அச்சுறுத்தும் அமெரிக்கா: அதிகரிக்கும் துப்பாகிச் சூடுகள்- சிகாகோவில் 14 பேர் பலி
சிகாகோ: சிகாகோவில் துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் அதிகரித்த வண்ணம் உள்ளன. அங்கு துப்பாக்கிச்சூடுகளை தடுக்க போலீசார் குவிக்கப்பட்டிருந்தாலும் கூட அதையும் மீறி, அங்கு 14 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
சிகாகோவில் கடந்த வாரங்களில் ஐம்பதுக்கும் மேற்பட்ட துப்பாக்கி சூடு சம்பவங்கள் நடைபெற்றன. இதில் 14 பேர் கொல்லப்பட்டனர். ஏராளமானோர் படுகாயம் அடைந்துள்ளனர்.

நேற்று நடந்த மற்றொரு துப்பாக்கி சூடு சம்பவத்தில் 9 பேர் கொல்லப்பட்டனர். இச்சம்பவம் குறித்து கடும் கண்டனம் தெரிவித்துள்ள காவல்துறை கண்காணிப்பாளர் கார்ரி மெக்கார்த்தி, துப்பாக்கிகளின் எண்ணிக்கை அதிகரித்ததே இதற்கு காரணம் என்று கூறியுள்ளார்.
"விடுமுறை என்ற போதிலும் கிட்டதட்ட 100க்கும் மேற்பட்ட காவல் அதிகாரிகள் பணியில் ஈடுபட்டிருந்தனர். ஆனாலும், இத்தகைய நிலைமை ஏற்பட்டுள்ளது. இதனால் காவல்துறை மேல் குற்றம் சாட்டுவதை ஏற்றுக்கொள்ள முடியாது" எனவும் தெரிவித்துள்ளார்.
மேலும் துப்பாக்கிச் சூடு நடத்தியவர்களை நோக்கி போலீஸார் திருப்பி சுட்டதில் 5 பேர் கொல்லப்பட்டனர் என சிகாகோ செய்தித்தாள் செய்தி வெளியிட்டுள்ளது.
இந்த துப்பாக்கிச் சூடு சம்பவங்களால் சிகாகோவில் பெரும் பதட்டம் நிலவி வருகின்றது. மேலும், இதுபோன்ற சம்பவங்கள் விடுமுறை தினங்களில்தான் அங்கு அதிகமாக நடப்பதாகக் கூறப்படுகின்றது.
இதேபோன்ற விடுமுறை தினத்தில்தான் கடந்த வருடமும் துப்பாக்கிச் சூட்டினால் 46 பேர் உயிரிழந்தனர். இதனால் விடுமுறை தினங்கள் என்றாலே சிகாகோ மக்கள் பீதியில் உறைந்து போகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications