எந்தா அமித்ஷா சாரே.. லாலேட்டாவ நம்புனா லாலா கட அல்வாதான்.. மனசிலாயோ?
திருவனந்தபுரம்: தமிழகத்தில் நடிகர் ரஜினிகாந்த் துணையுடன் காலூன்ற முயற்சி செய்து வரும் பாரதிய ஜனதா கட்சி, கேரளாவில் மோகன்லாலை தங்கள் நோக்கத்திற்காக பயன்படுத்துவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
கர்நாடகாவில் தனித்தும், ஆந்திரா, தெலுங்கானாவில் கூட்டணி வைத்தும் ஆட்சி அதிகாரத்தை பாஜகவால் சுவைக்க முடியும். ஆனால் தமிழகமும், கேரளமும்தான் பாஜகவிற்கு, சிம்ம சொப்பனமாக விளங்கி வருகிறது.
கேரளா கம்யூனிஸ்டுகளின் குகை என்றால், தமிழகம் திராவிட இயக்கங்களின் கோட்டை.

ஏன் வேறுபாடு
கம்யூனிசம், திராவிடம் ஆகிய இரு சித்தாந்தங்களும் வலதுசாரி சித்தாந்தத்தை வலுவாக எதிர்ப்பவை. எனவேதான் இந்த சித்தாந்தங்கள் மக்கள் மனதில் வேரூன்றியுள்ள தமிழகம், கேரள மாநிலங்களில் பாஜகவால் கால் ஊன்ற முடியவில்லை. ஆனால் பாஜக தேசியத் தலைவராக உள்ள அமித்ஷாவின் ராஜதந்திர நடவடிக்கைகளை அவ்வளவு எளிதாக குறைத்து மதிப்பிட்டு விட முடியாது. தங்கள் பலத்தை அதிகரிக்க முடியுமோ, இல்லையோ, எதிராளிகளின் பலத்தை குறைத்து அதன் மூலம் வெற்றி பெறுவது என்பது அமித்ஷாவின் மிக முக்கியமான ஒரு வியூகம்.

வியூகங்கள்
பாஜக வெற்றிபெறுவது மிக கஷ்டம் என்று கூறப்பட்டு வந்த வடகிழக்கு மாநிலங்களில் கூட அக்கட்சி, கூட்டணியுடன் ஆட்சி அதிகாரத்திற்கு வந்துவிட்டது. இதற்கு அமித்ஷாவின் வியூகங்கள்தான், முக்கிய காரணம். எனவே தமிழகம், கேரளத்திலும் தனது வியூகத்தின் மூலம் கால் பதித்து விடலாம் என்று நினைக்கிறார் அமித்ஷா.

திரைத்துறை பிடியில் தமிழகம்
தமிழகத்தைப் பொறுத்த அளவில் நடிகர்களுக்கு மக்கள் மத்தியில் அதிக செல்வாக்கு இருப்பதாக கூறப்படுவது உண்டு. அறிஞர் அண்ணா, நாடகம் மற்றும் திரைத் துறையில் பணியாற்றியவர். அதேபோல கருணாநிதி, எம்ஜிஆர், ஜெயலலிதா என வரிசையாக தமிழகத்தை ஆண்ட முதல்வர்கள் திரைத் துறையில் இருந்து வந்தவர்கள். நட்சத்திரங்கள் மீது தமிழக மக்களுக்கு தீராத மோகம் உண்டு.

ரஜினிகாந்த் சர்ச்சைகள்
எனவேதான் ரஜினிகாந்த் எனப்படும் மாபெரும் நட்சத்திர பிம்பத்தை பயன்படுத்தி தமிழகத்தில் காலூன்ற பாஜக முயற்சி செய்து வருகிறது. இதை ரஜினி தரப்பு மறுத்தாலும்கூட, திரை மறைவு அரசியல் இதுதான் என்கிறார்கள் டெல்லி பாஜக தலைமைக்கு நெருக்கமானவர்கள். அடுத்த லோக்சபா தேர்தலில் ரஜினி என முகமூடியுடன் தான் பாஜக தமிழகத்தில் வாக்கு அறுவடை செய்யும் என்று பரவலாக கருத்து உள்ளது. ஆனால் ரஜினிகாந்த் தமிழக மக்களின் மனநிலைக்கு மாறாக கருத்து தெரிவித்து தொடர்ந்து சர்ச்சைகளில் சிக்கி வருகிறார். தேவையற்ற விஷயங்களில், தேவையற்ற கருத்துக்களை கூறுவதும், தேவையான விஷயங்களில் கருத்து கூற மறுப்பதுமாக, தொடர்ச்சியாக அவர் மக்களின் மனங்களிலிருந்து எதிர் திசையில் பயணித்துக் கொண்டு உள்ளார்.

மோகன்லால் மீது நம்பிக்கை
இந்த நிலையில்தான் கேரளாவில் மோகன்லாலை (செல்லமாக லாலேட்டன்) நம்பியுள்ளது பாஜக. மோகன்லால் அங்கு மிகப்பெரிய உச்சநட்சத்திரம். அவர் சமீபத்தில் டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து ஆலோசனை நடத்தி உள்ளது இந்த யூகங்களுக்கு வலு சேர்த்துள்ளது. ஆனால் தமிழகத்துக்கும் கேரளத்துக்கும் மாபெரும் வித்தியாசம் உள்ளது. தமிழகத்தில் பெரும்பாலானோருக்கு கிரிக்கெட் பிடிக்குமென்றால், கேரளாவில் கால்பந்து மோகம் அதிகம். இதே போல் தான் தமிழர்களுக்கு மசாலா திரைப்படம் பிடிக்கும் என்றால், கேரளாவிற்கு யதார்த்த சினிமா. அரசியலிலும் அவர்கள் அப்படித்தான்.

திரை உலகம் தனி
தமிழகத்தில் ஓரிரு இடங்களில் வெற்றி பெறுவதற்கு கம்யூனிஸ்டுகள் பெரிய கட்சிகள் தயவை நாடி கொண்டிருப்பார்கள். ஆனால் கேரளாவில் ஆட்சியையே நடத்திக் கொண்டு உள்ளார்கள். இதேபோலத்தான், நடிகர்கள் மீதான அபிமானமும். நடிப்பு என்பதை திரைத்துறையோடு நிறுத்திக் கொள்வார்கள். ரியல் லைஃப்பில் அவர்கள் சாய்ஸ் வேறாகத்தான் இருக்கும். எனவேதான் திரை உலகம் தனியாகவும், அரசியல் உலகம் தனியாகவும் அங்கு இயங்கி வருகிறது. முக்கிய பிரச்சினைகளில், நடிகர்கள் கருத்துக்கு அங்கு ஏங்கி நிற்பதில்லை.

மோகன்லால் மீது கோபம்
கலைக்கு உரிய மரியாதை கொடுக்கும் கேரள மக்கள், அரசியலில் அவர்கள் மூக்கை நுழைக்காமலும் பார்த்துக் கொள்வார்கள். ஆனால் வேறு வழியின்றி மோகன்லால் துணையை நாடி உள்ளது பாஜக. ரஜினிகாந்தை போலவே மோகன்லாலும் சமீப காலமாக அங்கு சர்ச்சையில் சிக்கி வருகிறார். நடிகை ஒருவரை பாலியல் பலாத்காரம் செய்ய ஆட்களை ஏவிய நடிகர் திலீப்க்கு மோகன்லால் ஆதரவு தெரிவிப்பதாக சர்ச்சை உள்ளது. மலையாள நடிகர் சங்கமான 'அம்மா'வில் இருந்து நீக்கப்பட்ட திலீப்பை மறுபடியும் சேர்த்துக்கொள்ள சங்க தலைவர் என்ற வகையில் மோகன்லால் நடவடிக்கை எடுத்தார். இதையடுத்து பல்வேறு நடிகைகளும் சங்கத்தில் இருந்து விலகினர். இதற்கு மோகன்லால் அளித்த விளக்கம் விளக்கெண்ணெயில் வெண்டைக்காயை தடவியது போல் தான் இருந்தது. இதனால் பெண்கள் மத்தியிலும், நடுநிலையாளர்கள் மத்தியிலும், மோகன்லால் மீது கடும் கோபம் உள்ளது. இந்த சூழ்நிலையில் மண்குதிரையை நம்பி ஆற்றில் இறங்க தயாராகி உள்ளது பாஜக.












Click it and Unblock the Notifications