குரங்கு செய்த காரியம்.. ரூ.20 லட்ச வைரம் அபேஸ்.. போலீஸ் வந்தும் பலனில்லை.. கடைசியில் பெரிய ட்விஸ்ட்!
லக்னோ: பொதுவாகவே பல கோயில்களில் குரங்கு தொல்லை என்பது தவிர்க்கவே முடியாத ஒன்றாகவே இருந்து வருகின்றன. இந்த குரங்குகள் பெரும்பாலும் பக்தர்கள் கையில் இருக்கும் உணவுகளை மட்டுமே பறித்துச் செல்லும். அதைத் தாண்டி எந்தவொரு தீங்கையும் ஏற்படுத்தாது. இதனால் யாரும் பெரிதாக எடுத்துக் கொள்ள மாட்டார்கள். ஆனால், இங்கு உபியில் ஒரு வியாபாரி குரங்கால் பெரிய தொகையை இழந்து இருப்பார். இது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்..
உத்தரப் பிரதேசம் மதுராவில் உள்ள விருந்தாவன் கோவில்களுக்கு வரும் பக்தர்கள், அங்குள்ள குரங்குகளின் சேட்டைகளால் அவ்வப்போது பாதிக்கப்படுவது வழக்கமான ஒன்று தான். அங்கு வரும் பக்தர்களின் கண்ணாடி, தொப்பி மற்றும் உணவுப் பொருட்களைக் குரங்குகள் பறித்துச் செல்வது தொடர் கதையாக உள்ளது. சமீபத்தில் அங்குச் சென்ற தொழிலதிபருக்கும் அதேபோன்ற சம்பவம் நடந்துள்ளது. ஆனால், அவருக்கு இதனால் பல லட்ச ரூபாய் நஷ்டமாகியிருக்கும்

குரங்கு கையில் ரூ.20 லட்சம்
அலிகாரை சேர்ந்த வைர வியாபாரி அபிஷேக் அகர்வால், தனது குடும்பத்துடன் பிருந்தாவனில் உள்ள தாக்கூர் பாங்கே பிகாரி கோயிலுக்குச் சென்றுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக ஒரு குரங்கு, அவரிடமிருந்து ரூ.20 லட்சம் மதிப்புள்ள நகைகள் இருந்த பையைப் பறித்துச் சென்றது. இதனால் அவரது குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர்.
போராட்டம்
பணத்தை எப்படியாவது மீட்க வேண்டும் என அவர்கள் போராடியுள்ளனர். ஆனால், அந்த குரங்கு பணம் இருக்கும் பையை விடுவதாக இல்லை. ஒரு கட்டத்தில் போலீசாருக்கும் இது குறித்து தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்களும் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பணம் இருக்கும் பையை வாங்க முயன்றுள்ளனர். ஆனாலும், அந்த குரங்கு சீக்கிரம் பணப் பையை மட்டும் கொடுப்பதாக இல்லை. சுமார், எட்டு மணி நேரப் போராட்டத்திற்குப் பிறகு, போலீசார் அந்தக் குரங்கைச் சுற்றி வளைத்து பையை மீட்டனர்.
என்ன நடந்தது?
கோவிலில் தரிசனம் முடித்துவிட்டு அபிஷேக் அகர்வால் தனது குடும்பத்துடன் கார் பார்கிங் நடந்து சென்று கொண்டிருந்த போது இந்த சம்பவம் நடந்துள்ளது.. தெருவில் கூட்டமாக இருந்த குரங்குகளிலிருந்து ஒரு குரங்கு, அவரது கையிலிருந்த ரூ.20 லட்சத்துக்கு மேல் மதிப்புள்ள வைர நகைகள் இருந்த பையைப் பறித்துவிட்டு ஓடிவிட்டது.
வழக்கமாக உணவுக்காகப் பைகளைக் குரங்குகள் பறிக்கும். அதுபோலத் தான் இந்த பையிலும் உணவு இருக்கும் என நினைத்தே பையைப் பறித்துள்ளது. ஆனால், அது வைர நகைகள் இருக்கும் பையாகப் போய்விட்டது. இதனால் கவலையடைந்த வியாபாரி, குரங்குக்கு உணவுப் பொருட்களைக் கொடுத்து பையை வாங்க முயன்றுள்ளார்.. ஆனால், எல்லா முயற்சிகளும் தோல்வியடைந்த நிலையில், போலீசார் உதவியை நாடினார்.
போலீசார்
இது தொடர்பாக போலீஸ் அதிகாரி சந்தீப் சிங் கூறுகையில், "எங்களுக்கு வந்த புகாரின் அடிப்படையிலேயே அங்கு சென்றோம். அந்தக் குரங்கை அடையாளம் கண்டு சுற்றி வளைத்தோம். பல மணி நேரப் போராட்டத்திற்குப் பிறகு, அந்த பையைப் பத்திரமாக மீட்டு அதன் உரிமையாளரிடம் ஒப்படைத்தோம்" என்றார்.
கோரிக்கை
அந்த பகுதியில் குரங்கு தொல்லை அதிகரித்துவிட்ட நிலையில், அதைக் கட்டுப்படுத்த நடவடிக்கை தேவை என்ற கோரிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. மதுரா-விருந்தாவன் பகுதியில் குரங்குகளின் தொல்லையைக் கட்டுப்படுத்த நிர்வாகம் நடவடிக்கை எடுத்தாலும் அது போதுமானதாக இல்லை என்ற குரல்கள் எழுந்துள்ளன. குரங்குகளை மொத்தமாகக் கூண்டு வைத்துப் பிடித்து, அவற்றைக் காடுகளில் விட வேண்டும் எனப் பலரும் வலியுறுத்தி வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications