Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

‛‛சந்திரபாபு நாயுடு’’.. மாமனார் என்டிஆருக்கு துரோகம் செய்து கட்சியை அபகரித்த கதை தெரியுமா? இதுதான்

Subscribe to Oneindia Tamil

அமராவதி: ஆந்திர மாநில முதல்வராக 4வது முறையாக இன்று தெலுங்கு தேசம் கட்சியின் தலைவரான சந்திரபாபு நாயுடு பதவியேற்க உள்ளார். இந்நிலையில் தான் சந்திரபாபு நாயுடு தனது மாமனாரான மறைந்த நடிகரும், ஒருங்கிணைந்த ஆந்திராவின் முதல்வருமான எம்டி ராமராவுக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தி அவரிடம் இருந்து தெலுங்கு தேசம் கட்சியை அபகரித்து முதல்வரான கதை உங்களுக்கு தெரியுமா?.

ஆந்திராவுக்கு கடந்த மாதம் 13ம் தேதி லோக்சபா தேர்தலுடன் சேர்ந்து சட்டசபை தேர்தலும் நடந்தது. ஆந்திராவில் மொத்தம் 175 சட்டசபை தொகுதிகள் உள்ளன. இங்கு ஒரு கட்சி தனித்து ஆட்சியை பிடிக்க வேண்டும் என்றால் 88 இடங்களில் வெல்ல வேண்டும். அதன்படி ஆந்திராவில் மும்முனை போட்டி நிலவியது.

Chandrababu Naidu NTR NT Ramarao Andhra Pradesh Assembly Election 2024 oath ceremony telugu Desam

அதாவது ஆளும் கட்சியாக இருந்த முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியின் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ், காங்கிரஸ் + கம்யூனிஸ்ட் கூட்டணி, சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் + நடிகர் பவன் கல்யாணின் ஜனசேனா + பாஜக கூட்டணி என மும்முனை போட்டி நிலவியது.

இதில்தெலுங்கு தேசம் கட்சி 135 தொகுதிகளில் அமோக வெற்றி பெற்றது. பவன்கல்யாணின் ஜனசேனா கட்சி 21 இடங்களிலும், பாஜக 8 இடங்களிலும் வெற்றி பெற்றது. மொத்தமாக இந்த கூட்டணி 164 இடங்களை கைப்பற்றியது. மாறாக ஆளும் கட்சியாக இருந்த ஜெகன் மோகன் ரெட்டியின் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் 11 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. இதையடுத்து 5 ஆண்டு இடைவெளிக்கு பிறகு மீண்டும் சந்திரபாபு நாயுடு முதல்வராக இன்று பதவியேற்க உள்ளார். ஏற்கனவே 3 முறை அதாவது 1995-1999, 1999 - 2004, 2014 - 2019 ஆகிய ஆண்டுகளில் முதல்வராக பொறுப்பேற்ற சந்திரபாபு நாயுடு 4வது முறையாக இன்று முதல்வராக பதவியேற்க உள்ளார்.

இந்நிலையில் தான் சந்திரபாபு நாயுடு யார்? அவர் எப்படி தனது மாமனாரான நடிகரும், ஒருங்கிணைந்த ஆந்திராவின் முன்னாள் முதல்வருமான என்டி ராமராவிடம் இருந்து தெலுங்கு தேசம் கட்சியை அபகரித்து முதல்வராகி அரசியலில் ஜொலித்து வருகிறார் என்பது பற்றி இங்கே பார்க்கலாம்.

என்டி ராமராவ் அல்லது என்டிஆர்.. இந்த பெயரை நாம் நிச்சயம் கேட்டிருப்போம். நந்தமுரி தரகா ராமராவ் என்பதன் சுருக்கம் தான் இந்த என்டி ராமராவ். தெலுங்கு சினிமாவில் உச்சபட்ச நட்சத்திரமாக ஜொலித்தவர் என்டி ராமராவ். தமிழ் சினிமாவில் நடிகர் ரஜினிகாந்த் சூப்பர் ஸ்டாராக இருப்பதுபோல் தெலுங்கு சினிமாவில் கொடிகட்டி பறந்தவர் தான் இந்த என்டி ராமராவ். இவருக்கு அரசியலில் நுழைய ஆர்வம் வந்தது. இதையடுத்து 1982ல் தெலுங்கு தேசம் என்ற கட்சியை தொடங்கி அரசியலில் குதித்தார்.

1983ல் தான் எதிர்கொண்ட முதல் தேர்தலிலேய அவரது கட்சி காங்கிரஸை வீழ்த்தி அரியணை ஏறியது. என்டி ராமராவ் முதல்வராார். 1983 முதல் 1984 வரை முதல்வராக இருந்தார். அதன்பிறகு இதய அறுவை சிகிச்சைக்காக அவர் தனது முதல்வர் பதவியை விட்டு இறக்கப்பட்டார். இதனால் பாஸ்கர ராவ் முதல்வரானார். இதய அறுவை சிகிச்சை முடிந்த பிறகு மீண்டும் 1984 முதல் 1985 வரை 2வது முறையாக முதல்வரானார். பிறகு அரசியலில் சரிவை கண்ட என்டி ராமராவ் மீண்டும் 1994ல் முதல்வரானார். 1995 ம் ஆண்டு செப்டம்பர் 1ம் தேதி வரை முதல்வர் அரியணையில் அவர் வீற்றிருந்தார். இந்த சமயத்தில் தான் அவரது வாழ்க்கையில் யாரும் எதிர்பாராத புயல் வீச தொடங்கியது.

இந்த புயல் வீசுவதற்கு முக்கிய காரணம் யார் என்றால் மருமகன் சந்திரபாபு நாயுடு தான். அதாவது கல்லூரி காலத்திலேயே சந்திரபாபு நாயுடு காங்கிரஸ் கட்சியில் இணைந்து செயல்பட்டார். இளைஞர் காங்கிரஸில் அவர் தீவிரமாக செயல்பட்டார். குறிப்பாக எமர்ஜென்சி காலங்களில் மக்களால் அதிகம் வெறுக்கப்பட்ட ஒடுக்குமுறைகளை ஏவிவிட்ட இந்திரா காந்தியின் இளைய மகன் சஞ்சய்காந்தியின் படுதீவிர ஆதரவாளர் சந்திரபாபு நாயுடு. 1978-ம் ஆண்டு சந்திரகிரி தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு எம்எல்ஏவாகி இருந்தார். அவருக்கு அமைச்சர் பதவியும் வழங்கப்பட்டது.

அதன்பிறகு கருத்து வேறுபாட்டால் அவர் காங்கிரஸில் இருந்து விலகி என்டி ராமராவின் தெலுங்கு தேசம் கட்சியில் இணைந்தார். என்டிஆரின் நம்பிக்கையை பெற்ற இளம் தலைவராக சந்திரபாபு நாயுடு அறியப்பட்டார். என்டிஆரின் மகள் புவனேஸ்வரியை அவர் கரம் பிடித்தார். மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து கட்சியை வளர்க்கும் பணியில் அவர் தீவிரம் காட்டி வந்தார். இதனால் என்டிஆரின் அமைச்சரவையில் கூட அவர் இடம்பெறாமல் இருந்தார்.

இதனால் சந்திரபாபு நாயுடுவை, என்டிஆர் அதிகம் நம்பினார். ஆனால் இந்த அதீத நம்பிக்கையையே என்டிஆரை அரசியலில் வீழ்த்தியது. அதாவது 1994ம் ஆண்டில் ஒருங்கிணைந்த ஆந்திரா சட்டசபை தேர்தலில் தெலுங்கு தேசம் கட்சி அமோக வெற்றி பெற்றது. மொத்தம் 230 எம்எல்ஏக்களை தெலுங்கு தேசம் கட்சி பெற்றது. 3வது முறையாக என்டிஆர் முதல்வரானார். ஓராண்டு கூட கடக்காத நிலையில் என்டிஆருக்கு எதிராக சந்திரபாபு நாயுடு புரட்சியை தொடங்கினார்.

அதாவது மனைவி மறைந்த நிலையில் தனிமையில் இருந்த என்டிஆருக்கு லட்சுமி பார்வதி என்பவர் பழக்கமானார். அவரை காதலித்து நெருக்கம் காட்டினார். இதனை சாதகமாக பயன்படுத்தி தான் சந்திரபாபு நாயுடு, மாமனார் என்டிஆரிடம் இருந்து கட்சியை அபகரித்தார். அதாவது பல ஆயிரம் பேர் கூடியிருந்த மேடையில் லட்சுமி பார்வதியை திருமணம் செய்ய என்டிஆர் முடிவு செய்தார். இதற்கு சந்திரபாபு நாயுடு எதிர்ப்பு தெரிவித்து மின்சாரத்தை துண்டித்தார்.

அதுமட்டுமின்றி என்டிஆரின் 10 மகன்கள், 4 மகள்களுக்கும் தங்களின் தந்தை லட்சுமி பார்வதியுடன் உறவு வைத்திருப்பதை விரும்பவில்லை. இதனை சாதகமாக பயன்படுத்தி என்டிஆர் மகன் ஹரிகிருஷ்ணா உள்ளிட்ட சிலருடன் சேர்ந்து கட்சியை மொத்தமாக அபகரித்தார். மொத்தமுள்ள 219 எம்எல்ஏக்களில் 28 பேர் மட்டுமே என்டிஆருக்கு சாதகமாக இருக்க மற்றவர்கள் சந்திரபாபு நாயுடுவின் பக்கம் சென்றனர். இதற்கிடையே உடல்நலக்குறைவால் அவதிப்பட்ட என்டி ராமராவ் சட்டசபையை கலைக்கும் நோக்கில் முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். அதற்கான கடிதத்ததை மருத்துவமனையில் இருந்தபடியே ஆளுநரிடம் வழங்கினார்.

இதனை சாதகமாக பயன்படுத்திய சந்திரபாபு நாயுடு தனது ஆதரவு எம்எல்ஏக்களின் உதவியுடன் முதல்வரானார். அன்று முதல் இன்று வரை தெலுங்கு தேசம் கட்சியின் தலைவராக சந்திரபாபு நாயுடு உள்ளார். இந்த மனவருத்தத்தில் இருந்த என்டி ராமராவ் 1996 ஜனவரி 18 ம் தேதி காலமானார் என்பது சோகமான செய்தியாகும்.

அதன்பிறகு என்டிஆரின் ஆதரவாளர்கள் சந்திரபாபு நாயுடு மீது கோபத்தை கொப்பளித்தனர். சொந்த மாமனாருக்கே துரோகம் இழைத்த துரோகி என்று விமர்சித்தனர். ஆனாலும் கூட சந்திரபாபு நாயுடு அதனை கண்டுக்கொள்ளாமல் அரசியலில் கவனம் செலுத்தி அரசியலில் பெரும் தலைவராக வளர தொடங்கினார். இன்றயை தினம் மத்தியில் அவரது கட்சியின் 16 எம்பிக்களின் ஆதரவில் தான் பாஜக ஆட்சியில் உள்ளது. பிரதமராக மோடி 3வது முறையாக பதவியேற்றுள்ளார் என்பதும், ஆந்திராவின் முதல்வராக 4வது முறை சந்திரபாபு நாயுடு இன்று பதவியேற்க உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+