க ஒரு முக்கியக் காரணமாக அமைந்தது.
அதாவது சுருக்கமாகச் சொல்ல வேண்டும் என்றால் மேற்கு வங்கத்தில் வாக்குப்பதிவு சதவிகிதம் அதிகரிக்க இரு முக்கிய காரணங்கள் உள்ளன. முதல் காரணம் எஸ்ஐஆர் நடவடிக்கை காரணமாகப் பெரியளவில் வாக்குகள் நீக்கப்பட்டுள்ளன. அடுத்துப் பெயர் நீக்கப்படாதவர்களும் எங்கு வாக்களிக்கவில்லை என்றால் அடுத்த முறை தங்கள் வாக்குரிமை பறிபோகுமோ என நினைத்து வாக்களித்துள்ளனர். இந்த இரண்டும் சேர்த்தே வாக்குகளை அதிகரித்துள்ளது.












Click it and Unblock the Notifications