பெற்றோரை ஏமாற்றி.. ஆணாக நடித்து தோழியைத் திருமணம் செய்த உ.பி. பெண்!
தோழியை திருமணம் செய்வதற்காக இளம்பெண் ஒருவர் ஆணாக நடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆக்ரா: உத்தரப்பிரதேசத்தில் இளம்பெண் ஒருவர் ஆணாக நடித்து, தனது காதலியைத் திருமணம் செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரபிரதேச மாநிலம் ஆக்ராவைச் சேர்ந்த இரண்டு இளம்பெண்கள் கடந்த சில வருடங்களாக காதலித்து வந்துள்ளனர். இந்தியாவில் ஒருபாலினத் திருமணம் சட்டப்படி செல்லாது என்பதால், அவர்கள் திருமணம் செய்து கொள்வதில் சிக்கல் ஏற்பட்டது. எனவே, ஊரை ஏமாற்றித் திருமணம் செய்து கொள்ள அவர்கள் முடிவெடுத்தனர்.

அதனைத் தொடர்ந்து இரண்டு பெண்களில் ஒருவர் மணமகனாக மாறியுள்ளார். மேலும் அப்பெண் தனது பெயரையும் கார்த்திக் சுக்லா என மாற்றிக்கொண்டார். அதற்கான ஆதார்கார்டு உட்பட பல போலி ஆதாரங்களையும் அவர் உருவாக்கியுள்ளார்.
போலியான பெற்றோரின் உதவியுடன் ஒரு பெரிய இலவச திருமண விழாவில் இளம்பெண்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். மகளின் காதல் திருமணத்தை ஏற்றுக் கொண்ட மணமகளின் பெற்றோர், மாப்பிள்ளைக்கு விருந்து வைக்க விரும்பியுள்ளனர்.
அதனைத் தொடர்ந்து இருவரும் மணமகளின் வீட்டில் தங்கியுள்ளனர். அப்போது மணமகனின் நடவடிக்கையில் மணமகளின் பெற்றோருக்கு சந்தேகம் ஏற்பட்டது. தொடர்ந்து மேற்கொண்ட விசாரணையில் தான் ஒரு பெண் என்பதை மணமகனாக நடித்தவர் ஒப்புக் கொண்டார்.
இதனால் அதிர்ச்சியடைந்த அப்பெண்ணின் பெற்றோர், இரண்டு பெண்களையும் வீட்டில் அடைத்து வைத்து அடித்து சித்ரவதை செய்துள்ளனர். இருவீட்டாரும் ஒருவர் மீது ஒருவர் தங்களை ஏமாற்றிவிட்டதாக குற்றம்சாட்டிள்ளனர்.
இந்த விவகாரம் போலீசாரின் காதுகளை எட்டியது. விரைந்து வந்த போலீசார், இரண்டு பெண்களையும் அங்கிருந்து மீட்டனர்.
இது தொடர்பாக இருவீட்டார் சார்பிலும் போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. ஆனபோதும், சம்பந்தப்பட்ட இரண்டு பெண்களும் 20 வயதுக்கு மேற்பட்டவர்கள் என்பதால் அவர்களைப் பிரிந்து வாழ வற்புறுத்த இயலாது என போலீசார் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications