சிறைவாசத்திலிருந்து தப்பினார் சல்மான்... தண்டனையை நிறுத்தி வைத்தது பாம்பே ஹைகோர்ட்!
மும்பை: காரை ஏற்றி ஒருவரை கொலை செய்த வழக்கில் நடிகர் சல்மான் கானுக்கு மும்பை செஷன்ஸ் நீதிமன்றம் அளித்த 5 ஆண்டு சிறை தண்டனையை பாம்பே உயர் நீதிமன்றம் சஸ்பெண்ட் செய்து இன்று உத்தரவிட்டது.
கடந்த 2002ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 28ம் தேதி பாலிவுட் நடிகர் சல்மான் கான் குடிபோதையில் மும்பை பந்த்ரா பகுதியில் காரை ஓட்டி சாலையோரம் படுத்திருந்தவர்கள் மீது ஏற்றினார். இதில் ஒருவர் பலியானார், 4 பேர் காயம் அடைந்தனர்.
13 ஆண்டுகளாக ஜவ்வாக இழுத்துக் கொண்டிருந்த இந்த வழக்கில் சல்மான் கானுக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து மும்பை செஷன்ஸ் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. தீர்ப்பு கிடைத்த 3 மணிநேரத்திற்குள் சல்மான் மும்பை உயர் நீதிமன்றத்தில் இடைக்கால ஜாமீன் பெற்று வீட்டுக்கு சென்றுவிட்டார்.

தீர்ப்பின் நகல் கிடைக்கும் முன்பே சல்மான் ஜாமீன் கோரியதால் மும்பை உயர் நீதிமன்றம் அவருக்கு 2 நாட்கள் இடைக்கால ஜாமீன் வழங்கியது. இந்நிலையில் தீர்ப்பின் நகல் கிடைத்துள்ளதையடுத்து இன்று சல்மானின் ஜாமீன் மனு மீது விசாரணை நடத்தப்படும் என்று கூறப்பட்டது. அதன்படி இன்று மனு மீதான விசாரணை நடந்தது.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி அபய் திப்சே சல்மான் கான் சரமாரியாக கேள்விகளை எழுப்பினார். விபத்து நடந்தபோது காரில் இருந்த பாடகர் கமால்கானை ஏன் அரசுத் தரப்பு விசாரிக்கவில்ல என்று அவர் கேள்வி எழுப்பினார். மேலும், இந்த வழக்கை சாதாரண விபத்தாக ஏன் அரசுத் தரப்பு கருதாமல், Culpable Homicide6 என வழக்குப் பதிவு செய்தது என்றும் கேள்வி எழுப்பினார்.
சல்மான் கான் தரப்பிலும் சில முக்கியமான வாதங்கள் முன் வைக்கப்பட்டன. கமால்கான் விசாரிக்கப்படவில்லை என்பது அதில் ஒன்று. மேலும் முக்கிய சாட்சியான ரவீந்திர பாட்டீலின் சாட்சியம் செயற்கையானது என்றும் வாதிடப்பட்டது.
இதை அரசுத் தரப்பு மறுத்து வாதிட்டது. கமால்கானை விசாரிக்காமல் விட்டதற்கு தங்களிடம் காரணங்கள் உள்ளதாக அது வாதிட்டது.
இரு தரப்பு வாதத்தையும் கேட்ட நீதிபதி சிறை தண்டனையை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளார். மேலும் சல்மான் செஷன்ஸ் நீதிமன்றத்தில் சரண் அடைந்து வழக்கமான ஜாமீன் பெற்றுக் கொள்ளுமாறும் நீதிபதி தெரிவித்துள்ளார்.
இதனால் சல்மான் செஷன்ஸ் நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி புதிய மனுவை தாக்கல் செய்ய வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. தண்டனையை ரத்து செய்யக் கோரிய சல்மானின் மனு மீதான இறுதி விசாரணை வரும் ஜூலை மாதம் நடைபெறும்.


Click it and Unblock the Notifications
