ஒரு துளி இரும்பு இல்லாமல் பிரம்மாண்டமாக கட்டப்பட்ட அயோத்தி ராமர் கோயில்.. காரணம் சுவாரசியமா இருக்கே
டெல்லி: அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகம் நாளை மறுநாள் நடைபெறும் நிலையில், இது தொடர்பாகப் பல சுவாரசிய தகவல்கள் இப்போது வெளியாகியுள்ளது.
அயோத்தியில் கட்டப்பட்டுள்ள பிரமாண்ட ராமர் கோவில் உண்மையிலேயே இந்தியப் பாரம்பரிய கட்டிடக்கலைக்கு ஒரு எடுத்துக்காட்டாக இருக்கிறது. பல தலைமுறைகள் தாங்கும் வகையில் இந்த ராமர் கோயிலைக் கட்டி எழுப்பியுள்ளனர்.

அயோத்தி: ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக இந்த கோயில் நீட்டிக்கும் வகையில் கட்டப்பட்டுள்ளதாக அயோத்தியில் உள்ள ஸ்ரீ ராம் ஜென்மபூமி க்ஷேத்ரா அறக்கட்டளை கோயில் குழுவின் தலைவர் ஸ்ரீ நிருபேந்திர மிஸ்ரா தெரிவித்துள்ளார். அயோத்தி ராமர் கோயிலை வடிவமைத்து முக்கிய கட்டுமான வல்லுநர்களில் இவரும் ஒருவர் ஆவர். இதன் கட்டுமானத்திற்கு இஸ்ரோ தொழில்நுட்பம் கூட பயன்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
நாகர் ஷைலி அல்லது வட இந்தியக் கோயில் வடிவமைப்புகளின்படி இந்த கோயில் வடிவமைக்கப்பட்டது. 15 தலைமுறைகளுக்கு மேலாகக் கோயில் கட்டமைப்புகளை வடிவமைத்து வரும் சந்திரகாந்த் சோம்புரா என்பவரைக் கோயிலை வடிவமைத்தவர்களில் முக்கியமானவர். இவர்கள் குடும்பம் நாடு முழுக்க இருக்கும் 100க்கும் மேற்பட்ட கோவில்களை வடிவமைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
அரிதான கட்டிக்கலை: உலகிலேயே மிகவும் அரிதான கட்டிடக்கலையை நாங்கள் இதில் பயன்படுத்தியுள்ளோம் என்கிறார் சந்திரகாந்த் சோம்புரா.. இது குறித்து அவர் மேலும் கூறுகையில், "கோவிக்குச் சொந்தமான நிலம் 2.7 ஏக்கராகும். அதில் கோயில் சுமார் 57,000 சதுர அடியில் கட்டப்பட்டுள்ளது. மூன்று தளங்களைக் கொண்டதாகக் கோயிலை நாங்கள் வடிவமைத்துள்ளோம்.
இந்த கோயிலில் நாங்கள் இரும்பு எதையும் பயன்படுத்தவில்லை. ஏனென்றால் இரும்பின் ஆயுட்காலம் வெறும் 80-90 ஆண்டுகள் மட்டுமே.. இதன் காரணமாகவே கோயில் கட்டுமானத்தில் இரும்பு அல்லது எஃகு என எதையும் நாங்கள் பயன்படுத்தவில்லை.. இந்த கோயிலின் உயரம் 161 அடியாகும். அதாவது குதாப் மினார் உயரத்தில் 70% ஆகும்.
கிரானைட், மணற்கல்: மிகச் சிறந்த தரமான கிரானைட், மணற்கல் மற்றும் பளிங்குக் கற்களைக் கொண்டு கோயிலை வடிவமைத்துள்ளனர். சிமென்ட் அல்லது சுண்ணாம்பு என எதையும் நாங்கள் பயன்படுத்தவில்லை. லாக் அண்ட் கீ முறையில் கற்களை வைத்து மட்டுமே இந்த கட்டுமானத்தை ஏற்படுத்தியுள்ளோம்" என்றார். நிலநடுக்கம் எதாவது ஏற்பட்டால் அதையும் தாங்கும் வகையிலேயே இந்த கோயில் கட்டுமானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அடுத்த 2,500 ஆண்டுகளில் வலிமையான நிலநடுக்கம் ஏற்பட்டாலும் அதையும் தாங்கும் வகையிலேயே இந்த கோயிலை வடிவமைத்துள்ளனர்.
இது தொடர்பாக வல்லுநர்கள் கூறுகையில், "முதற்கட்ட ஆய்வின் போது, கோவிலுக்கு அடியில் மணல் அதிகமாக இருந்தது தெரிய வந்தது. அங்கே இருந்த மணல் நிலையற்றதாக இருந்தது. சரயு நதி அருகே ஓடியதால் மண் தளர்வாக இருந்தது. ஆனால் ஆய்வாளர்கள் இந்த பிரச்சனைக்கு ஒரு புத்திசாலித்தனமான தீர்வைக் கண்டுபிடித்தனர்.
எப்படி: முதற்கட்டமாகக் கோவில் பகுதி முழுவதும் 15 மீட்டர் ஆழத்திற்கு மண் தோண்டப்பட்டது. பிறகு இப்பகுதியில் 12-14 மீட்டர் ஆழத்திற்கு மண் போடப்பட்டது, எஃகு ரீ-பார்கள் என எதுவும் பயன்படுத்தப்படவில்லை.. இதை முறையைப் பயன்படுத்தி 47 தளங்களில் கெட்டியான பாறை போன்ற அமைப்பை உருவாக்கினோம். இதன் மேல், 1.5 மீட்டர் தடிமன் கொண்ட எம்-35 தர உலோகம் இல்லாத கான்கிரீட் கொண்டு நிரப்பினோம். அஸ்திவாரத்தை மேலும் வலுப்படுத்தத் தென்னிந்தியாவில் இருந்து எடுக்கப்பட்ட 6.3 மீட்டர் தடிமன் கொண்ட திடமான கிரானைட் கல் அமைக்கப்பட்டது.
கோயிலின் பார்வையாளர்கள் பார்க்கக்கூடிய பகுதி ராஜஸ்தானில் இருந்து எடுக்கப்பட்ட 'பான்சி பஹர்பூர்' என்ற இளஞ்சிவப்பு மணற்கற்களால் ஆனது. தரை தளத்தில் உள்ள மொத்த தூண்களில் 160, முதல் தளம் 132, மற்றும் இரண்டாவது தளம் 74 ஆகியவை மணற்கற்களால் செய்யப்பட்டு வெளியில் செதுக்கப்பட்டவை" என்றார். இந்த அயோத்தி கோயில் பல ஆண்டுகள் இருக்க வேண்டும் என்பதற்காகவே இரும்பு எதையும் பயன்படுத்தாமல் கட்டுமானத்தை மேற்கொண்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications