மக்கள் கையில் பணம் இல்லை.. ஜிடிபி குறைஞ்சி போச்சு.. ரெப்போ ரேட் கிடுகிடுவென குறைக்கப்பட்ட பின்னணி
இந்திய ரிசர்வ் வங்கியின் (RBI) கவர்னர் சஞ்சய் மல்ஹோத்ரா, எதிர்பாராத விதமாக ரெப்போ விகிதத்தை 50 அடிப்படை புள்ளிகள் குறைத்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார். முன்னதாக, எஸ்பிஐ மற்றும் மோர்கன் ஸ்டான்லி போன்ற சில பொருளாதார வல்லுநர்கள் மட்டுமே ரெப்போ விகிதத்தில் கணிசமான குறைப்பை எதிர்பார்த்திருந்த நிலையில், பெரும்பாலான நிபுணர்கள் 25 அடிப்படை புள்ளிகள் வரை மட்டுமே குறைப்பு இருக்கும் என்று கணித்திருந்தனர். ஆனால், இந்த அதிரடி குறைப்பை யாரும் கணிக்கவில்லை. ரெப்போ விகிதம் தற்போது 6% லிருந்து 5.5% ஆக குறைந்துள்ளது.
கடன் வாங்குபவர்களுக்கு மகிழ்ச்சி
இந்த ஆண்டின் தொடக்கத்திலிருந்து, ரிசர்வ் வங்கி இதுவரை ரெப்போ விகிதத்தை 100 அடிப்படை புள்ளிகள் குறைத்துள்ளது. வங்கிகள் இந்த குறைப்பின் முழு பலனையும் வாடிக்கையாளர்களுக்கு வழங்குவதால், வீட்டுக் கடன் EMIகள் கணிசமாகக் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது கடன் வாங்குபவர்களுக்கு நல்ல செய்தியாகும்.

ஏன் 50 அடிப்படை புள்ளிகள் குறைத்தது?
நாணயக் கொள்கைக் குழுவின் (Monetary Policy Committee) இந்த முடிவுக்கு பின்னால் உள்ள காரணங்களை இப்போது பார்க்கலாம்:
4.0% ஆக இருந்த பணவீக்க விகிதம், தற்போது 3.7% ஆக குறைக்கப்பட்டுள்ளது. அதாவது விலைவாசி குறைந்துள்ளது. கடந்த ஆறு மாதங்களில்தான் பணவீக்கம் குறிப்பிடத்தக்க அளவு குறைந்துள்ளது. அக்டோபர்-ல் இருந்த அதிகப்படியான பணவீக்கம், தற்போது இலக்கை விடக் குறைந்துள்ளது.
தற்போதைய கணிப்புகளின்படி, பணவீக்கம் 4% இலக்கை நோக்கி சீராக இருக்கும் என்று ரிசர்வ் வங்கி நம்புகிறது. மேலும், இந்த ஆண்டு பணவீக்க புள்ளிவிவரங்கள் இலக்கை விடக் குறைவாகவே இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
உணவுப் பணவீக்கத்தின் தொடர்ந்து மந்தமாகவே உள்ளது. அதே நேரத்தில், உலகப் பொருளாதார வளர்ச்சியின் மந்தநிலையால் சர்வதேச பொருட்கள் விலை குறைந்துள்ளதால், முக்கிய பணவீக்கம் மிதமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இருப்பினும், GDP வளர்ச்சி எதிர்பார்த்த அளவை விடக் குறைவாகவே உள்ளது. கொரோனா காலத்திற்கு பிறகு, மிக குறைவான ஜிடிபிஐ இப்போது இந்தியா பதிவு செய்துள்ளது. உலகளாவிய சந்தை சவால்கள் மற்றும் நிச்சயமற்ற தன்மைகள் காரணமாக இந்த நிலை ஏற்பட்டுள்ளதாம். ஜிடிபி வளர்ச்சியை கூட்ட வேண்டுமெனில் மக்கள் கையில் பணப் புழக்கம் அதிகரிக்க வேண்டும்.
இதைத்தான் ரிசர்வ் வங்கி, "இத்தகைய சூழ்நிலையில், பொருளாதார வேகத்தை மேம்படுத்த பொருத்தமான கொள்கை நடவடிக்கைகளின் மூலம் உள்நாட்டு நுகர்வு மற்றும் மூலதன முதலீட்டை அதிகரிப்பது மிகவும் முக்கியமானது" என்று குறிப்பிட்டுள்ளது.
MPC உறுப்பினர்களின் ஒருமித்த முடிவு
நாணய கொள்கைக் குழுவின் (MPC) வாக்கெடுப்பில், கொள்கை ரெப்போ விகிதத்தை 50 அடிப்படை புள்ளிகள் குறைக்க முடிவு செய்யப்பட்டது. இதன் விளைவாக ரெப்போ விகிதம் 5.50% ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. டாக்டர். நாகேஷ் குமார், பேராசிரியர் ராம் சிங், டாக்டர். ராஜீவ் ரஞ்சன், டாக்டர். பூனம் குப்தா மற்றும் சஞ்சய் மல்ஹோத்ரா ஆகிய ஐந்து உறுப்பினர்கள் 50 அடிப்படை புள்ளிகள் குறைப்புக்கு ஆதரவு அளித்தனர். அதே நேரத்தில், சௌகதா பட்டாச்சார்யா ரெப்போ விகிதத்தில் 25 அடிப்படை புள்ளிகள் குறைப்பு மட்டுமே போதுமானது என்று கருத்து தெரிவித்தார்.
இது குறித்து ரிசர்வ் வங்கி கவர்னர் சஞ்சய் மல்ஹோத்ரா கூறுகையில், "உலகளாவிய சூழல் நிச்சயமற்ற நிலையில் இருப்பதால், உள்நாட்டு வளர்ச்சியில் கவனம் செலுத்துவது மிகவும் அவசியமாகிறது. அதன்படி, இன்றைய நாணயக் கொள்கை நடவடிக்கைகள், வளர்ச்சியை ஒரு உயர்ந்த இலக்கை நோக்கி செலுத்துவதற்கான ஒரு படியாக பார்க்கப்பட வேண்டும்," என்று தெரிவித்தார்.
ரிசர்வ் வங்கியின் இந்த ரெப்போ விகித குறைப்பு பொருளாதார வளர்ச்சிக்கு ஒரு ஊக்கத்தை அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதே நேரத்தில், கடன் வாங்குபவர்களுக்கு EMI களில் கணிசமான குறைப்பை ஏற்படுத்தும் என்றும் நம்பப்படுகிறது.












Click it and Unblock the Notifications