இந்தியாவிடம் தோற்க சூனியம் தான் காரணம்.. பாகிஸ்தான் சேனலில் கதறிய நபர்.. என்னென்ன சொல்றாரு பாருங்க
இஸ்லாமாபாத்: சாம்பியன் டிராபி போட்டியில் இந்தியாவுக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் தோற்றதற்கு 22 பண்டித்கள் மைதானத்தில் சூனியம் வைத்தது தான் காரணம் என்று அந்த நாட்டின் செய்தி சேனல் ஒன்றில் நடந்த விவாதத்தில் கூறப்பட்டுள்ளது. இந்த வீடியோ தற்போது வெளியாகி உள்ள நிலையில் அந்த நபரை பலரும் ட்ரோல் செய்து வருகின்றனர்.
இந்த ஆண்டு சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டியை பாகிஸ்தான் ஏற்று நடத்தி வருகிறது. இந்த தொடரில் மொத்தம் 8 அணிகள் பங்கேற்றுள்ளன. தலா 4 அணிகளுடன் குரூப் ஏ, குரூப் பி என்று பிரிக்கப்பட்டுள்ளது. இதில் இந்தியா தவிர மீதமுள்ள அனைத்து நாடுகளின் போட்டிகளும் பாகிஸ்தான் மைதானங்களில் நடந்து வருகிறது.

இந்திய வீரர்களின் பாதுகாப்பு கருதி நம் நாடு பங்கேற்கும் போட்டி மட்டும் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடந்து வருகிறது. முதல் போட்டியில் வங்கதேசத்தை வீழ்த்தி நம் நாடு, 2வது போட்டியில் பாகிஸ்தானையும் தோற்கடித்து அரையிறுதி போட்டிக்குள் முன்னேறி உள்ளது.
கடந்த 23ம் தேதி துபாய் மைதானத்தில் வைத்து இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதின. இதில் இந்தியா 6 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தானை இந்தியா வீழ்த்தியது. முதலில் பேட் செய்த பாகிஸ்தான் 241 ரன்களுக்கு ஆல்அவுட் ஆன நிலையில் நம் நாடு 42.3 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 244 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. விராட் கோலி 100 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் நின்று வெற்றியை உறுதி செய்தார்.
பாகிஸ்தான் முதலில் நியூசிலாந்து அணியிடம் தோற்றது. அதன்பிறகு நம் நாட்டுடன் தோல்வியடைந்துள்ளது. இதன்மூலம் பாகிஸ்தான் அணி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இருந்து வெளியேறி உள்ளது. போட்டியையே பாகிஸ்தான் தான் நடத்தும் சூழலில் அந்த நாடு வெளியேறி இருப்பதை பாகிஸ்தான் நாட்டு ரசிகர்களாக ஏற்றுக்கொள்ள முடியவில்லை. பாகிஸ்தான் வீரர்களை கண்டபடி விமர்சனம் செய்து வருகின்றனர்.
மேலும் இந்தியாவுடனான தோல்விக்கு முக்கிய காரணம் பாகிஸ்தான் வீரர்கள் சரியாக விளையாடாதது தான். இதனை பாகிஸ்தான் நாட்டின் முன்னாள் வீரர்கள் பலரும் ஒப்புக்கொண்டுள்ளனர். இதற்கிடையே தான் இப்போது பாகிஸ்தானின் தோல்விக்கு மைதானத்தில் இந்தியர்கள் வைத்த சூனியம் தான் காரணம் என்று அந்த நாட்டினர் கதற தொடங்கி உள்ளனர். அதேபோல் சாம்பியன் டிராபி போட்டியில் பாகிஸ்தான் தோற்று வெளியேறி இருப்பது தொடர்பாக அந்த நாட்டின் தொலைக்காட்சி சேனல்களில் விவாதம் என்பது நடந்து வருகிறது.
‛டிஸ்கவர் பாகிஸ்தான்' என்ற சேனலில் நடந்த விவாதத்தில் ஒருவர் கூறிய தகவல் தான் அனைவரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது. அதோடு அவர் சமூக வலைதளங்களில் ட்ரோல் செய்யப்பட்டு வருகிறார். ஏனென்றால், அந்த விவாதத்தில் அந்த நபர், ‛‛ பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இந்தியா வெற்றி பெற பூஜை, யாகங்கள் மற்றும் சூனியம் தான் காரணம்.
துபாய் மைதானத்தில் இந்தியா 22 பண்டித்களை வைத்திருந்தது. ஒரு வீரருக்கு 2 பண்டித்கள் என்று பிரித்து கொண்டனர். இவர்கள் வீரர்களின் கவனத்தை திசை திருப்பினர். இத்தகைய பண்டித்கள் பாகிஸ்தானுக்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்பது இந்தியாவுக்கு தெரியும். இதற்காக தான் இந்தியா, பாகிஸ்தானில் விளையாட மறுத்தது'' என கூறியுள்ளார். இந்த வீடியோ தற்போது இணையதளங்களில் வெளியாகி வருகிறது. அதனை பார்க்கும் பலரும் அந்த நபரை ட்ரோல் செய்ய தொடங்கி உள்ளனர்.












Click it and Unblock the Notifications