காங்கிரசுக்கு எதிரான மோடியின் முகமூடி சு. சுவாமி.. பங்களா ஒதுக்கியதற்காக காங்கிரஸ் பாய்ச்சல்
டெல்லி: காங்கிரசுக்கு எதிராக கோர்ட்டில் வழக்கு போட்டதற்காகவே முன்னாள் அமைச்சர் சுப்பிரமணியன் சுவாமிக்கு அரசு பங்களாவும், இசெட் பிளஸ் பாதுகாப்பும் வழங்கப்பட்டுள்ளதாக காங்கிரஸ் எம்.பி, குலாம் நபி ஆசாத் குற்றம்சாட்டினார். எதிர்க்கட்சிகள் இல்லாத இந்தியாவை உருவாக்கும் சதி திட்டம் பாஜகவிடம் இருப்பதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.
சுப்பிரமணியன் சுவாமி தொடர்ந்த நேஷனல் ஹெரால்ட் வழக்கில், காங்கிரஸ் மேலிட தலைவர்கள் சோனியா மற்றும் ராகுல் காந்தி சிக்கியுள்ளனர். இந்நிலையில், காங்கிரசார் கோபம் பாஜக மீதும் சுப்பிரமணியன் சுவாமி மீதும் திரும்பியுள்ளது.

டெல்லியில் குலாம்நபி ஆசாத் கூறியதாவது: எங்களுக்கு நீதியில் நம்பிக்கையுள்ளது. சுப்ரீம்கோர்ட்டில் நேஷனல் ஹெரால்ட் வழக்கில், நல்ல தீர்ப்பு கிடைக்கும்.
அதேநேரம், எம்.பியாகவோ அல்லது வேறு எந்த பதவியிலும் இல்லாத சுப்பிரமணியன் சுவாமிக்கு, தீவிரவாதிகளால் அச்சுறுத்தல் இருப்பதாக கூறி மத்திய அரசு இசெட் பிளஸ் பாதுகாப்பை தொடரச் செய்துள்ளதோடு, அரசு பங்களாவையும் வழங்கியுள்ளது. இது தேவையற்ற செயல்.
காங்கிரஸ் தலைவர்கள் மீது வழக்கு தொடர்ந்ததற்கு பரிசாகவே பங்களா கொடுக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் தலைமையை மோடி குறி வைக்கிறார். மோடி கூறியபடியே சுப்பிரமணியன் சுவாமி நடந்துகொண்டிருப்பது உறுதியாகிறது. மோடியின் முகமூடி சு.சுவாமி. இருப்பினும், எங்களை மவுனிக்க செய்ய முடியாது.
காங்கிரஸ் இல்லாத பாரதத்தை உருவாக்குவோம் என்று பாஜக கோஷத்தை முன்வைத்தது. தற்போது, எதிர்க்கட்சி இல்லாத பாரதத்தை உருவாக்குவோம் என்று அந்த கோஷம் விரிவடைந்திருக்கிறது. நாடு முழுவதும் எதிர்க்கட்சிகள் குறி வைக்கப்படுகிறார்கள். இவ்வாறு அவர் தெரிவித்தார். மக்களவை எதிர்க்கட்சி குழு தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவும் அப்போது உடனிருந்தார்.
காங்கிரஸ் ஆட்சி காலத்திலும், சுப்பிரமணியன் சுவாமிக்கு, இசெட் பிளஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications