தூய்மை இந்தியாவின் மறுபக்கம்...பப்ளிக் டாய்லெட் உடைந்து உயிரோடு சமாதி ஆன பெண்... மும்பையில்!
மும்பை: மும்பை அருகே பொதுக் கழிவறைக்குச் சென்ற ஒரு பெண், அந்த டாய்லெட்டின் தரைப்பகுதி உடைந்ததில் கழிவுகளில் சிக்கி உயிரோடு சமாதி ஆன பரிதாப சம்பவம் நடந்துள்ளது.
மும்பை மான்கூர்டு, மகாராஷ்டிரா நகர் கோய்னா தெருவில் மாநகராட்சி பொது கழிவறை ஒன்று உள்ளது. இந்த கழிவறையை ‘பஞ்சமுகி சமாஜிக் சேவா சன்ஸ்தா' என்ற அமைப்பு குத்தகைக்கு எடுத்து நடத்தி வருகிறது.

இந்நிலையில், அதே பகுதியில் உள்ள சாய்பாபா தெருவை சேர்ந்த கல்பனா பிம்பளே (40) என்ற பெண், நேற்று காலை 6 மணி அளவில் இந்த கழிவறைக்கு சென்றுள்ளார். உள்ளே சென்ற அவர் நீண்ட நேரமாகியும் வெளியே வராததால், கழிவறைக்கு வெளியே வரிசையில் காத்திருந்த பெண்கள் சந்தேகமடைந்தனர்.
உள்ளே இருந்து எந்த சத்தமும் வராததால், கழிவறையின் கதவை அவர்கள் உடைத்துப் பார்த்துள்ளனர். அப்போது அங்கே கழிவறை இருந்த இடத்தில் பெரிய பள்ளம் இருந்துள்ளது. கல்பனாவையும் காணவில்லை.
இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த பெண்கள், உடனடியாக தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் கழிவுநீர்த் தொட்டிக்குள் மூழ்கிய கல்பனாவை மீட்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்.
உறிஞ்சு லாரிகள் மூலம் தொட்டியில் இருந்த நீர் உறிஞ்சி வெளியே எடுக்கப் பட்டது. அப்போது கழிவுநீர் தொட்டிக்குள் 20 அடி ஆழத்தில் கல்பனாவின் சடலம் கிடப்பது கண்டுபிடிக்கப்பட்டது. சுமார் 5 மணி நேரப் போராட்டத்திற்குப் பின் கல்பனாவின் சடலத்தை தீயணைப்புத் துறையினர் போராடி மீட்டனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மான்கூர்டு போலீசார் கல்பனாவின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ராஜவாடி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
பொது கழிவறை முறையாக பராமரிக்கப்படாததே கல்பனா பலியானதற்கு முக்கிய காரணம் என அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். தூய்மை இந்தியா, கழிவறை விழிப்புணர்வு போன்றவற்றிற்கு மத்திய அரசு முக்கியத்துவம் அளித்து வரும் நிலையில், கழிவறையில் பெண் ஒருவர் உயிரோடு சமாதி ஆன சம்பவம் பொது கழிவறையை பயன்படுத்திவரும் குடிசைவாசிகளுக்கு பெரும் அச்சத்தையும், பீதியையும் ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications