பார்டர் - கவாஸ்கர் கோப்பை.. ஆஷஸ் தொடரை விட முக்கியம்.. ஸ்டீவ் ஸ்மித் சொல்லியதற்கு என்ன காரணம்?
இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான பார்டர் - கவாஸ்கர் கோப்பை தொடர் நாளை தொடங்க உள்ளது.
நாக்பூர்: டி20 உலகக்கோப்பைத் தொடருக்கு பின் இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான பார்டர் - கவாஸ்கர் கோப்பைக்கான டெஸ்ட் தொடர் மீதான எதிர்பார்ப்பு உச்சத்தில் இருக்கிறது. அதற்கான காரணம், கடந்த முறை ஆஸ்திரேலியா பயணித்த இந்திய அணி கோப்பையை வென்றது தான்.
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் அவ்வளவு எளிதாக நான்கு போட்டிகளை கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்க முடியாது. ஆஸ்திரேலியா, இங்கிலாந்து மற்றும் இந்தியா மட்டுமே 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் அல்லது ஐந்து போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்று வருகின்றன. அதற்கு அந்தந்த நாடுகளின் வியாபாரம் மட்டும் காரணமல்ல.
ஆட்டத்திறனும் முக்கிய காரணம். நூற்றாண்டு வரலாற்றை கொண்ட இந்திய அணியிடமே கடந்த ஆண்டில் தான் இங்கிலாந்து அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. ஏன் டெஸ்ட் போட்டிகள் கொண்ட நீண்ட தொடர்களில் மற்ற நாடுகள் விளையாடுவதில்லை என்ற கேள்வி பலருக்கும் வரும். அதற்கு அந்தந்த அணிகள் டெஸ்ட் போட்டிகளுக்கு கொடுக்கும் முக்கியத்துவம், வெளிப்படும் ஆட்டத்திறனுமே காரணம்.

ஆஷஸ் தொடர்
இப்போது ஆஷஸ் தொடரை விடவும் பார்டர் - கவாஸ்கர் கோப்பையை வெல்வது எங்களுக்கு மிகவும் முக்கியம் என்று ஆஸி. அணி வீரர் ஸ்டீவ் ஸ்மித் கூறி இருக்கிறார். இதற்கு கடந்த இரண்டு முறை ஆஸ்திரேலியா சென்ற இந்தியா, ஆஸ்திரேலிய அணியை அதன் சொந்த மண்ணில் வீழ்த்தியதே காரணம். முதல்முறை தொடரை இழந்த போது வார்னர் , ஸ்டீவ் ஸ்மித் உள்ளிட்ட முக்கிய வீரர்கள் இல்லை என்று ஆருடன் சொல்லிக் கொண்டார்கள்.

கோட்டையை தகர்த்த இந்தியா
ஆனால் வார்னர், ஸ்டீவ் ஸ்மித், லபுஷேன் போன்ற வீரர்கள் கொண்ட அணியையும், எந்த அனுபவமும் இல்லாத இந்திய அணி வீழ்த்தி காட்டியது. யாரும் கற்பனை கூட செய்திராத காபா கோட்டையில் வைத்து ஆஸ்திரேலியா வெளுத்து வாங்கியது. விளைவு, அதே மைதானத்தில் இந்தியர்களை தப்புக் கணக்கு போட்டது தவறு என்று ஆஸி. பயிற்சியாளரே அறிவித்தார்.

பதிலடிக்கு காத்திருக்கும் ஆஸி.
அந்த ரணத்தை ஆற்றுவதற்காக தான் ஆஸ்திரேலியா இந்தியாவுக்கு வந்திருக்கிறது. ஆஸ்திரேலியா போன்ற அடிபட்ட புலிகள், அவ்வளவு எளிதாக தோல்வியை ஒப்புக் கொள்ளாது. இந்திய அணியை அதன் சொந்த மண்ணில் வீழ்த்திவிட்டு, மீண்டும் தங்களின் கவுரவத்தையும், தங்களின் பாரம்பரியம் என்ன தெரியுமா என்று கொக்கரிப்பதற்காக ஆஸ்திரேலியா வந்திருக்கிறது.

அக்சர் படேல்
அதற்காக தான் பயிற்சி ஆட்டங்களில் ஆஸ்திரேலிய அணி பங்கேற்கவில்லை. சுழலுக்கு ஏற்றாற்போல், ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்கள் பயிற்சியை மேற்கொள்கிறார்கள். கடந்த முறை அஸ்வின் கொடுத்த மன உளைச்சலால், அவரை போன்ற பந்துவீசும் ஒரு இளைஞனை பிடித்து ஆஸ்திரேலியா பேட்ஸ்மேன்கள் பயிற்சி செய்து வருகிறார்கள். அதுமட்டுமல்லாமல் அஸ்வினின் மன உறுதியை தகர்ப்பதற்காக அக்சர் படேலை எப்படி எதிர்கொள்ளப் போகிறோம் என்பதே எங்களின் முக்கிய சவால் என்று ஆஸ்திரேலிய நிர்வாகம் விவாதிப்பதாக தகவல் வெளியிடப்படுகிறது.

இந்திய அணி
இந்திய அணியில் ரிஷப் பண்ட், ஸ்ரேயாஸ் ஐயர் உள்ளிட்ட முக்கிய வீரர்கள் இல்லையென்றாலும், புதிய வீரர்களுக்கு வாய்ப்பு கிடைக்கும் என்பதும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏனென்றால் கடந்த முறை ஆஸ்திரேலியாவுக்கு எதிராக களம்புகுந்த புதிய வீரர்கள் தான் இந்திய அணிக்கு கோப்பையை வென்று கொடுத்தார்கள்.

டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி
எது எப்படி இருந்தாலும், மீண்டும் ஆக்ரோஷத்துடன் சீண்டும் ஆஸ்திரேலியர்களையும், பதிலடி கொடுக்க தயாராக இருக்கும் இந்தியர்களையும் களத்தில் பார்க்க ரசிகர்கள் ஆவலாக இருக்கின்றனர். களம் புகுவதற்கு முன்பாகவே பாயும் ஆஸ்திரேலியா அணியையும், பாய்வதற்காக பதுங்கி இருக்கும் இந்திய அணியும் களத்தில் எப்படி செயல்பட போகிறார்கள் என்பதே எதிர்பார்ப்பாக உள்ளது. அதுமட்டுமல்லாமல் இந்த டெஸ்ட் தொடரை இந்திய அணி வெல்லும் பட்சத்தில், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு முன்னேறும் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications