இந்தியாவில் அசைவம் சாப்பிடுவோர் எந்த மாநிலத்தில் அதிகம்! தமிழகத்தை விட "இங்கு" தான் அதிகமாம்!
டெல்லி: இந்தியாவில் எந்த மாநிலத்தில் சைவம் மற்றும் அசைவும் சாப்பிடும் மக்கள் அதிகம் உள்ளனர் என்று பார்க்கும்போது நமக்கு ஒரு விஷயம் ஆச்சரியமாக இருக்கிறது. நமது மேப்பில் ஒரு மெல்லிய கோட்டை வரைந்தோம் என்றால் அதன் மேலே சைவர்கள் அதிகமாகவும், அதன் கீழே அசைவப் பிரியர்கள் அதிகம் இருக்கிறார்கள். இது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்.
இந்தியாவில் அசைவ உணவு குறித்த விவாதம் எப்போதும் ஓய்வதில்லை. ஒரு சாரார் சைவ உணவுகள் தான் நல்லது எனத் தொடர்ந்து கூறி வருகிறார்கள். அதேநேரம் மற்றொரு பிரிவினர் உடலுக்குத் தேவையான புரதச் சத்துகளைச் சைவ உணவுகளில் இருந்து பெறுவது கடினம் என்றும் அசைவ உணவுகளை நிச்சயம் எடுத்துக் கொள்ள வேண்டும் என்றும் கூறி வருகிறார்கள்.

சைவம்-அசைவம்
இந்த விவாதம் நாடு முழுக்க தொடர்ந்து இருந்து கொண்டே தான் இருக்கிறது. பொதுவாகப் பார்க்கும்போது ஏதோ சைவ உணவுகள் தான் இந்தியாவில் அதிகம் இருப்பது போலச் சொல்வார்கள். ஆனால் உண்மையில் நமது நாட்டில் அசைவ உணவுகளைச் சாப்பிடுவோரின் எண்ணிக்கையே மிக அதிகமாக இருக்கிறது. தேசிய குடும்ப சுகாதார கணக்கெடுப்பு 4 தரவுகளின்படி, இந்தியாவில் 70 சதவீதப் பெண்கள் மற்றும் 78 சதவீத ஆண்கள் அசைவம் உண்பவர்களாகவே உள்ளனர்.
குறிப்பாக நாம் இந்திய வரைபடத்தை எடுத்துக் கொண்டால் ஒரு மெல்லிய கற்பனை கோட்டினை வரையலாம். பொதுவாக அந்தக் கோட்டிற்கு மேற்புறம் சைவ உணவு சாப்பிடுவோர் அதிகமாக இருக்கிறார்கள். அதேநேரம் கோட்டிற்குக் கீழே பார்த்தோம் என்றால் அசைவ உணவுகளை உண்பவர்களே மிக அதிகமாக உள்ளனர்.
சைவ உணவு
அதாவது மகாராஷ்டிராவில் தொடங்கி மத்தியப் பிரதேசம், உத்தரப் பிரதேசம் என நாம் ஒரு கோட்டை வரையலாம்.. அதற்கு மேலே இருக்கும் மாநிலங்களில் சைவ உணவு சாப்பிடுவோர் ஒப்பீட்டளவில் அதிகம் இருக்கிறார்கள். உதாரணமாக ராஜஸ்தானில் அதிகபட்சமாக மக்கள் தொகையில் 75% சைவ உணவு சாப்பிடுவோராக உள்ளனர். அதேபோல ஹரியானாவில் இந்த எண்ணிக்கை 70%ஆக இருக்கிறது. பஞ்சாப்பில் 67%, குஜராத்தில் 61%ஆக இருக்கிறது. நமது கற்பனை கோட்டிற்கு அருகே உள்ள மாநிலங்களான மகாராஷ்டிராவில் 40%, மத்தியப் பிரதேசத்தில் 51%, உத்தரப் பிரதேசத்தில் 47%ஆக சைவர்கள் உள்ளனர்.
அதேநேரம் கோட்டிற்கு கீழே நிலைமை மொத்தமாக வேறாக இருக்கிறது. அதிகபட்சமே கர்நாடகாவில் தான் சைவர்கள் எண்ணிக்கை 21%ஆக இருக்கிறது. சத்தீஸ்கரில் இந்த எண்ணிக்கை 18%ஆக உள்ளது. அதைத் தாண்டிப் பார்த்தோம் என்றால் வேறு எங்கும் சைவர்களின் எண்ணிக்கை 10% கூட தாண்டவில்லை.
அசைவ உணவு எங்கு அதிகம்!
குறிப்பாக நாட்டிலேயே தெலுங்கானாவில் தான் அதன் மக்கள்தொகையில் குறைந்தபட்சம், அதாவது 1.3% மட்டும் சைவர்களாக உள்ளனர். அதன் பிறகு ஆந்திராவில் 1.7%, மேற்கு வங்கத்தில் 1.4%ஆகச் சைவர்கள் எண்ணிக்கை இருக்கிறது. நாகாலாந்தில் சைவர்கள் எண்ணிக்கை அதன் மக்கள்தொகையில் 2%ஆக உள்ள நிலையில், தமிழகத்தில் அது 2.3%ஆக இருக்கிறது. தொடர்ந்து கேரளாவில் அது 3%ஆக மட்டும் இருக்கிறது.
அதாவது தெலுங்கானா, ஆந்திரப் பிரதேசம், மேற்கு வங்கம், நாகாலாந்து, தமிழ்நாடு, ஒடிசா மற்றும் ஜார்க்கண்ட் ஆகிய மாநிலங்களில் அசைவம் சாப்பிடுபவர்களின் எண்ணிக்கை 97 சதவீதத்திற்கும் அதிகமாக உள்ளது. இதற்கு மாறாக, பஞ்சாப், ஹரியானா, குஜராத் மற்றும் ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் அசைவம் சாப்பிடுபவர்களின் எண்ணிக்கை மிகக் குறைவாக உள்ளது.
அதிகரிக்கும் இறைச்சி நுகர்வு
பொதுவாகவே வருமானம் அதிகரிக்கும்போது இந்தியாவில் இறைச்சி நுகர்வு அதிகரித்துள்ளது. 2020ஆம் ஆண்டில் இந்தியா ஆறு மில்லியன் டன் இறைச்சியை உட்கொண்டதாக வல்லுநர்கள் குறிப்பிடுகிறார்கள். இந்தியா மக்கள்தொகையில் கிட்டத்தட்ட பாதி அளவு மக்கள் வாரத்திற்கு ஒரு முறையாவது அசைவ உணவு சாப்பிடுகிறார்கள். இதில் மேற்கு வங்கம் மற்றும் கேரளா உட்பட ஒன்பது மாநிலங்களில் மட்டுமே இறைச்சி நுகர்வுக்கு எந்தத் தடையும் இல்லை. மற்ற பெரும்பாலான மாநிலங்களில் இறைச்சியின் வகையைப் பொறுத்து சில கட்டுப்பாடுகள் உள்ளன.












Click it and Unblock the Notifications