ராஜஸ்தானில் பாஜக வெற்றி பெற்றால்.. முதல்வர் வசுந்தரா இல்லையா? போட்டியில் முந்தும் தியா குமாரி
ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் சட்டசபை தேர்தலில் பாஜக வெற்றி பெற்றால், அந்த கட்சியின் சார்பில் முதல்வராக யார் பொறுப்போற்பார்கள் என்பதை பாஜக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. வசுந்த்ரா ராஜே தவிர முதல்வர் பதவிக்கான போட்டியில் முன்னிலையில் தியா குமாரி என்பவரும் இருக்கிறார். தியா குமாரி தான் பாஜகவின் அறிவிக்கப்படாத முதல்வர் வேட்பாளராக கருதப்படுகிறார்.
ராஜஸ்தான் சட்டசபை தேர்தல் கடந்த நவம்பர் 25ம் தேதி நடந்தது. மொத்தம் உள்ள 200 தொகுதிகளில் 199 தொகுதிகளுக்கு தேர்தல் நடந்தது. காங்கிரஸ் வேட்பாளர் மரணம் அடைந்த காரணத்தால் ஒரு தொகுதியில் தேர்தல் நடைபெறவில்லை. வாக்கு எண்ணிகை காலை தொடங்கி உள்ளது.

ராஜஸ்தானை பொறுத்தவரை கடந்த 25 ஆண்டுகளாக காங்கிரஸ் கட்சியும் பாஜகவும் மாறி மாறி ஆட்சி செய்வது வாடிக்கையாக உள்ளது. கடந்த 2018ல் காங்கிரஸ் வெற்றி பெற்ற நிலையில், 2023ல் தாங்கள் தான் வெல்வோம் என பாஜக நம்பிக்கையுடன் இருக்கிறது தேர்தலுக்குப் பிந்தைய பெரும்பாலான கருத்துக் கணிப்புகளும் பாஜகவே ஆட்சியை அமைக்கும் என தெரிவித்துள்ளன.
இதனிடையே ராஜஸ்தான் தேர்தலின்போது பாஜகவின் முதல்வர் வேட்பாளர் இவர் தான் என தேசிய தலைமை யாரையும் அறிவிக்கவில்லை.. அதேநேரம் பாஜகவின் அறிவிக்கப்படாத முதல்வர் வேட்பாளராக தியா குமாரி கருதப்படுகிறார்.
அண்மையில் ஊடகம் ஒன்று ராஜஸ்தான் தேர்தலில் பாஜக வெற்றி பெற்றால் முதல்வர் வேட்பாளர் யார் என கேட்டது.. அதற்கு பதில் அளித்த தியா குமாரி, ராஜஸ்தான் சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் எங்களுக்கு சாதகமாகவே இருக்கும். முழு பெரும்பான்மையுடன் பாஜக கண்டிப்பாக ஆட்சி அமைக்கும். காங்கிரஸ் ஆட்சி மீது மக்கள் நம்பிக்கை போய்விட்டது. இப்போது ராஜஸ்தானில் நடக்கும் இரட்டை இன்ஜின் ஆட்சியை மக்கள் விரும்பவில்லை..
பாஜக வெற்றி பெற்றால் யார் முதல்வர் என்பதை தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு கட்சியின் உயர்மட்டக் குழுவும், முக்கிய தலைவர்களும் முடிவெடுப்பார்கள். என்னைப் பொறுத்தவரை, கட்சி என்ன வேலையை கொடுத்ததோ நான் அவற்றை எப்போதுமே நிறைவேற்றி வந்துள்ளேன் என்றார்.
யார் இந்த தியா குமாரி?: ஜெய்ப்பூர் சமஸ்தானத்தின் கடைசி மன்னராக இருந்த இரண்டாம் மான் சிங்கின் மகன் பவானி சிங்கின் ஒரே மகள் தான் தியா குமாரி. லண்டனில் உள்ள செல்சியா கலைக் கல்லூரியில் பட்டப்படிப்பை முடித்த இவர், ஜெய்ப்பூரில் உள்ள அமிதி பல்கலைக்கழகத்தில் தத்துவ இயலில் பிஎச்டி பட்டம் பெற்றவர். கடந்த 2013-ம் ஆண்டு பாஜகவில் இணைந்த தியா குமாரி, அதே ஆண்டில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் சவாய் மதோபூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இதையடுத்து, 2019-ம் ஆண்டு ராஜ்சமந்த் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட்டு தியா குமாரி வெற்றி பெற்றார். தற்போது நடைபெற்ற தேர்தலில் வித்யாதார் நகர் தொகுதியில் போட்டியிட்டிருக்கிறார். எம்பியாக உள்ள தியா குமாரி இங்கு பாஜக ஆட்சியமைத்தால், முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட அதிக வாய்ப்பு உள்ளதாம்..












Click it and Unblock the Notifications