தை அமாவாசை.. அதிகாலை மொத்தமாக திரண்ட பக்தர்கள்.. மகா கும்பமேளாவில் கூட்டம் கை மீறி போனது எப்படி?
பிரயாக்ராஜ்: உத்தர பிரதேசத்தில் உள்ள பிரயாக்ராஜ் நகரில் மகா கும்பமேளா நடைபெற்று வரும் சூழலில் திடீரென கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இன்று அதிகாலை ஏற்பட்ட திடீர் கூட்ட நெரிசலில் 15 பேர் உயிரிழந்தனர். இதற்கிடையே அதிகாலை என்ன நடந்தது.. திடீர் உயிரிழப்புகளுக்கு என்ன காரணம் என்பது தொடர்பாகச் சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் சில பகீர் கருத்துகளைத் தெரிவித்துள்ளனர்.
உத்தரப் பிரதேசத்தில் அமைந்துள்ள பிரயாக்ராஜ் நகரில் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் இந்துக்களின் மிக முக்கிய புனித நிகழ்வு மகா கும்பமேளா. ஜனவரி 13ம் தேதி தொடங்கிய இந்த நிகழ்வு வரும் பிப்ரவரி 26ம் தேதி வரை நடைபெறுகிறது.

மகா கும்பமேளா நிகழ்வில் பல கோடி பக்தர்கள் பங்கேற்று திரிவேணி சங்கமத்தில் புனித நீராடுவார்கள். இந்தாண்டு மகா கும்பமேளாவை சிறப்பாக நடத்த மத்திய மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்திருந்தனர்.
மகா கும்பமேளா கூட்ட நெரிசல்:
இதற்கிடையே தை அமாவாசையை முன்னிட்டு திரிவேணி சங்கமத்தில் புனித நீராடப் பக்தர்கள் குவிந்தனர். இதற்கிடையே கும்பமேளாவில் கூட்டம் அதிகரித்ததால் நெரிசல் ஏற்பட்டு எதிர்பாராத விதமாக 15 பேர் உயிரிழந்தனர். இன்று அதிகாலை ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 30-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். மேலும், பலர் தங்கள் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களைத் தொலைத்துவிட்டுத் தேடி வருகிறார்கள். இன்று அதிகாலை என்ன நடந்தது என்பது குறித்து சம்பவத்தை நேரில் பார்த்தவர் சில முக்கிய தகவல்களைப் பகிர்ந்துள்ளார்.
என்ன நடந்தது:
இது தொடர்பாக சந்தௌலியில் இருந்து வந்திருந்த பக்தர் கூறுகையில், "நாங்கள் சங்கமத்தில் நீராடச் சென்று கொண்டிருந்தபோது கூட்டம் கட்டுக்கடங்காமல் போனது. பின்னால் இருந்து எங்களைத் தள்ளினார்கள். திடீரென தள்ளுமுள்ளு ஏற்பட்டது. எங்களால் சமாளிக்கவே முடியவில்லை. ஒரு கட்டத்தில் தடுமாறி அப்படியே விழுந்துவிட்டோம். நான் கஷ்டப்பட்டுச் சமாளித்து எழுந்து நின்றேன். ஆனால், அதற்குள் என் நண்பர்கள் மிஸ்ஸாகிவிட்டனர்" என்றார்.
அதிகாலை நடந்த குழப்பத்தை விவரிக்கும் மற்றொரு பக்தர், "கீழே விழுந்துவிட்டதால் உதவி கேட்டுக் கத்தினேன். ஆனால், கூட்டம் அதிகமாக இருந்ததால் அது யார் காதிலும் விழவில்லை. அப்படியே கிடந்தேன். கடைசியில் போலீசார் தான் என்னை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பினர். அங்கு என்ன நடந்தது. என்னுடன் வந்த எனது நண்பர்களுக்கு என்ன ஆனது என எதுவும் தெரியவில்லை. இன்னும் எனது நண்பர்களைக் கண்டுபிடிக்க முடியவில்லை" என்றார்.
என்ன ஆனது என்றே தெரியவில்லை:
பல்லியா பகுதியைச் சேர்ந்த மற்றொரு பக்தர் கூறுகையில், "நாங்கள் புனித நீராட வந்தோம்.. ஆனால் கடும் கூட்ட நெரிசலால் உடன் வந்தவர்கள் பிரிந்துவிட்டார்கள், இப்போது வரை அவர்கள் எங்கிருக்கிறார்கள் என்றே தெரியவில்லை" என்கிறார் கண்ணீருடன்..!
தை அமாவாசை:
திரிவேணி சங்கம் அருகே அதிகாலை 2 மணியளவில் ஏற்பட்ட திடீர் கூட்ட நெரிசலே இந்தச் சம்பவத்திற்குக் காரணம். திடீரென ஏற்பட்ட கூட்ட நெரிசலால் அங்கு 15 பேர் உயிரிழந்தனர். உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் மற்றும் மீட்புப் படையினர் காயமடைந்தவர்களை மருத்துவமனைகளுக்குக் கொண்டு செல்வதிலும், இறந்தவர்களைப் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்புவதிலும் கவனம் செலுத்தி வருகின்றனர். தை அமாவாசையை முன்னிட்டு பலரும் புனித நீராட வந்திருந்த நிலையில், எதிர்பாராத விதமாகக் கூட்ட நெரிசல் ஏற்பட்டதாக அங்கிருந்தவர்கள் கூறுகிறார்கள்.












Click it and Unblock the Notifications