சாமானிய மக்களின் வாழ்வாதாரத்திற்கு முக்கியத்துவம்! அசத்தும் உத்தரப் பிரதேச யோகி ஆதித்யநாத் அரசு
லக்னோ: உத்தரப் பிரதேசத்தில் சாமானிய மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் சமாஜ்வாதி ஆட்சியை விட பாஜக ஆட்சி சிறப்பாக செய்து கொடித்திருப்பதாக முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் கூறியுள்ளார்.
உத்தரப் பிரதேசத்தின் முதலமைச்சராக யோகி ஆதித்யநாத் பொறுப்பேற்று 6 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில் இதனை பாஜக சிறப்பாக கொண்டாடி வருகிறது. ஆனால், உத்தரப் பிரதேசத்தில் நிலவி வரும் வேலையின்மை, உட்கட்டமைப்புகளில் உள்ள குளறுபடிகள், சாதி, மத பிரச்னைகளை எதிர்க்கட்சிகள் தீவிரமான விமர்சனமாக முன்வைத்து வருகின்றன. இந்த நிலையில்தான் யோகி ஆதித்யநாத் மேற்குறிப்பிட்டவாறு கூறியுள்ளார்.

இது குறித்து பேசிய அவர், "உத்தரப் பிரதேசத்தில் அடிப்படை கட்டமைப்பு வசதிகள் சிறப்பான அளவில் மேம்படுத்தப்பட்டுள்ளன. ஆனால் இதில் சில குளறுபடிகள், சில பிரச்னைகள் இருக்கிறது என்பதை மறுக்கமுடியாது. ஆனால், இந்த குறைகள் அனைத்தும் உடனுக்கு உடன் சரி செய்யப்பட்டு வருகின்றன. உத்தரப் பிரதேசத்தை பொறுத்த அளவில் இங்கு யாருக்கும் வீடு இல்லை என்கிற நிலை இருக்கக்கூடாது. ஆகவே அனைவருக்கும் வீடு என்பதை உறுதி செய்திட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன்.
விரைவில் உத்தரப் பிரதேச மாநிலத்தில் அனைவருக்கும் சொந்த வீடு உறுதி செய்யப்படும். அதேபோல நீங்கள் கொடுத்த மனுக்களில் சாலை வசதிகள் குறித்து குறிப்பிட்டுள்ளீர்கள். அனைத்து ஊரக பகுதிகளிலும் தரமான சாலை அமைக்கப்படுவதை உத்தரப் பிரதேச அரசு உறுதி செய்து வருகிறது. எனவே இது குறித்து நீங்கள் கவலைப்படத் தேவையில்லை. அதேபோல அதிக அளவிலான மின் கட்டணம் குறித்து பெண் ஒருவர் மனு கொடுத்திருக்கிறார். அவருக்கு தவணை முறையில் மின் கட்டணம் செலுத்த அனுமதியளிக்கப்பட்டுள்ளது. அதேபோல அவருடைய மின் கட்டணத்தை குறைக்கவும் ஆலோசிக்கப்பட்டு வருகிறது" என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications