சட்ட விரோத பணம் ஜெயலலிதாவுடையது என்பதற்கு என்ன ஆதாரம்? சுப்ரீம் கோர்ட் கிடுக்கிப்பிடி
டெல்லி: ஜெயலலிதாவுக்கு லாபம் சம்பாதிக்கும் நோக்கத்தில் சசிகலா பினாமி நிறுவனங்களை நடத்தியதாக கர்நாடக தரப்பு வாதிட்டிருந்த நிலையில் அந்த பணம் ஜெயலலிதாவுக்கு உரியது என்பதற்கு ஆதாரம் என்ன? என்று உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
சொத்துக் குவிப்பு வழக்கில் இருந்து முதல்வர் ஜெயலலிதா, சசிகலா, இளவரசி. சுதாகரன் ஆகியோரை விடுதலை செய்து கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதி குமாரசாமி அளித்த தீர்ப்பை எதிர்த்து அம்மாநில அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது.

இந்த மனுக்களை நீதிபதிகள் பினாகி கோஷ் மற்றும் அமிதவா ராய் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் விசாரித்து வருகிறது. இதில் கடைசியாக மே 3ம் தேதி முதல் 5ம் தேதி வரை கர்நாடக அரசுத் தரப்பில் பி.வி.ஆச்சார்யா வாதத்தை முன் வைத்தார்.
அப்போது சசிகலா தொடங்கிய போலி நிறுவனங்கள் மூலமாக ஜெயலலிதாவுக்கு வருவாய் கிடைத்ததாகவும் ஆச்சாரியா வாதம் செய்தார். இதையடுத்து மே 12ம் தேதி நடந்த விசாரணைக்குப் பின்னர் ஜூன் 1ம் தேதிக்கு (இன்று) விசாரணையை நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.
இன்றை அனைத்துத் தரப்பும் தங்களது இறுதி வாதங்களையும் முடித்துக் கொள்ள நீதிபதிகள் உத்தரவிட்டிருந்தனர். அதன்படி இன்று மீண்டும் விசாரணை தொடங்கியது. அப்போது கர்நாடக அரசின் சிறப்பு வழக்கறிஞர் பி.வி.ஆச்சார்யா இன்று 2 மணி நேரம் தனது வாதங்களை முன் வைத்தார்.
இதன்பிறகு வாதத்தில் சில சந்தேகங்களை நீதிபதிகள் எழுப்பினர். குறிப்பாக, "ஜெயலலிதாவுக்கு லாபம் சம்பாதிக்கும் நோக்கத்தில் சசிகலா பினாமி நிறுவனங்களை நடத்தியதாக கூறியுள்ளீர்கள். ஆனால் அந்த பணம் ஜெயலலிதாவுக்கு உரியது என்பதற்கு ஆதாரம் என்ன?
ஜெயலலிதா வருவாய்க்கு அதிகமாக சொத்து சேர்த்ததாகவும், ஹைகோர்ட் தனது தீர்ப்பில் கணித தவறு காரணமாக அதை தவறவிட்டுவிட்டதாகவும் வாதிட்டீர்கள். வருவாய்க்கு அதிகமாக சொத்து சேர்த்துள்ளதாக கூறும் நீங்கள், அது சட்ட விரோதமான வகைகளில் சேர்க்கப்பட்ட பணமா என்பதற்கு ஆதாரத்தை சமர்ப்பிக்க முடியுமா? இவ்வாறு நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.












Click it and Unblock the Notifications