ஈக்வடாரில் பயங்கர நிலநடுக்கம்: பலி எண்ணிக்கை 41க உயர்வு.. சுனாமி எச்சரிக்கை
க்விட்டோ: ஈக்வடாரின் வடமேற்கு பகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 7.8 ஆக பதிவாகியிருந்த நிலநடுக்கத்தால் பலியானோர் எண்ணிக்கை 41 ஆக அதிகரித்துள்ளது. மேலும் சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.
ஈக்வடாரின் க்விட்டோ நகரில் இருந்து 173 கிலோமீட்டர் தொலைவில் வடமேற்கே உள்ள இடத்தை மையமாகக் கொண்டு 10 கிலோமீட்டர் ஆழத்தில் சனிக்கிழமை பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 7.8 ஆக பதிவாகியிருந்தது.

நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் இடிந்து விழுந்தன. இடிபாடுகளில் சிக்கி 28 பேர் பலியாகியுள்ளனர். ஈக்வடாரில் சனிக்கிழமை இரவு 11.58 மணிக்கு இரண்டு முறை நிலநடுக்கம் ஏற்பட்டது. முதல் நடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.8 ஆகவும், இரண்டாவது நடுக்கம் 7.8 ஆகவும் பதிவாகியிருந்தது.
இது குறித்து ஈக்வடாரின் துணை அதிபர் ஜார்ஜ் கிளாஸ் கூறுகையில்,
போர்டோவீஜோவில் 16 பேரும், மான்டாவில் 10 பேரும், கயாஸ் மாகாணத்தில் 2 பேரும் பலியாகியுள்ளனர். நிலநடுக்கம் ஏற்பட்ட இடத்தில் இருந்து 300 கிலோமீட்டருக்குள் உள்ள பகுதியில் பயங்கர சுனாமி ஏற்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது என்றார்.
இந்நிலையில் பலியானோர் எண்ணிக்கை 41 ஆக அதிகரித்துள்ளது. இத்தாலியில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த ஈக்வடார் அதிபர் ரபேல் கோரியா தனது பயணத்தை பாதியில் முடித்துக் கொண்டு நாடு திரும்புகிறார்.
ஜப்பானில் இரண்டு முறை நிலநடுக்கம் ஏற்பட்ட நிலையில் ஈக்வடாரிலும் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications