வெளிநாட்டில் வேலை.. டேட்டிங் ஆப்பில் ட்விஸ்ட்.. 53 பேர் கொத்தடிமையாக்கப்பட்ட கொடூரம்.. பகீர் பின்னணி
வியன்டின்: லாவோஸ் நாட்டுக்கு வேலை தேடிச் சென்ற இந்திய இளைஞர்களை டேட்டிங் ஆப்பில் பெண்கள் போல பேசி மோசடி செய்வதற்காக கொத்தடிமைகளாப் பயன்படுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து, மோசடி கும்பலிடம் இருந்து 47 இந்தியர்கள் மீட்கப்பட்டு இந்திய தூதரகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
வெளிநாட்டு வேலை, லட்சக்கணக்கில் சம்பளம் போன்ற விளம்பரங்களை நம்பி ஏராளமானோர் ஏமாற்றப்படும் சம்பவங்கள் இன்றளவும் நடந்துகொண்டுதான் இருக்கின்றன. அண்மைக்காலமாக ஆன்லைன் மோசடி கும்பல்களும் அதிகரித்து வருகின்றன. அப்படி வெளிநாட்டு வேலைக்குச் செல்லும் சிலரை சட்டவிரோத செயல்களுக்கு கொத்தடிமைகளாகப் பயன்படுத்தும் சம்பவங்களும் தொடர்ந்து அரங்கேறி வருகின்றன.

இந்நிலையில், இதுபோன்ற விளம்பரத்தை நம்பி லாவோஸ் நாட்டுக்கு வேலை தேடிச் சென்று ஆன்லைன் மோசடி கும்பலிடம் சிக்கிய 47 இந்தியர்கள் கொத்தடிமைகளாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் பதைபதைப்பை ஏற்படுத்தியுள்ளது. மீட்கப்பட்ட நபர்கள் இந்திய தூதரகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
லட்சக்கணக்கில் பணம் சம்பாதிக்க வேண்டும் என்கிற ஆசையில் இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு வேலைக்குச் செல்பவர்களை குறிவைத்து இந்த மோசடி கும்பல் செயல்படுகிறது. வேலை தேடி வருவோரின் பாஸ்போர்ட்டை பிடுங்கி வைத்து மிரட்டுவதாகவும், உணவு கொடுக்காமல் டேட்டிங் ஆப்பில் வேலை செய்ய சொல்வதாகவும் கூறப்படுகிறது.
டேட்டிங் ஆப்பில் பெண்களின் புகைப்படங்களை வைத்து போலி புரொபைல் உருவாக்கி அதன் மூலம் இந்தியாவைச் சேர்ந்தவர்களிடம் பெண்கள் போல பேச சொல்கின்றனர். பேச ஆரம்பித்து பின்னர் ஒருகட்டத்தில் கிரிப்டோகரன்சியில் முதலீடு செய்தால் நல்ல வருமானம் கிடைக்கும் என்று ஆசை வார்த்தைகளை கூறுகின்றனர். அதிக பணம் கிடைக்கும் என்று ஆசைப்படுபவர்கள் இந்த கும்பலின் மோசடியில் சிக்கி பணத்தை இழக்கின்றனர்.
இந்த வேலைக்கு டார்கெட்டும் உள்ளது. டார்கெட்டை முடிக்கவில்லை என்றால் சாப்பாடு, ஓய்வு அளிக்காமல் அடித்து துன்புறுத்தப்படுகின்றனர். இதுகுறித்து பாதிக்கப்பட்ட இந்தியர்கள் லாவோஸில் உள்ள இந்திய தூதரகத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். லாவோஸில் இருந்து கடந்த மாதத்தில் 13 பேர் மீட்கப்பட்டிருந்தனர்.
இதைத்தொடர்ந்து, லாவோஸ் நாட்டுக்குச் சென்ற மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர், இப்பிரச்னை குறித்து அந்நாட்டு அதிகாரிகளுடன் பேசினார். இதையடுத்து, லாவோஸ் நாட்டின் கோல்டன் டிரையாங்கில் சிறப்பு பொருளாதார மண்டலத்தில் அதிகாரிகள் தீவிர ஆய்வு மேற்கொண்டனர். அங்கு ஆன்லைன் குற்றங்களுக்கு கொத்தடிமைகளாக பயன்படுத்தப்பட்ட 29 பேரை மீட்டு இந்திய தூதரகத்தில் ஒப்படைத்தனர். அதேபோல, இந்திய தூதரகத்தில் புகார் செய்திருந்த 18 பேரும் மீட்கப்பட்டுள்ளனர்.
இச்சம்பவம் குறித்து லாவோஸில் உள்ள இந்திய தூதரகம் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள தகவலில் கூறியுள்ளதாவது: "வேலை தேடி லாவோஸ், கம்போடியாவுக்குச் செல்பவர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது. லாவோஸ், கம்போடியாவில் இணைய மோசடிக்குப் பயன்படுத்தப்பட்ட 635 இந்தியர்கள் மீட்கப்பட்டுள்ளனர்.
ரஷ்யாவில் வேலைக்கு சென்றவர்களை அந்நாட்டு அரசு உக்ரைன் போருக்காக ஏற்கனவே பயன்படுத்தி வருகிறது. அதில் சிலர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், அண்மையில் பிரதமர் மோடி ரஷ்யா சென்றிருந்தபோது அந்நாட்டு அதிபருடன் பேசி போர்க்களத்தில் உள்ள இந்தியர்களை விடுவிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications
