பாஜகவின் 35 ஆண்டுக்கால கோட்டை.. அமித்ஷாவின் காந்திநகரை இந்த முறையாவது மீட்டெடுக்குமா காங்கிரஸ்?
காந்திநகர்: லோக்சபா தேர்தலை பொறுத்த அளவில் குஜராத் மிக முக்கியமானதாகும். எனவே, வழக்கம் போல இந்த முறையும் இம்மாநிலத்தை யார் கைப்பற்றுவது என்கிற போட்டி தீவிரமடைந்துள்ளது. இந்த செய்தி குஜராத் தலைநகர் காந்திநகர் குறித்து விரிவாக அலசுகிறது.
கடந்த 2019ம் ஆண்டை போலவே இந்த முறையும் லோக்சபா தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. எனவே தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. குறிப்பாக குஜராத் மாநிலத்தில் மொத்தம் உள்ள 26 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக மே 26ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இதில் காந்திநகர் தொகுதி நட்சத்திர தொகுதியாக இருக்கிறது. இங்கு இந்த முறையும் அமித்ஷா களமிறங்குவதால் தேர்தல் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கிறது.

தொகுதிக்கான பிரச்னை: குஜராத் மாநிலம் பாஜகவின் கோட்டை என்றே சொல்லலாம். இருந்தாலும் நீண்ட காலமாக இந்த கோட்டையில் உள்ள ஓட்டைகள் அடைக்கப்படாமல் இருக்கிறது. காந்திநகர் குஜராத்தின் தலைநகராக இருந்தாலும், அகமதாபாத்துடன் பொருளாதார ரீதியாக இதை இணைக்க வேண்டிய கட்டாயம் எழுந்திருக்கிறது. இங்குள்ள தொழில்நுட்ப, சேவை நிறுவனங்கள் மேலும் வளர இருப்பதால் அதற்கான தேவைகள் அதிகமாகவே இருக்கின்றன.
காந்திநகரில் உற்பத்தி, வர்த்தகம் மற்றும் பொழுதுபோக்கு ஆகியவற்றின் வளர்ச்சியில் அரசு கவனம் செலுத்த வேண்டும் என்று குரல்கள் எழுந்து வருகின்றன. மருந்துகள், இரசாயனங்கள், ஜவுளி மற்றும் மின்னணுவியல் போன்ற துறைகளை உள்ளடக்கிய பல்வேறு தொழில்துறை தளத்தை இந்த தொகுதி கொண்டுள்ளது. எனவே உள்கட்டமைப்புகளை மேம்படுத்த வேண்டும் என்றும் குரல்கள் எழுந்திருக்கின்றன. அதேநேரம் புலம் பெயர் தொழிலாளர்களுக்கான பாதுகாப்பு, முதலீடுகளை ஈர்க்க கூடுதல் முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் நீண்ட காலமாக வலியுறுத்தப்பட்டு வருகிறது.
கடந்த 2 தேர்தல்கள்: காந்திநகர் தொகுதியில் பாஜகவின் மிக பிரபலமான தலைவர்கள் போட்டியிட்டு வெற்றி பெற்றிருக்கிறார். மூத்த தலைவர் அத்வானி, முன்னாள் பிரதமர் வாஜ்பாய் போன்றோர் இந்த தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றிருக்கிறார்கள். கடந்த 1989லிருந்து, அதாவது 35 ஆண்டுகளாக இந்த தொகுதியை பாஜகதான் கைப்பற்றி வந்திருக்கிறது.
கடந்த 2014ம் ஆண்டு தேர்தலை பொறுத்த அளவில் இந்த தொகுதியில் அத்வானி போட்டியிட்டு சுமார் 4.8 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருக்கிறார். அவரை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் வெறும் 2.9 லட்சம் வாக்குகளை மட்டுமே பெற்றிருந்தார். அதேபோல 2019ம் ஆண்டு தேர்தலில், அமித்ஷா பாஜக சார்பில் களமிறங்கினார். அவருக்கு மொத்தமாக 8.9 லட்சம் வாக்குகள் கிடைத்தன. தன்னை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளரை விட 5.5 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். காங்கிரஸ் வேட்பாளர் 3.3 லட்சம் வாக்குகளை மட்டுமே பெற்றிருந்தார்.
2024 வேட்பாளர்: இந்த முறையும் பாஜக சார்பில் அமித்ஷா போட்டியிடுகிறார். அதேபோல இந்தியா கூட்டணி சார்பில் காங்கிரஸ் வேட்பாளராக சோனல் படேல் களமிறக்கப்பட்டிருக்கிறார். இவர் குஜராத் காங்கிரஸ் கமிட்டியின் மகளிர் அணியின் முன்னாள் மாநில தலைவராவார். இவர் அமித்ஷாவுக்கு இணையான பிரபலத்தை பெற்றிருக்கவில்லை என்றாலும், தற்போதைய சூழலில் பாஜகவுக்கு எதிர்பார்க்கும் அளவுக்கு இவர் டஃப் கொடுப்பார் என்றே சொல்லப்படுகிறது.
வெற்றி வாய்ப்பு: என்னதான் காந்திநகர் பாஜகவின் 35 ஆண்டுகால கோட்டையாக இருந்தாலும், ஒட்டுமொத்த மாநில சூழல் இந்த தொகுதியின் வெற்றி வாய்ப்பை சற்று குறைக்க வாய்ப்புள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கூறியுள்ளனர். அதாவது குஜராத்தின் ஜூனகத், வதோதரா, சுரேந்தர் நகர் தொகுதிகளில் பாஜக சார்பில் யாரை நிறுத்துவ என்கிற குழப்பம் நீடித்து வருகிறது. இது காந்திநகர் தொகுதியில் பாஜகவின் வேலையை பாதிக்கும் என்றும் சொல்லப்படுகிறது. அதேபோல இந்த முறை இந்தியா கூட்டணியில் காங்கிரசுடன், ஆம் ஆத்மியும் கை கோர்த்துள்ளதால் பாஜகவுக்கு போட்டி பலமாக இருக்கும் என்றும் சொல்லப்படுகிறது.












Click it and Unblock the Notifications