"மிரட்டல்.." பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக் கானிடம் அத்துமீறல்? ஆர்யன் கானால் ஏற்பட்ட பிரச்னை! பகீர்
மும்பை: பாலிபுட் சூப்பர் ஸ்டார் ஷாருக் கான் மிரட்டப்பட்ட தகவல் இணையத்தில் வெளியாகி பகீர் கிளப்பியுள்ளது. இது குறித்து சிபிஐ வழக்குப்பதிவு செய்துள்ளது.
மும்பையில் இருந்து கோவாவுக்குச் சென்ற சொகுசு கப்பலில் கடந்த 2021 அக். மாதம் போதைப் பொருட்களைப் பயன்படுத்தி ரேவ் பார்டி எனப்படும் பார்டி நடப்பதாகத் தகவல் வந்த நிலையில், என்சிபி அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
அங்கே கப்பலில் வைத்து ஷாரூக் மகன் ஆர்யன் கான் உட்பட 20 பேர் இதில் முதலில் கைது செய்தனர். இதில் ஆர்யன் கான் சில வாரங்கள் வரை சிறையில் இருக்க நேர்ந்தது. அதன் பின்னரே அவர் ஜாமீனில் வெளியே வந்தார்.

ஆர்யன் கான்: இந்த விசாரணையில் அடுக்கடுக்காக பல சம்பவங்கள் நடந்தன. மேலும் ஆர்யன் கானை வழக்கை முறையாக விசாரணை செய்யவில்லை என்று கூறி சில அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதற்கிடையே போதைப்பொருள் வழக்கில் தனது மகன் ஆர்யன் கானை விடுவிக்கப் பாலிவுட் நடிகர் ஷாருக் கானை மிரட்டி, ரூ. 25 கோடி தருமாறு மிரட்டியதாக சிபிஐ வழக்குப் பதிவு செய்துள்ளது.
இந்த வழக்கில் சுயேட்சை சாட்சியான கே.பி.கோசாவி என்பவர் ஆர்யன் கானுடன் எடுத்த செல்பி டிரெண்டானது. கே.பி.கோசாவி என்ற இவர், அப்போதைய என்சிபி மண்டல இயக்குநர் சமீர் வான்கடே சார்பில் ஷாருக்கானிடம் இருந்து ரூ.25 கோடி கேட்டு மிரட்டியுள்ளார். சிபிஐயின் எப்ஐஆரில் இவரது பெயரும் சேர்க்கப்பட்டுள்ளது.
2008 பேட்ச் ஐஆர்எஸ் அதிகாரியான சமீர் வான்கடே, என்சிபியின் கண்காணிப்பாளர் வி.வி சிங் மற்றும் ஆர்யன் கான் போதைப்பொருள் வழக்கின் அப்போதைய புலனாய்வு அதிகாரி ஆஷிஷ் ரஞ்சன் ஆகியோர் மீதும் கே.பி.கோசாவி மற்றும் அவரது கூட்டாளி டிசோசா ஆகியோர் மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்துள்ளது. போதைப்பொருள் கடத்தல் வழக்கில் ஆர்யன் கானை சிக்க வைக்காமல் இருக்க வான்கடே உள்ளிட்ட அதிகாரிகள் 25 கோடி ரூபாய் லஞ்சம் கேட்டதாக சிபிஐ தெரிவித்துள்ளது.
லஞ்சம்: இது குறித்து சிபிஐ பதிவு செய்துள்ள எப்ஐஆரில், "என்சிபியின் அப்போதைய மண்டல இயக்குநர் சமீர் வான்கடே மற்றும் விசாரணை அதிகாரி உள்ளிட்டோர் கே.பி.கோசாவி மற்றும் பிரபாகர் சைல் ஆகியோரை வைத்து மிரட்டி லஞ்சம் வாங்க முயன்றுள்ளனர்" என்று கூறப்பட்டுள்ளது.
போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பணியகத்தின் சிறப்பு விசாரணைக் குழு நடத்திய விசாரணையில், குற்றம் சாட்டப்பட்ட நபர்கள் (ஆர்யன் கான் உள்ளிட்டோர்) கோசாவிக்கு சொந்தமான வாகனத்தில் அலுவலகத்திற்குக் கொண்டு வரப்பட்டதும் தெரியவந்துள்ளது.

எதற்காக: மேலும் அதில், "சுயேச்சையான சாட்சியான கே.பி. கோசாவி கைது செய்யப்பட்டவர்களைச் சுற்றி இருப்பது போன்ற சூழலே வேண்டுமென்றே உருவாக்கியதாகத் தெரிகிறது. சுயேச்சை சாட்சிகள் சோதனைக்குப் பிறகு என்சிபி அலுவலகத்திற்கு வரவும் அனுமதிக்கப்பட்டார், இது சுயேச்சை சாட்சிக்கான விதிமுறைகளுக்கு எதிரானது. அவர்களும் என்சிபி அதிகாரிகள் என்பதைப் போன்ற தோற்றத்தை ஏற்படுத்தவே அவர்கள் இப்படிச் செய்துள்ளனர்" என்றனர்.
இதன் மூலம் கே.பி.கோசாவி மற்றும் அவரது உதவியாளர் சான்வில் டிசோசா ஆகியோர் தங்களை என்சிபி அதிகாரிகள் என்று கூறிக் கொண்டு ஷாருக் தரப்பை மிரட்டி ரூ.25 கோடியைக் கேட்டுள்ளனர். இறுதியாக ரூ.18 கோடிக்கு செட்டிலாகியுள்ளனர். அதில் லஞ்சப் பணமாக முதலில் ரூ.50 லட்சத்தை கே.பி.கோசாவி மற்றும் அவரது உதவியாளர் சான்வில் டிசோசா ஆகியோர் பெற்றுக்கொண்டனர், ஆனால் பின்னர் இந்த ரூ.50 லட்சம் லஞ்சப் பணம் திரும்ப தரப்பட்டதாக எப்ஐஆரில் கூறப்பட்டுள்ளது.
மேலும், சமீர் வான்கடே தனது வெளிநாட்டுப் பயணங்களைச் சரியாக விளக்கவில்லை என்றும், அவரது வெளிநாட்டுப் பயணங்களுக்கான செலவைத் தவறாக அறிவித்ததாகவும் என்சிபியின் விஜிலென்ஸ் கிளை தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications