ஐசியுவில் அம்மா.. தாய்ப்பாலுக்காக அழுத குழந்தை.. நொடி கூட யோசிக்காத பெண் போலீஸ்.. நெகிழ்ச்சி
கொச்சி : கேரள மாநிலம் எர்ணாகுளம் அரசு மருத்துவமனையில் ஒரு பெண் நோயாளியாக அனுமதிக்கப்பட்டிருந்தார். அவரது குழந்தை பசியால் அழுது கொண்டே இருந்த நிலையில், அந்த குழந்தைக்கு பெண் போலீஸ் ஒருவர் தாய்ப்பால் ஊட்டினார். இந்த கேள்விப்பட்டு கேரள மக்கள் பலரும் அந்த பெண் போலீஸை பாராட்டி வருகிறார்கள்.
பீகார் மாநிலம் பாட்னாவை சேர்ந்த தம்பதி கேரள மாநிலம் கொச்சியில் உள்ள முழுங்காடு பகுதியில் வசிக்கிறார்கள். இந்த தம்பதிக்கு 4 மாத பெண் குழந்தை உள்பட 4 குழந்தைகள் இருக்கிறார்கள். இதில் கணவர் ஒரு வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார். அந்த பெண் தான் 4 குழந்தைகளையும் கவனித்து வந்திருக்கிறார்.

இதய நோயாளியான அந்த பெண்ணுக்கு திடீரென்று நேற்று முன்தினம் மூச்சுத்திணறல் ஏற்பட்டிருக்கிறது. உடனே அந்த பெண் தனது 4 குழந்தைகளுடன் எர்ணாகுளம் அரசு மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் உடனே அவரை அவசர சிகிச்சை பிரிவில் சேர்த்தனர். தந்தை சிறையில் உள்ள நிலையில் தாய், மருத்துவமனையில் சிகிச்சை பெறுவதால், 4 குழந்தைகளையும் கவனித்து கொள்ள ஆள் இல்லாத நிலை உருவானது. இதையடுத்து மருத்துவமனை ஊழியர்கள் இது குறித்து கொச்சி போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு நிலைமையை எடுத்துக்கூறி உதவி செய்ய அழைத்தனர்.
இதையடுத்து உடனடியாக பெண் சப்-இன்ஸ்பெக்டர் ஆனிசிவா தலைமையில் மகளிர் போலீசார் எர்ணாகுளம் அரசு மருத்துவமனைக்கு வந்தனர். அப்போது 13 வயதான சிறுமியின் கையில் இருந்த 4 மாத பெண் குழந்தை பசியால் தொடர்ந்து அழுது கொண்டே இருந்தது.
இதை கவனித்த ஆர்யா என்ற பெண் காவலர், அந்த குழந்தை பசியில்தான் அழுகிறது என்பதை புரிந்துகொண்டு, எதை பற்றியும் யோசிக்கமால் உடனே குழந்தையை வாங்கி தாய் பால் ஊட்டி தாயாக மாறினார். அந்த குழந்தையை மடியில் வைத்து பால் கொடுக்க தொடங்கினார். சிறிது நேரத்தில் அந்த குழந்தையின் அழுகை நின்றது. அதன்பிறகு அந்த குழந்தை சிரிக்கத் தொடங்கியது. அப்போது சக போலீசார் மகிழ்ச்சி அடைந்தனர். இதுபற்றி சமூக ஊடகங்களில் செய்திகள் வெளியான நிலையில், கேரள மக்கள் பலரும் பெண் காவலர் ஆர்யாவை பாராட்டினர்.
யார் இந்த பெண் காவலர் ஆர்யா: பெண் காவலர் ஆர்யாவிற்கு திருமணம் ஆகி 2 குழந்தைகள் உள்ளனர். இவரது கணவர் பிரதீப். இவர்களது சொந்த ஊர் கோட்டயம் மாவட்டம் வைக்கத்தை சேர்ந்த அக்கரப் பாடம் ஆகும். கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு பணியில் சேர்ந்த ஆர்யாவின் இளைய குழந்தைக்கு 9 மாதம் ஆகிறது. பிரசவ விடுப்பிற்கு பிறகு கடந்த 3 மாதத்திற்கு முன்புதான் அவர் பணியில் சேர்ந்தார்.
"குழந்தையின் அழுகுரலை என்னால் தாங்கி கொண்டு நிற்க முடியவில்லை" அதனால் பால் ஊட்டியதாக காவலர் ஆர்யா ஊடகங்களிடம் தெரிவித்தார். இதனிடையே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பெண்ணின் குழந்தைகள் காப்பகத்திற்கு கொண்டு செல்லப்பட்டன. தாய்மை தான் இந்த உலகில் சிறந்தது என்பதை நிரூபிக்கும் பல சம்பவங்கள் நடந்து வருகிறது. அந்த வகையில் கேரளாவில் நடந்துள்ள இந்த சம்பவம் பலரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.












Click it and Unblock the Notifications