Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

இந்தியா + அமெரிக்கா + மைத்ரிபால சிறிசேன = ஜெனிவா தீர்மானம் ஒத்திவைப்பு?

Subscribe to Oneindia Tamil

டெல்லி: ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையத்தில் இலங்கை மனித உரிமை மீறல்கள் தொடர்பான விசாரணை அறிக்கையை அடுத்த மாதம் தாக்கல் செய்வதை 6 மாத காலம் ஒத்திபோடப்பட்டதற்கு இலங்கையுடன் இந்தியா, அமெரிக்காவும் கை கோர்த்து செயல்பட்டதே காரணம் என்று கூறப்படுகிறது.

இலங்கையில் 2009ஆம் ஆண்டு தமிழீழ விடுதலைப் புலிகளுடனான இறுதி யுத்தத்தின் போது ஒன்றரை லட்சம் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டார்கள். அதே நேரத்தில் 45 ஆயிரம் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டார்கள் என்கிறது ஐ.நா.வின் ஆவணங்கள்.

Why UN Rights Chief agrees to delay presentation of UNHRC report on Sri Lanka?

இலங்கையில் நிகழ்த்தப்பட்டது இனப்படுகொலை; இதற்கு நீதி வேண்டும் என்று புலம் பெயர் தமிழர் அமைப்புகளும், தமிழக அமைப்புகளும் போராட்டம் நடத்தின. இதனைத் தொடர்ந்து ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தில் 2012, 2013ஆம் ஆண்டுகளில் இலங்கையின் 'மனித உரிமை மீறல்கள்" தொடர்பான அமெரிக்காவின் ஆதரவுடன் தீர்மானங்கள் கொண்டு வரப்பட்டு நிறைவேற்றப்பட்டன. இந்த 2 ஆண்டும் இந்தியா அமெரிக்காவின் தீர்மானத்தை ஆதரித்தது.

ஆனால் 2014ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பில் இந்தியா கலந்து கொள்ளாமல் நடுநிலை வகித்தது. இருப்பினும் 2014ஆம் ஆண்டு தீர்மானமாது இலங்கை ராணுவத்தின் மனித உரிமை மீறல்கள் குறித்து சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என்பதுதான்.. ஆனால் இது ஒருநாட்டின் உள்விவகாரத்தில் தலையிடுவது.. அதனால் நிராகரிக்கிறோம் என்று கூறியது இந்தியா.

இந்தப் பின்னணியில் இலங்கையில் ராஜபக்சேவுக்கு எதிரான அதிருப்தி அலை விஸ்வரூபமெடுக்கிறது. சர்வதேச அரங்கத்திலோ இலங்கைத் தீவில் சீனாவின் விஸ்வரூபம் அச்சத்தை ஏற்படுத்துகிறது.

இந்நிலையில் இந்தியாவில் ராஜபக்சேவை தாங்கிப் பிடித்த காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு லோக்சபா தேர்தலில் தோல்வியைத் தழுவுகிறது. நரேந்திர மோடி தலைமையிலான புதிய மத்திய அரசு ஏற்படுகிறது. முந்தைய காங்கிரஸ் அரசைப் போல ராஜபக்சேவுடன் இணக்கமாகப் போக்கை நரேந்திர மோடி அரசு முதலில் கடைபிடித்தாலும் கூட இலங்கையில் சீனாவின் ஆதிக்கம் மத்திய அரசுக்கு உறுத்தலாகவே இருந்தது.

குறிப்பாக மோடி அரசு பதவியேற்ற நிலையில் சீனாவின் நீர்மூழ்கிக் கப்பல்கள் இலங்கையில் நங்கூரமிட்டு நின்றதற்கு நேரடியாகவே ராஜபக்சே அரசிடம் எதிர்ப்பைப் பதிவு செய்தது மோடி சர்க்கார். மேலும் சீனாவுக்கு துறைமுகநகர் ஒப்பந்தம் கொடுக்கவும் இந்தியா எதிர்ப்பு தெரிவித்தது.

இதனால் இலங்கையில் அரசியல் மாற்றங்கள் நிச்சயம் ஏற்படும் அல்லது ராஜபக்சே ஆட்சி கவிழ்க்கப்படும் என்ற புறச் சூழல் ஏற்பட்டது.

இதனை உணர்ந்துகொண்ட ராஜபக்சேவும் 2 ஆண்டுகளுக்கு முன்னரே அதிபர் தேர்தலை எதிர்கொள்வதாக அறிவித்தார். யாரும் எதிர்பாராத வகையில் ராஜபக்சேவின் வலதுகரமாக இருந்த அவரது சொந்த கட்சியின் பொதுச்செயலரான மைத்ரிபால சிறிசேனவை எதிர்த்து போட்டியிடும் நிலைமை உருவானது. அப்போது இலங்கை சென்ற இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், மைத்ரிபால சிறிசேனவை தனியே சந்தித்து உரையாடிய போதே அவருக்குப் பின்னால் இந்தியா இருப்பது உறுதிப்படுத்தப்பட்ட நிகழ்வாக கூறப்பட்டது.

இலங்கை அதிபர் தேர்தலில் இந்தியாவின் ஆதரவுடன் செயல்பட்டு வரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் வேறு யாரை.. மைத்ரிபால சிறிசேனவையே ஆதரித்தது. இந்த கோதாவில் கை கோர்த்த அமெரிக்காவும் 'சுமூகமான' ஆட்சி மாற்றத்தை எதிர்பார்ப்பதாக கூறியிருந்தது. இப்படி இந்தியா, அமெரிக்கா என அனைவருமே எதிர்பார்த்தபடி ராஜபக்சே தோற்றுப் போக தங்களது ஆதரவு மைத்ரிபால சிறிசேன அதிபரானார்.. ஏற்கெனவே மேற்குலக நாடுகளின் செல்லப்பிள்ளையாக கருதப்படும் ரணில் விக்கிரமசிங்கே, பிரதமராகவும் நியமிக்கப்பட்டார்.

இதனைத் தொடர்ந்து சர்வதேசத்தின் பிரதான ஆடுகளமாக இலங்கை உருமாறியது.

முதலில் ஐ.நா.வின் ஆசிய பசிபிக் பிராந்திய அரசியல் விவகார பணிப்பாளர் மரி யமஷிதா இலங்கைக்கு குறுகிய கால பயணம் மேற்கொண்டார். அப்போதே ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத் தீர்மானத்தை ஒத்திவைப்பது குறித்த பேச்சு தொடங்கிவிட்டது.

அவரைத் தொடர்ந்து அமெரிக்காவின் வெளியுறவுத் துறை உதவிச் செயலாளர் நிஷா பிஸ்வால் 3 நாள் பயணமாக இலங்கை சென்றார். அங்கும் இலங்கையின் காலந்தோறுமான நட்பு நாடாக அமெரிக்காவை வெளிப்படுத்திக் கொண்டு பேசிய நிஷா பிஸ்வால், மைத்ரிபால அரசுக்கு ஆதரவு தெரிவிப்பதாகவும் கூறினார். அப்போது ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தில் இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை அமெரிக்கா கொண்டுவருமா என்ற சந்தேகம் எழுப்பப்பட்டது.

இதன் பின்னர் அமெரிக்காவுக்கு இலங்கையின் வெளியுறவுத் துறை அமைச்சர் மங்கள சமரவீர சென்றார்.. அங்கே பகிரங்கமாக நாங்களே எங்கள் நாட்டில் மனித உரிமை மீறல்கள் விசாரணை குறித்து நடத்துகிறோம்.. ஐ.நா.வில் தீர்மானம் தேவையில்லை என்று அறிவித்து அமெரிக்காவின் ஆதரவைப் பெற்றார்.

இதனாலேயே இலங்கையின் வடக்கு மாகாண சபையில், ஐ.நா.வில் தீர்மானம் கொண்டுவரப்படுவது ஒத்திவைக்கப்பட இருக்கிறது. இலங்கையில் நிகழ்ந்தது ஒரு இனப்படுகொலை. இதனால் இதற்கு ஒரு சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தி ஒரு தீர்மானம் நிறைவேற்றியது.

இந்த கொந்தளிப்பான சூழலில் இந்தியா வந்த இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேனவும் அணு உலை ஒப்பந்தம் உட்பட ஒப்பந்தங்களைப் போட்டு இந்தியாவின் நட்பு நாடு என்பதை நிலைப்படுத்திக் கொள்ள முயற்சித்தார். மைத்ரிபால சிறிசேனவின் முதலாவது வெளிநாட்டு பயணமே இந்தியாதான். இந்த பயணத்தின் போது ஜெனீவாவில் தீர்மானத்தை ஒத்திவைக்க இந்தியாவின் ஆதரவைப் பெற்றார் மைத்ரிபால.

இத்தனை பயணங்களுக்குப் பின்னரே ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தின் விசாரணைக் குழுவும் மார்ச் மாதம், இலங்கைக்கு எதிரான தீர்மானம் கொண்டுவருவதை 6 மாதம் ஒத்திவைத்து செப்டம்பரில் கொண்டுவருவோம் என்று அறிவித்தது. இது உலகத் தமிழர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

இலங்கை தரப்போகிற ஆதராங்களுக்காக ஏன் காத்திருக்க வேண்டும்? ஏற்கெனவே நடத்திய ஆதாரங்களை வைத்தாவது ஒரு அறிக்கையைத் தாக்கல் செய்யுங்கள் என்று தமிழர் தரப்பு கோரிக்கை விடுத்து வருகிறது. ஆனால் தங்களுக்கான பொம்மை அரசுக்கு நெருக்கடி கொடுக்கக் கூடாது என்பதற்காக அமெரிக்கா, இந்தியா உள்ளிட்ட நாடுகள் மவுனம் காத்து வருகின்றன.

இதன் பின்னணியில் சொல்லப்படும் காரணங்கள்:

  • இலங்கையின் பிரதமரைத் தேர்வு செய்கிற நாடாளுமன்றத் தேர்தல் ஏப்ரல் மாதம் நடைபெற உள்ளது. சிங்களர் மத்தியில் ராஜபக்சேவின் செல்வாக்கு குறைந்துபோய்விடவில்லை. ஏனெனில் அதிபர் தேர்தலில் தமிழர் பகுதியில் கிடைத்த வாக்குகளால்மட்டுமே மைத்ரிபால அதிபராகி இருக்கிறார். ராஜபக்சேவுக்கு எதிராக சர்வதேச நடவடிக்கை மேற்கொள்ளப் போய் அது நாடாளுமன்றத் தேர்தலில் எதிரொலித்து தங்களது பொம்மை அரசான மைத்ரிபாலவின் ஆட்சி பரிபாலனத்துக்கு நெருக்கடியை கொடுக்கும் வகையில் ராஜபக்சேவின் கை ஓங்கிவிடக் கூடாது என்பது ஒரு காரணம்..
  • இலங்கை அதிபர் தேர்தலுக்கான பிரசார களத்தில் இருந்தே தாங்கள் இலங்கையில் சீனாவின் ஆதிக்கத்தை கட்டுப்படுத்துவோம் என்று மைத்ரிபால தரப்பு உறுதி கூறி தமக்கு பின்னால் உள்ள இந்தியா, அமெரிக்காவை மகிழ்வித்து வருகிறது. இலங்கையில் சீனாவை அகற்றுவதன் முதல் முயற்சியாக ராஜபக்சே வீழ்த்தப்பட்டிருக்கிறார்.. தொடர்ந்தும் சீனாவை இலங்கையில் ஒதுக்கி வைக்க மைத்ரிபால என்ற பொம்மை அரசு தங்களுக்குத் தேவை.. அவருக்கு எந்த நெருக்கடியும் வந்துவிடக் கூடாது என்ற இந்தியா, அமெரிக்காவின் கூட்டுக் கவலை.
  • இலங்கையில் சீனாவின் ஆதிக்கத்துக்குக் காரணமான ராஜபக்சே குடும்பத்தினர் அந்நாட்டு அரசியலில் இருந்தும் மெல்ல மெல்ல ஊழல்வாதிகளாக, மனித உரிமை மீறல்களை அம்பலப்படுத்திக் கொண்டே ஏப்ரல் மாத நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பின்னர் அதாவது அடுத்த செப்டம்பர் ஜெனிவா தீர்மானத்துக்கு முன்னதாக அந்தக் குடும்பத்தினரை சர்வதேசத்தின் முன் குற்றவாளிகளாக நிற்க வைத்து ஒட்டுமொத்தமாக அரசியலைவிட்டே அப்புறப்படுத்துதல்...
  • இப்படி இந்தியா, அமெரிக்காவுடன் மைத்ரிபால சிறிசேனா இணைந்து நிகழ்த்தும் அரசியல் விளையாட்டுகளே ஜெனீவாவில் இலங்கைக்கு எதிரான தீர்மானத்தின் ஒத்திவைப்பின் பின்னணியாக கூறப்படுகிறது. இதனால் இனப்படுகொலைக்கு உள்ளான தமிழர் தரப்பு இந்த ஆடுகளத்தில் எந்த பந்தை எப்படி அடிப்பது என்பது தெரியாமல் விழிபிதுங்கி நிற்க வைக்கப்பட்டிருக்கிறது என்பதே நிதர்சனமான நிகழ்வாகும்.
More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+