Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கர்நாடகத்தில் ஹலால் செய்யப்பட்டவற்றை புறக்கணிக்கச் சொல்லும் அமைப்புகள்: என்ன நடக்கிறது?

Subscribe to Oneindia Tamil
ஹலால் விவகாரம்
Getty Images
ஹலால் விவகாரம்

கர்நாடக மாநிலத்தில் தற்போது ஹிஜாப் பிரச்சனை சற்று ஓய்ந்து, அடுத்த பிரச்சனை தலையெடுத்திருக்கிறது. அதாவது, இந்துக்கள் யாரும் ஹலால் செய்யப்பட்ட இறைச்சியை உண்ண வேண்டாமென சில அமைப்புகள் கோர ஆரம்பித்திருக்கின்றன. இதன் அடுத்தகட்டமாக ஹலால் முறைப்படி தயாரிக்கப்படும் மருந்து நிறுவனங்களை புறக்கணிக்கவும் கோருகின்றன. இந்தச் சர்ச்சையின் பின்னணி என்ன? விரிவான தகவல்கள்.

கடந்த பதினைந்து நாட்களுக்குள் கர்நாடக மாநிலத்தில் மதம் சார்ந்து தொடர்ச்சியாக ஏதாவது சம்பவங்கள் நடந்தபடி இருக்கின்றன. முதலில், ஹிஜாப் அணிவது தொடர்பான பிரச்சனையில் உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு வெளியானது. இதற்கடுத்து, இந்துக் கோவில் திருவிழாக்களில் இஸ்லாமியர்கள் கடைகளை வைக்க தடை விதிக்கும் பிரச்சனை எழுந்தது. இப்போது ஹலால் செய்யப்பட்ட இறைச்சி உள்ளிட்டவற்றை புறக்கணிக்க வேண்டுமென்ற விவகாரம் எழுந்திருக்கிறது.

கர்நாடக மாநிலத்தைப் பொறுத்தவரை, கன்னடப் புத்தாண்டு 'ஹொசதொடக்கு' அல்லது 'வர்ஷத தொடக்கு' என்ற பெயரில் மிகுந்த உற்சாகத்துடன் கொண்டாடப்படும். இந்த நாளின்போது மாநிலத்தின் பெரும் பகுதிகளில் குறிப்பாக, தென் கன்னடப் பகுதிகளில் உறவினர்கள், நண்பர்களுடன் இணைந்து அசைவ உணவை உண்டு மகிழ்வது வழக்கம்.

இப்போது அந்த விவகாரத்தைத்தான் கையில் எடுத்திருக்கின்றன இந்து அமைப்புகள். "இந்த ஆண்டு ஹொசதொடக்கின்போது, யாரும் ஹலால் செய்யப்பட்ட இறைச்சியை வாங்க வேண்டாமென இந்து சமூகத்தினரைக் கேட்டுக்கொள்கிறோம். ஹலால் செய்வது என்பது இஸ்லாமியர்களின் பழக்கம். குரானிலிருந்து மந்திரங்களை ஓதி அல்லாவின் பெயரால் அவர்கள் மிருகங்களை வெட்டுவார்கள். அந்த இறைச்சி முதலில் அவர்களது கடவுளுக்குப் படைக்கப்படுகிறது. அதே இறைச்சியை மீண்டும் இந்துக் கடவுளுக்கு படைக்க முடியாது. இது இந்து சாஸ்திரங்களுக்கு விரோதமானது" என பிபிசியிடம் கூறினார் ஹிந்து ஜன ஜாக்ருதி சமிதியின் செய்தித் தொடர்பாளரான மோகன் கௌடா.

பாரதீய ஜனதாக் கட்சியும் இதே குரலில் பேசுகிறது. பிபிசியிடம் பேசிய பா.ஜ.கவின் தேசியச் செயலர் சி.டி. ரவி, "நம்முடைய நாடு மதச்சார்பற்ற நாடு. பிறகு ஏன் இதனை ஹலால் எனச் சொல்ல வேண்டும். ஹலால் என்று முத்திரை குத்தாதீர்கள். அதை சாப்பிட விரும்பாதவர்கள் வாங்க மாட்டார்கள். சாப்பிட விரும்புபவர்கள் வாங்குவார்கள். ஹலால் என்றுதான் அழைக்க வேண்டுமென்றால், அது பொருளாதார ஜிகாத். ஒரு இஸ்லாமியர் ஹலால் இறைச்சிதான் வேண்டுமென்று சொன்னால், நான் ஏன் ஹலால் இறைச்சியை வாங்க வேண்டுமென ஒரு இந்து கேட்கக்கூடும். அதில் என்ன தவறு இருக்கிறது?" என்றார்.

பா.ஜ.கவின் தேசியச் செயலர் சி.டி. ரவி
Getty Images
பா.ஜ.கவின் தேசியச் செயலர் சி.டி. ரவி

ஹிந்து ஜன ஜாக்ருதி சமிதி முன்னெடுத்த இந்த விவகாரத்தை தற்போது பல்வேறு இந்து அமைப்புகள் கையில் எடுத்துள்ளன. இது தொடர்பான துண்டுப் பிரசுரங்களை மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் இவர்கள் வழங்கிவருகின்றனர். இந்துக்கள் நடத்தும் கடைகளிலும் உள்ள ஹலால் என்ற பெயர் பொறிக்கப்பட்ட பலகைகளை அகற்ற வேண்டுமென இவர்கள் கூறிவருகின்றனர்.

ஹலால் இறைச்சி - ஜட்கா இறைச்சி: வித்தியாசம் என்ன?ஹலால் இறைச்சிக்கும் ஜட்கா இறைச்சிக்கும் இடையில் இருக்கும் வித்தியாசம் என்ன என்பதை பார்க்கலாம்.

பெங்களூரு ஜும்மா மசூதியில் உள்ள மௌலானா மக்சூத் இம்ரான் ரஷாடியிடம் இது குறித்து கேட்டபோது, "ரத்தம் இறைச்சியிலேயே தங்கிவிட்டால், பல நோய்கள் வரக்கூடும் என இறைத் தூதர் முகமது நபி சொல்கிறார். ரத்தத்தை வடித்த பிறகு அந்த இறைச்சியை பயன்படுத்தினால் அந்த நோய்களில் இருந்து மனிதர்களைப் பாதுகாக்கலாம். இதற்குப் பெயர் ஜபிஹா" என்று தெரிவித்தார்.

ஜபிஹாவை நிறைவேற்ற வெட்டப்படும் மிருகம் தரையில் படுக்கவைக்கப்பட்டு, பிஸ்மில்லாஹி அல்லாஹு அக்பர் என்ற வசனம் ஓதப்பட்டு, அதன் கழுத்து அறுக்கப்படுகிறது. தலையும் உடலும் துண்டிக்கப்படாமல், ரத்தம் மட்டும் வெளியேறும் வகையில் கழுத்தில் உள்ள ரத்தக்குழாய்கள் வெட்டப்படுகின்றன" என்கிறார் மௌலானா மசூத்.

ஆனால், ஜட்கா முறையில், கழுத்தும் உடலும் உடனடியாகத் துண்டிக்கப்படுகின்றன என்கிறார் அவர்.

ஆனால், தாங்கள் முஸ்லிம்களுக்கு எதிராக இல்லை என்கிறார் மோகன் கவுடா. " இந்தக் கோரிக்கை முஸ்லிம்களுக்கு எதிரானதில்லை. நமது அரசியலமைப்புச் சட்டம், உணவுப் பாதுகாப்பு விதிமுறைகளுக்கு மாறான ஹலாலுக்கு மட்டுமே எதிரானது" என்கிறார் அவர்.

ஹைதராபாதில் உள்ள நேஷனல் இன்ஸ்ட்டிடியூட் ஆஃப் நியூட்ரிஷனின் முன்னாள் துணை இயக்குனரான டாக்டர் வீணா சத்ருக்னா முற்றிலும் மாறுபட்ட ஒரு பார்வையை முன்வைக்கிறார். "ஹலால் இறைச்சி சாதாரண இறைச்சியைவிட பாதுகாப்பானது. ஒருவர் தான் விரும்பியதை உண்ணும் சுதந்திரம் இருக்கிறது என்பதைக்கூட புரிந்துகொள்ள முடியாமல் இருக்கிறோம் என்பது பரிதாபத்திற்குரியது. ஹலால் முறை என்பது காலம்காலமாக நமக்கு சொல்லப்பட்டு வந்த முறை. அதைத்தடுத்தால், அந்த முறை மறைந்துவிடும். புதிதாக வருபவர்களை இந்தத் தொழிலில் அமர்த்துவது, உணவு மூலம் பரவும் நோய்களுக்கு வழிவகுக்கலாம்" என்கிறார் அவர்.

ஹலால் விவகாரம்
Getty Images
ஹலால் விவகாரம்

இந்துக் கோவில் திருவிழாக்களில் இஸ்லாமிய வர்த்தகர்களை அனுமதிக்கக்கூடாது என்ற பிரச்சாரம் ஓய்வதற்குள் இந்தப் பிரச்சாரத்தை முன்னெடுத்துள்ளன இந்து அமைப்புகள்.

ஆனால், இந்த இரண்டு விவகாரத்திலுமே பா.ஜ.கவிற்குள்ளேயே முணுமுணுப்பு எழுந்திருப்பதுதான் ஆச்சரியம். பா.ஜ.கவைச் சேர்ந்த ஒரு எம்.எல்.சியும் ஒரு எம்.எல்.ஏவும் இதற்கு எதிர்ப்புத் தெரிவித்திருக்கிறார்கள்.

"இந்த இறைச்சி ஹலாலா, இல்லையா என்று யாரும் கேட்கவில்லை. நான் என்ன சாப்பிட வேண்டுமென்பது எனது விருப்பம். இது எனது உணவு. நான் விரும்பியதை சாப்பிடும் சுதந்திரம் எனக்கு உண்டு. நான் என்ன சாப்பிட வேண்டும், எதைச் சாப்பிடக்கூடாது என்று சொல்ல நீங்கள் யார்? இதைப் போய் அவர்கள் கிராமங்களில் சொல்லிப் பார்க்கட்டும், என்ன நடக்கிறதென்று பார்க்கலாம். அதெல்லாம் ஊடகங்களிடம் பேசுவதைப் போல எளிதான காரியமில்லை" என்கிறார் பா.ஜ.கவைச் சேர்ந்த எம்எல்சியான ஏ.எச். விஸ்வநாத்.

கோவில் திருவிழாக்களில் இஸ்லாமியர்கள் தற்காலிகக் கடைகளை அமைத்து வியாபாரம் செய்வதற்கு விதிக்கப்பட்ட தடையை எதிர்த்த முதல் எம்.எல்.ஏ. விஸ்வநாத்தான். "இம்மாதிரியான திருவிழாக்களில் முஸ்லிம்களை கடை அமைக்கவிடாமல் தடுப்பது தீண்டாமைதான். இது அரசமைப்புச் சட்டத்திற்கும் அம்பேத்கருக்கும் விரோதமானது. உண்மையில் மனிதத் தன்மையற்ற செயல்" என்கிறார் அவர்.

இதற்குப் பிறகு பெல்காவி வடக்குத் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினரான அனில் பெனகேவும் இதற்கு எதிர்ப்புத் தெரிவித்தார். அவரும் பா.ஜ.கவைச் சேர்ந்தவர்தான். "ஒரு குறிப்பிட்ட நபரிடமோ, ஒரு சமூகத்தைச் சேர்ந்தவர்களிடமோ பொருட்களை வாங்குங்கள் அல்லது வாங்காதீர்கள் என்று யாரையும் கட்டாயப்படுத்த முடியாது. பெல்காவியில் உள்ள ஜட்ராக்களிலும் மத நிகழ்வுகளிலும் கடை வைக்கக்கூடாது என முஸ்லிம் வியாபாரிகளைத் தடுக்க மாட்டோம்" என்கிறார் அவர்.

ஆனால், சட்ட அமைச்சரான ஜே.சி. மதுசுவாமி வேறு கருத்தை முன்வைக்கிறார். கர்நாடக மாநிலத்தின் இந்து சமய அறநிலையத் துறைச் சட்டங்களில் உள்ள விதிகளின்படி, கடைகளை இந்து அல்லாதவர்களுக்குக் கொடுக்க முடியாது என மாநில சட்டப்பேரவையிலேயே தெரிவித்தார் அவர். அவரது இந்தக் கருத்துக்கு எதிர்க் கட்சிகளும் பியுசிஎல் போன்ற சிவில் உரிமை அமைப்புகளும் கடும் எதிர்ப்புத் தெரிவித்தன.

மத அடிப்படையில் தடை விதிப்பது தவறு என உச்ச நீதிமன்றம் அளித்த ஒரு தீர்ப்பைச் சுட்டிக்காட்டுகிறது பியுசிஎல். "இது போல ஆந்திரப் பிரதேசத்தில் உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பை உச்ச நீதிமன்றம் ரத்து செய்திருக்கிறது. மத அடிப்படையில் தடை விதிப்பது தவறு என்றும் கூறியிருக்கிறது. அரசியல் சாஸனத்தை மறந்துவிட்டு, விதிகளைச் சுட்டிக்காட்டுவதுதான் அரசின் வேலையா? இம்மாதிரியான பாகுபாட்டை அரசு அனுமதிக்கக்கூடாது" என்கிறார் கர்நாடக மாநில பியுசிஎல்லின் தலைவரான அரவிந்த் நரேன்.

உச்ச நீதிமன்றம்
Getty Images
உச்ச நீதிமன்றம்

கர்நாடக முதலமைச்சர் பசவராஜ் பொம்மை சில அமைப்புகன் கைப்பாவையாகச் செயல்படுவதாக குற்றம்சாட்டுகிறார் முன்னாள் முதல்வரும் மதச்சார்பற்ற ஜனதா தளத்தின் தலைவருமான எச்டி குமாரசாமி. கடைகளை வைக்க முடியாமல் முஸ்லிம் வியாபாரிகளுக்குத் தடை விதிக்கப்பட்டு, நிலைமை மிக இறுக்கமானதாக மாறிய நிலையிலும் அவர் ஏதும் செய்யவில்லை எனச் சுட்டிக்காட்டுகிறார் அவர். சங்க பரிவார அமைப்புகள் அளிக்கும் அழுத்தத்தினால், ஒவ்வொரு கோவில் கமிட்டியும், இந்தத் தடையை விதிப்பதாகக் கூறுகிறார் அவர்.

"உத்தரப்பிரதேசத்தில் செய்ததை கர்நாடகத்திலும் செய்ய பா.ஜ.க. முயல்கிறது. அம்மாதிரி அரசியல் இங்கே வேலைக்காகாது" என்கிறார் குமாரசாமி.

குமாரசாமி சொல்வதை ஏற்கிறார் விஸ்வநாத். "ஒரு அரசு என்பது எல்லோருக்குமானது. இம்மாதிரியான கோரிக்கைகளை முன்வைப்பவர்கள், இந்தியர்கள் உலகின் எல்லாப் பகுதிகளிலும் வாழ்கிறார்கள் என்பதையும் இந்தியாவிற்கு வெளியில் முதலீடுகளைச் செய்திருக்கிறார்கள் என்பதையும் மனதில் கொள்ள வேண்டும். மற்ற நாடுகளும் இதேபோல செயல்பட்டால் அவர்கள் என்ன செய்வார்கள்?" என்று கேட்கிறார் அவர்.

ஹலால் இறைச்சியை எதிர்ப்பவர்கள், ஆக்ரா, காஸியாபாத் பகுதியில் உள்ள ஏற்றுமதி நிலையங்களுக்கு முன்பாகப் போய் பிரச்சாரம் செய்யட்டும் என்கிறது காங்கிரஸ். இது குறித்து பிபிசியிடம் பேசிய காங்கிரஸின் செய்தித் தொடர்பாளர் பிரிஜேஸ் கலப்பா, "ஹலால் இறைச்சிக்கு எதிராக பிரச்சாரம் செய்ய விரும்புபவர்கள், அம்மாதிரி இறைச்சி ஏற்றுமதி செய்வதை தடுத்து நிறுத்தட்டும். செந்நிற புரட்சி பற்றி 2015ல் பிரதமர் மோதி பேசினார். அப்போதிலிருந்து இறைச்சி ஏற்றுமதி மூலம் கிடைக்கும் வருமானம் 100 சதவீதம் அளவுக்கு உயர்ந்திருக்கிறது. தைரியம் இருந்தால் இவர்கள் ஆக்ராவிலும் காஸியாபாதிலும் உள்ள ஏற்றுமதி நிலையங்களுக்கு முன்பாகப் போய் பிரச்சாரம் செய்யட்டும்" என்கிறார் அவர்.

புள்ளிவிவரங்களின்படி, 2019-20ல் இந்தியாவின் ஹலால் இறைச்சி ஏற்றுமதி 14.4 பில்லியன் அமெரிக்க டாலர்களாக இருக்கிறது. உலக அளவில் இறைச்சி ஏற்றுமதியில் பிரேசிலுக்கு அடுத்த இடத்தில் இந்தியா இருக்கிறது. பிரேசில் 16.2 பில்லியன் டாலர் அளவுக்கு இறைச்சி ஏற்றுமதி செய்கிறது.

பசு, மதம், ஹிஜாப், ஹலால்: சம்பவங்களின் பட்டியல்

இந்த ஹலால் இறைச்சி விவகாரம் திடீரென எழுந்த ஒன்றல்ல. தொடர்ச்சியாக நடந்த பல்வேறு சம்பவங்களின் உச்சகட்டமாகவே இந்த விவகாரம் கையில் எடுக்கப்பட்டிருக்கிறது.

கடந்த ஓராண்டில் கர்நாடக மாநிலத்தில் மதம் சார்ந்து நிகழ்ந்த பல்வேறு சம்பவங்களின் தொகுப்பைப் பார்த்தாலே இது புரியும்.

16 பிப்ரவரி 2021 - கர்நாடக மாநில பசுப் பாதுகாப்பு மற்றும் பசு வதைத் தடைச் சட்டம் ஆளுநரின் ஒப்புதலைப் பெற்று அமலுக்கு வந்தது.

23 பிப்ரவரி 2021 - கர்நாடக மாநில மத சுதந்திர உரிமை பாதுகாப்புச் சட்டம் (2021)ஐ கர்நாடக மாநில சட்டமன்றம் நிறைவேற்றியது.

31 டிசம்பர் 2021 - உடுப்பியில் உள்ள அரசு புகுமுக பெண்கள் கல்லூரியின் மாணவிகள் சிலர் போராட்டத்தில் ஈடுபட ஆரம்பித்தனர்.

20 பிப்ரவரி 2022 - ஹர்ஷா என்ற இந்து அமைப்புச் செயற்பாட்டாளர் ஷிமோகாவில் கொல்லப்பட்டார்.

15 மார்ச் 2022 - கர்நாடக உயர் நீதிமன்றம் ஹிஜாப் குறித்த தீர்ப்பை வழங்கியது.

17 மார்ச் 2022 - ஹிஜாப் விவகாரத்தில் கர்நாடக உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பை எதிர்த்து தங்கள் வருத்தத்தைப் பதிவுசெய்ய இஸ்லாமியர்கள் அமைதியான முறையில் கடைகளை அடைக்க வேண்டுமென கர்நாடக மாநில அமீர் ஏ ஷரியத் கேட்டுக்கொண்டது.

19 மார்ச் 2022 - பள்ளிக்கூடங்களில் பகவத் கீதை கற்பிப்பது கட்டாயமாக்கப்பட்டது.

22 மார்ச் 2022 - ஹிஜாப் தொடர்பான உயர் நீதிமன்றத்தின் உத்தரவுக்கு எதிராக முஸ்லிம்கள் போராட்டம் நடத்தியதால் அவர்கள் அரசியல் சாஸனத்தைப் பின்பற்றவில்லை; ஆகவே முஸ்லிம் வியாபாரிகளை கோவில் திருவிழாக்களில் கடை நடத்த அனுமதிக்கக்கூடாது என்று கூறி போஸ்டர்கள் தென் கன்னட மாவட்டத்தில் உள்ள பாபநாடு துர்கா பரமேஸ்வரி கோவிலுக்கு அருகில் ஒட்டப்பட்டன. (இத்தனைக்கும் அந்தக் கோவிலை பப்பு பெரி என்ற இஸ்லாமியர்தான் கட்டினார். தேவியே அவருடைய கனவில் வந்து, மத ஒற்றுமையை வலியுறுத்தும் நோக்கில் அந்தக் கோவிலைக் கட்டச் சொன்னதாக கதைகள் இருக்கின்றன.) கோவில் திருவிழாக்களில் இஸ்லாமியர்களுக்கு கடைகளைக் கொடுக்கக்கூடாது என்ற பிரச்சாரம் கர்நாடக கடற்கரையோரங்களில் துவங்கி, பிறகு மாநிலத்தின் மற்ற பகுதிகளிலும் பரவியது.

26 மார்ச் 2022 - பள்ளிக்கூட பாடப் புத்தகங்களில் திப்பு சுல்தானைப் பற்றி இடம்பெறும் தகவல்கள் அவரைப் போற்றும்வகையில் இருக்காது என அரசு தெரிவித்தது.

28 மார்ச் 2022 - ஹிந்து ஜன ஜாகிருதி சமிதி ஹலால் உணவுக்கு எதிரான பிரச்சாரத்தைத் துவங்கியது.

29 மார்ச் 2022 - கொல்லூர் மூகாம்பிகை கோவிலில் திப்பு சுல்தான் பெயரில் நடத்தப்பட்டுவரும் சலாம் மங்களாரத்தி உடனடியாக நிறுத்தப்பட வேண்டுமென ஆர்.எஸ்.எஸ். தலைவர் கலத்கா பிரபாகர் பட் தெரிவித்தார்.

மருந்து நிறுவனங்கள் மீதும் குறி

இதற்கிடையில் தனியார் மருந்து நிறுவனம் ஒன்றின் 'ஹலால் கொள்கை' ஒன்றை முன்வைத்து, அந்த மருந்து நிறுவனத்தைப் புறக்கணிக்க வேண்டுமென கடந்த இரண்டு நாட்களாக ட்விட்டரில் பலரும் கருத்துக்களைப் பதிவுசெய்து வருகின்றன.

"தங்களுடைய தயாரிப்புகளை முஸ்லிம்களும் பயன்படுத்தும் விதத்தில், மூலப் பொருட்கள் அனைத்தும் ஹலால்தன்மைக்கு உட்பட்டே சேகரிக்கப்படுகின்றன" என்ற அந்த மருந்து நிறுவனத்தின் ஹலால் சான்றிதழைப் பகிர்ந்தவர்கள், "ஆயுர்வேத மருந்தைத் தயாரிக்கும் நிறுவனம் எப்படி ஹலால் முறைப்படி மருந்தைத் தயாரிப்பதாகச் சொல்லலாம்?" எனக் கேள்வியெழுப்பினர்.

இதையடுத்து, அந்த மருந்து நிறுவனத்தைப் புறக்கணிக்க வேண்டுமென்ற ஹாஷ்டாக் பல மணி நேரம் ட்ரெண்டிங்கில் இருந்தது.

https://www.youtube.com/watch?v=W9M3EPJbu6I

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+