For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இந்திய கிரிக்கெட் அணியின் வெற்றியில் ராகுல் டிராவிட்டின் பங்கு என்ன?

By BBC News தமிழ்
|
ராகுல் டிராவிட்
Getty Images
ராகுல் டிராவிட்

மேற்கு ஆஸ்திரேலியாவின் பெர்த்தில் இருந்து அடிலெய்டுக்கு குவாண்டாஸ் ஏர்வேஸ் விமானம் புறப்பட்டது. விமானம் முழுவதுமாக நிரம்பியிருந்தது.

இந்திய கிரிக்கெட் அணியும் அதே விமானத்தில் இருந்தது. ஒரு நாள் முன்னதாக தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக நடந்த போட்டியில் தோல்வியடைந்த இந்திய அணியின் எல்லா வீரர்களும் சற்று ஓய்வெடுத்துக் கொண்டிருந்தனர்.

ஆனால் எகானமி பிரிவில் கார்னர் சீட்டில் அமர்ந்திருந்த ஒருவர் விமானம் புறப்பட்டவுடன் தனது லேப்டாப்பை எடுத்து அதில் ஆழ்ந்து போனார்.

நடுவில் இரண்டு முறை இந்திய கேப்டன் ரோஹித் ஷர்மா பிசினஸ் வகுப்பில் இருந்து எழுந்துவந்து அவரிடம் பேசிவிட்டு திரும்பிச் சென்றார்.

ராகுல் டிராவிட் வேலைசெய்யும் விதம் வித்தியாசமானது.

பயிற்சியின் போது ஒவ்வொரு வீரரின் மீதும் கவனம்

ஒரு கிரிக்கெட் வீரராக பல மணிநேரம் நெட்ஸில் பேட்டிங் பயிற்சி செய்ததைப் போலவே ராகுல் டிராவிட் ஒரு பயிற்சியாளராக இன்றும் வீரர்களுக்கான பயிற்சிக்கு முக்கியத்துவம் தருகிறார்.

இந்த ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தில் பயிற்சி நடக்கும் இடத்தை முதலில் வந்தடையும் ராகுல் டிராவிட் ஒவ்வொரு வீரரையும் கூர்ந்து கவனித்து ஆலோசனைகளை வழங்குகிறார்.கூடவே பேட்டிங் பயிற்சியாளர் விக்ரம் ராத்தோர் மற்றும் பந்துவீச்சு பயிற்சியாளர் பாரஸ் மாம்ப்ரேயையும், ஒவ்வொரு செயலிலும் ஈடுபடுத்துகிறார்.



பெர்த்தில் நடைபெற்ற ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா இந்தியாவை வீழ்த்தியது. ஆனால், ஆட்டத்தின் நடுவே இந்திய இன்னிங்ஸ் முடிந்ததும், வீரர்கள் பீல்டிங் பயிற்சி செய்து கொண்டிருந்தனர். திடீரென ராகுல் டிராவிட் ஒரு பேட் மற்றும் பந்தை கொண்டு வந்து கேஎல் ராகுலுக்கு ஸ்லிப் ஃபீல்டிங் பயிற்சி அளிக்கத்தொடங்கினார்.

தென்னாப்பிரிக்க இன்னிங்ஸ் தொடங்கி ஒரு ஓவருக்கு பிறகு, குயின்டன் டி காக், அர்ஷ்தீப் சிங் வீசிய ஒரு அவுட்ஸ்விங்கரை அடித்தார். கேஎல் ராகுல் ஸ்லிப்பில் கேட்ச் பிடித்து அவரை ஆட்டமிழக்கச்செய்தார்.

ராகுல் டிராவிட்
Getty Images
ராகுல் டிராவிட்

வீரர்களின் டக்அவுட்டில் அமர்ந்திருந்த ராகுல் டிராவிட் பெரிய திரையின் பக்கம் திரும்பி ஒருமுறை ரீப்ளேயை பார்த்துவிட்டு மீண்டும் ஆட்டத்தில் கவனம் செலுத்தினார்.

முன்பு ராகுல் டிராவிட்டுடன் கிரிக்கெட் விளையாடியவரும், டிராவிட்டின் பயிற்சியை உன்னிப்பாக கவனித்து வரும் வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னாள் கேப்டனுமான டேரன் சமி, "ராகுல் இப்போது செட் ஆகிவிட்டார்" என்று கருதுகிறார்.

"டிராவிட் போன்ற கடினமாக உழைக்கும் வீரர்களை நான் அரிதாகவே பார்த்திருக்கிறேன். முன்பு ஜூனியர் அணிக்கு பயிற்சி அளித்தபோது டிராவிட் அவர்களுக்கு கற்றுக்கொடுத்து, அதிலிருந்து அனுபவத்தை பெற்று தற்போது பாதிக்கும் மேற்பட்ட சூப்பர் ஸ்டார் வீரர்களை கொண்ட அணிக்கு பயிற்சியாளராக உள்ளார். இது ஒரு பெரிய சவால்," என்று டேரன் சமி கூறியுள்ளார்.

சவாலான நேரத்தில் இந்திய அணியின் பயிற்சியாளராக பொறுப்பேற்றவர்

டிராவிட் அமர்ந்து வேலை செய்துகொண்டிருந்த, பெர்த்தில் இருந்து அடிலெய்டு செல்லும் அதே விமானத்தின் பிஸினஸ் கிளாஸின் முதல் இருக்கையில் முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரியும் அமர்ந்திருந்தது தற்செயல் நிகழ்வு.

ராகுல் டிராவிட்-விராட் கோலி
Getty Images
ராகுல் டிராவிட்-விராட் கோலி

ராகுல் டிராவிட்டிடம் பயிற்சியளிக்கும் பணி ஒப்படைக்கப்பட்ட சூழ்நிலையும் சவாலானது என்றே சொல்லலாம்.

"நாங்கள் 18 வீரர்களுடன் செல்கிறோம். அவர்கள் அனைவருமே திறமையானவர்கள். சிறந்தவர்கள்.ஆனால் 11 வீரர்கள் மட்டுமே விளையாடும் வாய்ப்பை பெறுகிறார்கள். விளையாட வாய்ப்பு கிடைக்காதவர்களுக்கு ஏமாற்றம் ஏற்படும் என்பதை என்னால் புரிந்து கொள்ள முடியும் பலநேரங்களில் கடுமையான விஷயங்களை வீரர்களிடம் சொல்லவேண்டி இருக்கும். ஆனால் நாம் அனைவரும் ப்ரொபெஷனல்கள்," என்று 2021 டிசம்பரில் தென்னாப்பிரிக்காவிற்கு பயிற்சியாளராக தனது முதல் வெளிநாட்டு சுற்றுப்பயணத்திற்கு செல்வதற்கு முன், ராகுல் டிராவிட் தெரிவித்தார்.

இந்தியாவின் டெஸ்ட் அல்லது ஒருநாள் அணியைப் பார்த்தால், டிராவிட்டின் சவால்களை புரிந்துகொள்ளமுடியும்.

பழைய மற்றும் இளம் வீரர்களை ஒற்றுமையாக வைத்திருக்கும் சவால்

கடந்த ஆண்டு தென்னாப்பிரிக்காவுக்கு டெஸ்ட் சுற்றுப்பயணம் சென்ற அணியில் 18 வீரர்களில் 7 பேர் 30 வயதுக்கு மேற்பட்டவர்கள். தற்போது ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் டி20 உலகக் கோப்பையில் இந்திய அணிக்காக விளையாடிய 8 வீரர்கள் 30 வயதுக்கு மேற்பட்டவர்கள்.

நட்சத்திர வீரர்களை ஒற்றுமையாக வைத்து வெற்றிகளை பெறுவது மட்டுமல்லாமல், அணியில் இளம் வீரர்களுக்கு இடமளிக்க கடினமான முடிவுகளை எடுக்க வேண்டியிருக்கும்.

" முன்பு கிரிக்கெட் சுற்றுப்பயணங்களின்போது ராகுலை தொடர்ந்து உன்னிப்பாக கவனித்தபோது எனக்குள் உருவான கருத்துதான் இப்போதும் அவர்மீது எனக்கு உள்ளது," என்று கிரிக்கெட் குறித்து எழுதும் பாகிஸ்தானைச் சேர்ந்த பிரபல விளையாட்டுப் பத்திரிகையாளரான ஷாஹித் ஹாஷ்மி குறிப்பிட்டார்.

ராகுல் டிராவிட்-ரோஹித் ஷர்மா
Getty Images
ராகுல் டிராவிட்-ரோஹித் ஷர்மா

"டிராவிட் ஒரு சிறந்த வீரர். அவர் டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகள் இரண்டிலும் கிட்டத்தட்ட 500 போட்டிகளில் 23,000 ரன்களுக்கு மேல் எடுத்தார். விராட் கோலி, ரோஹித் ஷர்மா போன்ற ஜாம்பவான்களுக்கு பயிற்சியாளராக இருக்கும் போது நீங்களும் பிரபலமானவராக இருக்க வேண்டும். டிராவிட்டிடம் அனுபவமும், வெற்றியும், புகழும் உள்ளது. அவர் வேலையில் மட்டுமே கவனம் செலுத்துகிறார்," என்று அவர் மேலும் கூறினார்.

அணியுடனான ராகுல் டிராவிட்டின் உறவு மிகவும் வலுவாக உள்ளது. போட்டியின் முதல் மூன்று பந்தயங்களிலும் கேஎல் ராகுல் தோல்வியடைந்தார். அவருக்கு பதிலாக வேறொரு வீரருக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என்ற விமர்சனத்திற்கும் அழுத்தத்திற்கும் டிராவிட் அடிபணிந்திருந்தால், வங்கதேசத்திற்கு எதிரான நான்காவது போட்டியில் அரை சதம் அடிக்கும் வாய்ப்பு ராகுலுக்கு கிடைத்திருக்காது, மேலும் அவரது தன்னம்பிக்கையும் திரும்பியிருக்காது.

விராட் கோலி பார்முக்கு திரும்பிய கதையில் எங்கோ ஒரு இடத்தில் ராகுல் டிராவிட்டின் பங்கும் இருப்பது தெளிவாகத் தெரிகிறது. சென்ற ஆண்டு முதல் டிராவிட் அவரை தொடர்ந்து ஆதரித்தார் மற்றும் ஆசிய கோப்பைக்குப் பிறகு விராட், ஃபார்முக்கு திரும்பினார்.

நெட்ஸில் விராட் கோலி மணிக்கணக்காக பேட்டிங் பயிற்சி செய்வதை ராகுல் டிராவிட் பார்த்துக் கொண்டே இருப்பார். இடையில் ஆலோசனைகளையும் வழங்குவார்.

போட்டிகளின் போது ட்ரிங்க்ஸ் பிரேக் அல்லது ஓவர் பிரேக் போது டிராவிட் அடிக்கடி மைதானத்தில் இருக்கும் வீரர்களிடம் ஓடிசென்று முக்கிய செய்திகளை தானே கொடுப்பார்.

இந்த நாட்களில், ராகுல் டிராவிட் வெற்றியைக் கொண்டாடும் விதமும், வீரர்களைக் கட்டிப்பிடிக்கும் விதமும், அவரது அமைதியான இயல்பிலிருந்து சற்று வித்தியாசமாகவும் புதியதாகவும் இருக்கிறது.

"ராகுலின் தன்னபிக்கையே அவரது மிகப்பெரிய பலம். இது பெரிய முடிவுகளை எடுப்பதற்கு முக்கியமானது" என்று முன்னாள் கேப்டனும், தலைமை தேர்வாளருமான கே.ஸ்ரீகாந்த் கருதுகிறார்.

Banner
BBC
Banner

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

BBC Tamil
English summary
Rahul Dravid role in world cup: Cricket world cup 2022 in tamil.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X