வறுமையின் கொடுமை... திருடிய மகனை இரும்புக் கம்பியால் அடித்துக் கொன்ற தாய்!
அகமதாபாத்: திருட்டுக் குற்றத்தில் ஈடுபட்டதற்காக தனது 12 வயது மகனை அடித்துக் கொன்ற தாயை குஜராத் போலீசார் கைது செய்துள்ளனர்.
மேற்கு வங்க மாநிலம், கொல்கத்தா நகரை சேர்ந்தவர் ஷகினா(30). கணவரை இழந்த ஷகினா தனது 3 ஆண் குழந்தைகளுடன் குஜராத் மாநிலத்தில் உள்ள ராஜ்கோட் மாவட்ட மருத்துவமனை வளாகத்தை ஒட்டியுள்ள லைன் பகுதியில் கடந்த 9 ஆண்டுகளாக வசித்து வருகிறார்.
கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஷகினாவின் 12 வயது மகன் சலீம் மீது, அப்பகுதியில் உள்ள கடை ஒன்றில் திருடி விட்டதாக புகார் கூறப்பட்டது. வறுமையிலும் நேர்மையாக வாழ ஆசைப்பட்ட ஷகினாவிற்கு, சலீமின் செய்லை ஆத்திரத்தை வரவழைத்தது.

கோபத்தில் தனது வீட்டில் கிடந்த இரும்புக் கம்பியால் சலீமை கடுமையாக அடித்துள்ளார் ஷகினா. இதில் பலத்த காயமடைந்த சலீம், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தான்.
இதைக் கண்டு பதறிப்போன ஷகினா, திருத்த முயன்று ஆத்திரத்தில் பெற்ற மகனையே அடித்துக் கொன்று விட்டோமே என மனம் வெதும்பினார். ஆனால், இந்த குற்றத்திற்காக சிறைக்கு சென்றால், தனது மற்ற இரண்டு மகன்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகுமே என அவர் கவலைப் பட்டுள்ளார்.
எனவே, வீட்டில் இருந்த பெரிய சூட்கேஸில் சலீமின் சடலத்தை அவர் அடைத்தார். பின்னர் அதை எங்காவது புதைத்து விடலாம் என்ற நோக்கத்தில் அவர் வீட்டிலிருந்து கிளம்பியுள்ளார். கையில் மிகப்பெரிய சூட்கேஸோடு, சென்ற ஷகினா மீது சந்தேகம் கொண்ட அப்பகுதி மக்கள், இது தொடர்பாக போலீசில் புகார் அளித்தனர்.
இதனையடுத்து, விரைந்து வந்த போலீசார், ஷகினாவைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications