பீகார் வாக்காளர் பட்டியலில் மாஜி துணை முதல்வர் தேஜஸ்வி பெயர் இல்லையா? உண்மையில் நடந்தது என்ன!
பாட்னா: தனது பெயர் திருத்தப்பட்ட வாக்காளர் பட்டியலில் இல்லை என்று பீகார் முன்னாள் துணை முதல்வரும், ராஷ்ட்ரிய ஜனதா தள தலைவருமான தேஜஸ்வி யாதவ் குற்றம் சாட்டினார். பீகாரில் நடந்த சார் நடவடிக்கை அங்குள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் எதிர்த்த நிலையில், தேஜஸ்வி யாதவ் இந்த பகீர் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். இது பீகார் அரசியலில் பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.
பீகார் மாநிலத்தில் இன்னும் சில மாதங்களில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக அங்குத் தேர்தல் களம் இப்போதே சூடுபிடித்துவிட்டது. ஒரு பக்கம் கட்சிகள் தங்களுக்கு ஏற்ப கூட்டணியை அமைத்து, பிரச்சாரத்தை நடத்தி வருகிறது. மற்றொரு பக்கம் அங்குத் தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வரும் சார் எனப்படும் சிறப்பு வாக்காளர் திருத்த நடவடிக்கை சர்ச்சையாக வெடித்துள்ளது.

பீகார் சார் நடவடிக்கை
இந்த நடைமுறைக்குத் தடை விதிக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் உச்ச நீதிமன்றத்திலும் வழக்கு தொடர்ந்தனர். இருப்பினும், உச்ச நீதிமன்றம் தடை விதிக்க மறுத்துவிட்டது. இந்தச் சூழலில் தான் ஆகஸ்ட் 1ம் தேதி தேர்தல் ஆணையம் பீகார் வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிட்டுள்ளது. இந்தச் சூழலில் தான் பீகார் மாஜி துணை முதல்வரும் ஆர்ஜேடி தலைவருமான தேஜஸ்வி யாதவ் சில பகீர் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.
தேஜஸ்வி யாதவ் குற்றச்சாட்டு
பாட்னாவில் செய்தியாளர்களைச் சந்தித்த தேஜஸ்வி யாதவ், தனது வாக்காளர் அடையாள அட்டை எண்ணைக் காண்பித்தார். மேலும், தேர்தல் ஆணையத்தின் மொபைல் செயலியில் அந்த எண்ணைப் பதிவு செய்தபோது, 'ரெகார்டு இல்லை' என்ற வந்ததாகக் கூறினார். அதாவது தனது பெயர் வாக்காளர் பட்டியலில் இல்லை என வந்ததாகக் குறிப்பிட்டார். இது குறித்து அவர் மேலும் கூறுகையில், "என் பெயரும் வாக்காளர் பட்டியலில் இல்லை. நான் எப்படித் தேர்தலில் போட்டியிடுவேன்?" என்று கேள்வி எழுப்பினார். இது பீகார் அரசியல் களத்தில் பெரும் பரபரப்பைக் கிளப்பியது.
தேர்தல் ஆணையம் பதில்
தேஜஸ்வி யாதவின் குற்றச்சாட்டை தொடர்ந்து வாக்காளர் பட்டியல் விவரங்களைத் தேர்தல் ஆணையம் வெளியிட்டது. அதில் பாட்னாவில் உள்ள கால்நடை மருத்துவக் கல்லூரிக்கு அருகிலுள்ள வாக்குச்சாவடியில், வரிசை எண் 416-ல் தேஜஸ்வி யாதவ் பெயர் இருப்பதாக கூறப்பட்டு இருந்தது. தேர்தல் ஆணையம் இது குறித்து, "தேஜஸ்வி யாதவ் தனது பெயர் வாக்காளர் பட்டியலில் இல்லை என்று உண்மைக்கு மாறான தகவல் தெரிவித்தது எங்கள் கவனத்திற்கு வந்துள்ளது. வரைவு வாக்காளர் பட்டியலில் அவரது பெயர் 416வது வரிசை எண்ணில் உள்ளது. எனவே, அவரது பெயர் பட்டியலில் இல்லை என்பது உண்மைக்குப் புறம்பானது.
சிறப்புத் தீவிர மறுசீரமைப்பு (SIR) படி, ஆட்சேபனைகள் மற்றும் புகார்களைத் தெரிவிப்பதற்கான காலம் ஆகஸ்ட் முதல் செப்டம்பர் 1 வரை முழு ஒரு மாதம் ஆகும். எந்த ஜனநாயகத்திற்கும் துல்லியமான வாக்காளர் பட்டியல்தான் அடிப்படை. ஆர்ஜேடி உட்பட எந்த அரசியல் கட்சியிலிருந்தும் அளவிலான முகவர்கள் யாரும் கடந்த 24 மணிநேரத்தில் வாக்குச்சாவடி அதிகாரிகளிடம் எந்த ஒரு புகாரையும் சமர்ப்பிக்கவில்லை.
ஆட்சேபனை இருக்கா?
தகுதியான ஒருவரின் பெயர் விடுபட்டுவிட்டாலோ அல்லது தகுதியற்ற வாக்காளரின் பெயர் சேர்க்கப்பட்டிருந்தாலோ எந்தவொரு கட்சியும் தாரளமாக ஆட்சேபனை தெரிவிக்கலாம். ஆகஸ்ட் 1ம் தேதி அனைத்து கட்சிகளுக்கும் வாக்குச்சாவடி வாரியான வரைவுப் பட்டியல் வழங்கப்பட்டன" என்றார்.
இருப்பினும், தேர்தல் ஆணையத்தால் வழங்கப்பட்ட வாக்காளர் அடையாள அட்டை எண்ணானது தேஜஸ்வி யாதவ் சொன்ன எண்ணிலிருந்து வேறுபட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. நம்பர் ஏன் வேறுபட்டு இருந்தது.. யார் சொல்வது உண்மைக்கு மாறான நம்பர் என்பது குறித்து எந்தவொரு விளக்கமும் வழங்கப்படவில்லை.












Click it and Unblock the Notifications