தடை விதித்த தேர்தல் ஆணையம்.. மம்தாவின் பக்கம் நின்ற ஸ்டாலின், சிவசேனாவும் ஆதரவு
கொல்கத்தா: மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி மீது தேர்தல் ஆணையம் 24 மணி நேர பிரசார தடையை விதித்ததற்கு, திமுக தலைவர் முக ஸ்டாலின் மற்றும் சிவசேனா கட்சியின் மூத்த தலைவர் சஞ்சய் ராவத் ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இந்த விவகாரத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவரான மம்தாவிற்கு ஆதரவாக குரல் எழுப்பியுள்ள எதிர்க்கட்சி தலைவர்கள், பாஜகவின் உத்தரவின் பேரில் தேர்தல் ஆணையம் செயல்படுவதாக குற்றம்சாட்டி உள்ளனர்.
மம்தா பானர்ஜியை 24 மணி நேரம் பிரச்சாரம் செய்ய தடை விதிக்க தேர்தல் ஆணையம் எடுத்த முடிவு பாஜகவின் உத்தரவின் பேரில் எடுக்கப்பட்டது என சிவசேனா எம்.பி. சஞ்சய் ரவுத் குற்றம் சாட்டி உள்ளார்.. இது "ஜனநாயகம் மீதான நேரடி தாக்குதல்" மற்றும் நாட்டின் சுயாதீன அமைப்பான தேர்தல் ஆணையத்தின் இறையாண்மை மீதான் தாக்குதல் என்று சஞ்சய் ராவத் தனது ட்வீட்டில் தெரிவித்துள்ளார்.

தேர்தல் ஆணையம்
திமுக தலைவர் மு.க.ஸ்டாலினும் மம்தாவிற்கு ஆதரவு தெரிவித்துள்ளார். ஸ்டாலின் தனது ட்வீட்டில் "நமது ஜனநாயகத்தின் மீதான நம்பிக்கை சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தல்களில் தான் அடங்கி உள்ளது. இந்திய தேர்தல் ஆணையம் அனைத்து கட்சிகளுக்கும் வேட்பாளர்களுக்கும் சரியான களத்தை உறுதிசெய்து பக்கச்சார்பற்ற தன்மையையும் நடுநிலையையும் பேணுவதை உறுதி செய்ய வேண்டும். " என்றார்.

கொல்கத்தாவில் போராட்டம்
இதற்கிடையில், மம்தா பானர்ஜி தனது பிரச்சாரத்திற்கு 24 மணி நேர தடை விதிக்க தேர்தல் ஆணையத்தின் உத்தரவை எதிர்த்து இன்று கொல்கத்தாவில் காந்தி சிலை முன்பு தர்ணா நடத்தினார்.

கூச் பெஹார் துப்பாக்கிச் சூடு
"நான்கு நிராயுதபாணியான பொதுமக்கள்" உயிரைக் கொன்ற கூச் பெஹார் துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக எரிச்சலூட்டும் கருத்துக்களைக் கூறிய பாஜக தலைவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையத்தை திரிணாமுல் காங்கிரஸ் நேற்று வலியுறுத்தியது.. மேற்கு வங்க தலைமை தேர்தல் அதிகாரி அரிஸ் அப்தாப்க்கு எழுதிய கடிதத்தில், கட்சி மாநில திலீப் கோஷ் உட்பட பல பாஜக தலைவர்கள், கூச் பெஹார் போன்ற விஷயங்களை பற்றி வன்முறையை "தூண்டுகிறார்கள்" என்று கூறப்பட்டிருந்தது.

ராகுல் சின்ஹா
இந்த சூழலில் பாஜக மாநில தலைவர் ராகுல் சின்ஹா "மத்திய படைகள் கூச் பெஹாரில் நான்கு பேருக்கு பதிலாக எட்டு பேரைக் கொன்றிருக்க வேண்டும்" என்று கூறியிருந்தார். இந்த கருத்துக்களுக்காக ராகுல் சின்ஹா 48 மணி நேரம் பிரச்சாரம் செய்வதற்கு தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது.












Click it and Unblock the Notifications